லட்சிய கோயிலின் சின்னம்!

அந்த மலை பிரதேசத்தில் இருக்கும் மைதானத்தில் ஒரு பெரியவரும் வாலிபன் ஒருவனும் நின்றிருந்தார்கள். இவர்கள் இருவரையும் பார்த்தபடி அசைந்தாடிக் கொண்டிருந்தது காவிக்கொடி.ஆர்.எஸ்.எஸ். நடத்தும் ஒரு மணிநேர ஷாகா தான் அது. ஷாகாவை நடத்தும் வாலிபனுக்கு பொழுது போகவில்லை. அவன் வயதொத்த நண்பர்கள் வந்திருந்தால் நேரம் மகிழ்ச்சியாக கடந்திருக்கும். பெரியவருடன் எப்படி விளையாடுவது? குளிருக்கு இதமான ஆடையும், தொப்பியும் அணிந்தபடி அவனையே பார்த்துக் கொண்டிருந்தார் பெரியவர். ராணுவ தளபதியின் உத்தரவை எதிர்நோக்கிய வீரனைப் போல் இருந்தது அவரது பார்வை.
“தாத்தா! உங்களைப் பத்தி சொல்லுங்களேன். கொஞ்சமாசமாக தான் உங்கள இந்த ஷாகாவுல பார்க்கிறேன்”.
“ஆமாம் தம்பி, எங்க பையன் இந்த ஊருக்கு மாற்றலாகி வந்துட்டான்”
“அப்படியா, அப்போ நீங்க ஷாகாவுக்கு புதுசா?”
பெரியவர் சிரித்தார். “இல்ல, இந்த ஊருக்கு புதுசு”
வாலிபனின் கண்கள் விரிந்தன. “அப்படின்னா முன்னாடியே நீங்க ஷாகா போயிருக்கீங்களா தாத்தா?”
பெரியவர் குதூகலமானார். “திருச்சி பக்கத்துல சின்ன கிராமம்தான் எங்க ஊரு. ரெண்டு வயசுலயே ஷாகா வந்துட்டேன். ஷாகாவுல இருக்கற மத்தவங்களுக்கு என்னை தூக்குறதுன்னா ரொம்ப பிடிக்குமாம். என் அண்ணா சொல்லியிருக்கான்.”
“ஓ! உங்க அண்ணனும் ஸ்வயம்சேவகரா? இப்பவும் இருக்காரா?”
“அவர் போயி ரொம்ப வருஷமாச்சு… என் கூட வந்த பல பேரு இன்னைக்கு இல்ல, சில பேரு இருக்காங்களான்னே தெரியல”
“ஓ… அதுக்கப்புறம் ஷாகா வந்தீங்களா…?”
“அப்புறம் சில வருஷங்கள்ல விளையாடற
துக்காக ஷாகா வருவேன். கொஞ்ச நாள் கழிச்சு சூரிய நமஸ்காரம், யோகா எல்லாம் கத்துக்க ஆரம்பிச்சேன்”
“அப்புறம்?”
“அப்புறமென்ன… ஷாகாவுக்கு என் நண்பர்
களை அழைத்து வந்தேன். நான் இருந்த தெருவுக்கு கட்நாயக்னு சொன்னாங்க. எஸ்.எஸ்.எல்.சி படிக்கும்
போது உன்னை மாதிரி ஷாகா நடத்தியிருக்கேன்” – பெரியவரின் குரலில் அப்படியொரு உற்சாகம்.
“படிச்சு முடிச்சதும் என்ன பண்ணீங்க”
“வேலைக்குதான் போனேன். கூடவே சங்க வேலையும் செஞ்சேன். நகர் கார்யவாஹ், தாலுகா கார்யவாஹ்னு இருந்திருக்கேன். சங்க முகாமுக்கும் போயிருக்கேன்”
“உங்க வேலைக்கு சங்க வேலை இடைஞ்சலா இல்லையா தாத்தா?”
“இல்லையே, எந்த ஊருக்கு வேலைக்கு போனாலும், ஷாகா இருக்கற இடம் தெரிஞ்சிட்டு போயிருவேன். அதுதான் நம்ம வழக்கம்”
“பரவாயில்லையே… எப்படி தாத்தா முடிஞ்சது?”
“ஹாஹா… மனசு இருந்தா மார்க்கம் உண்டு. நீ கூட தான் படிச்சிட்டே ஷாகா நடத்தற. எப்படி முடியுது?”
“சரி, நீங்க ஷாகா வர ஆரம்பிச்சு 50 வருஷமாயிருக்குமா தாத்தா?”
“62 வருஷமாச்சு. இன்னைக்கும் உற்சாகமா வர்றேன்”
“சரி, நீங்க இவ்வளவு வருஷமா ஷாகா வர்றதுக்கு யார் அத்தாட்சி?”
பெரியவர் முறுவலித்தார். “இந்த காவி கொடி தான் அத்தாட்சி”
“காவி கொடியா, எப்படி?” என ஆச்சரியத்துடன் கேட்டான் வாலிபன்.
“ஆமா… இதுக்கு முன்னாடி தானே எல்லா நல்ல விஷயங்களையும் கத்துக்கறோம். நாட்டுக்
காக சிந்திக்கறோம்…” என்று சொல்லிவிட்டு
“உடன் செல்வோர் வாடித் திரும்பிடினும்
உறுதுணைவர் எதிர்ப்புரை கூறிடினும்
ராஷ்ட்ர தேவனை வணங்கிடத் துடித்தே
லக்ஷியக் கோயிலை எய்திடுவேன்”
என்ற வரிகளை பெருங்குரலெடுத்துப் பாட ஆரம்பித்தார் பெரியவர். வாலிபனும் தொடர்ந்து பாடினான்.
“சரி… நேரமாச்சு… பிரார்த்தனை பாடலாம்” என்றார் பெரியவர். காவி கொடியின் முன்னால் இருவரும் நின்று “நமஸ்தே சதா வத்ஸலே மாத்ருபூமே…” என்று வணங்கினார்கள். காவி கொடி வேகமாக அசைந்தாடி வாழ்த்தியது.
(ஓர் உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எழுதப்பட்டது).