எங்கிருந்தோ வந்த பையன்

”டீ மீரா… விளையாடப் போலாமா?” என்று கேட்டாள் ரம்யா.
“எங்க வீட்டுல வேலை செய்யற ஆயாம்மாவுக்கு உடம்பு சரியில்ல. எங்க அம்மா ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போயிருக்காங்க. அவங்க வர்ற வரைக்கும் வெளிய வர முடியாதுடி” என்று தயங்கினாள் மீரா.
“அவங்களுக்கு லீவு கொடுத்து அனுப்பிட வேண்டியது தானே? அதுக்காக ஆஸ்பத்திரி வரைக்கும் போகணுமா? தேவையில்லாத வேலை” என்று முகம் சுளித்தாள் ரம்யா.
“நாம பலன் எதிர்பார்க்காம உதவி செஞ்சா நமக்கு நல்லதே நடக்குமாம். எங்க அப்பா சொல்வாரு” என்றாள் மீரா.
இது போலத்தான் அவர்கள் இருவருக்கும் அடிக்கடி விவாதம் நடக்கும். இருவருக்கும் அடுத்தடுத்த வீடு.. ஒரே வகுப்பு. ஆனால், அவர்களுக்குள் ஒரு வித்தியாசம் உண்டு. மீரா எல்லோருக்கும் உதவி செய்வாள். ரம்யாவோ யாராவது உதவி கேட்டாலே முகம் சுளிப்பாள். மற்றபடி, இருவரும் சேர்ந்தே வெளியே சுற்றுவார்கள்.
அன்று இருவருக்கும் விடுமுறை. கூடப் படிக்கும் மற்றொரு தோழி வீட்டில் விளையாடிவிட்டு வரும் பாதை இருட்டாக இருந்ததால், பயத்துடன் நடந்தார்கள். தெருவில் ஒரு நாய் அவர்களை வெறித்து பார்த்துக் கொண்டிருந்தது. ரம்யா மீராவின் கையை கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள். நாயைப் பார்த்து “ச்சூ.. ச்சூ..” என்று துரத்த ஆரம்பித்தாள். நாய் “வள்…” என்று குரைத்தபடி, பாய்ந்தது.
இருவரும் செய்வதறியாமல் அழத் தொடங்கினார்கள். அப்போது அழுக்கு உடையுடன் உயரமாக காட்சியளித்த ஒரு பையன், கற்களை வீசி நாயை விரட்டினான். அவனைப் பார்த்து இவர்களும் பயத்தில் கதற ஆரம்பித்தார்கள்.
“ஏய் பாப்பா… எங்க போறீங்க, உங்க வீடு எங்க இருக்கு?” என்று அதட்டினான். மீரா நடுக்கத்துடன் தன் அப்பா பெயரைச் சொன்னாள். அவள் அப்பாவின் பெயரைச் சொன்னதும், முகம் மலர்ந்தான்.
“அந்த அண்ணாவோட பொண்ணா நீ… உங்க வீட்டு வரைக்கும் கொண்டு வந்து விடறேன். வா” என்றபடி நடந்தான். என் அப்பாவை இவனுக்கு எப்படி தெரியும் என்று நினைத்த மீரா, ரம்யாவின் கையைப் பிடித்து அவன் துணையுடன் வீட்டுக்கு வந்து சேர்ந்தாள்.
அந்தப் பையனைப் பார்த்ததும் மீராவின் அம்மா முகம் மலர்ந்தாள். “ரொம்ப நன்றி தம்பி. சாம்பார் சாதம் பண்ணியிருக்கேன். உங்க அம்மா கிட்ட தந்துடறியா?” என்று கேட்டாள். “பரவாயில்ல அக்கா” என்று அவன் கிளம்பினான். ஆயாம்மா மகன் அவன் என்பதை மீராவும், ரம்யாவும் புரிந்து கொள்ள நேரமாகவில்லை.
“நான் வரேன், அம்மா தேடுவாங்க. இனிமே மத்தவங்களுக்கு என்னால முடிஞ்ச உதவிய செய்யறேன். சரியா?” என்ற ரம்யாவின் கையை மகிழ்ச்சியுடன் பிடித்தாள் மீரா.
இயல்வது கரவேல்!
-பிரவீண்