தமிழ் இனிது

எவ்வளவு? எத்தனை? இவ்விரு சொற்களையும் எவ்விடத்தில் பயன்படுத்த வேண்டும் என்று சிலருக்கு ஐயம் ஏற்படுவதுண்டு அங்கு எவ்வளவு வீடுகள் உள்ளன? என்று கேட்பது தவறு அங்கு எத்தனை வீடுகள் உள்ளன? என்று கேட்பதே சரி. எண்ணக்கூடிய பொருட்களைக் கூறும்போது ‘எத்தனை’ என்ற சொல்லையும், எண்ண முடியாத பொருட்களைக்கூறும் போது ‘எவ்வளவு’ என்ற சொல்லையும் பயன்படுத்தவேண்டும். சான்று: அந்த ஆற்றில் எவ்வளவு தண்ணீர்? (சரி)தண்ணீரை எண்ண முடியாது அல்லவா? எனவே எவ்வளவு என்று தான் இங்கு எழுத வேண்டும்.
அதே போல, அன்று, அல்ல இரண்டுமே எதிர்மறைப் பொருள் தரும் சொற்கள். ஒரு தொடரை (வினைமுற்று) ஒருமையில் முடிக்கும் போது ‘அன்று’ என்றும், பன்மையில் முடிக்கும் போது ‘அல்ல’ என்றும் எழுதவேண்டும் சான்று:
நீ சொன்னது உண்மை அன்று (சரி) (சொன்னது ஒருமையைக் குறிக்கிறது)
பழங்கள் விற்பனைக்கு அல்ல (சரி) (பழங்கள் பன்மையைக் குறிக்கின்றன).
(நற்றமிழ் அறிவோம்)
கட்டுரையாளர் : முதுகலைத் தமிழாசிரியை விவேகானந்தா வித்யாலயா, திருவொற்றியூர்