உடைந்த பூந்தொட்டி

ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாயா படிப்பில் மட்டுமல்ல, விளையாட்டு, பாட்டு, பேச்சு என எல்லாவற்றிலும் சுட்டி. பள்ளி ஆண்டுவிழாவில் அவள் பரிசு வாங்கி குவிக்கும்போது எல்லோருமே பாராட்டுவார்கள். “பெண்ணை நல்லா வளர்க்கிறீங்க” என்று அவள் பெற்றோரிடம் சொல்லாதவர்களே இல்லை.
ஆனால், மாயாவுக்கு ஒரு கெட்ட பழக்கம் இருக்கிறது. அவள் பயங்கர கோபக்காரி. கோபம் வரும்போது காட்டு கத்தல் கத்துவாள். கையில் கிடைக்கும் பொருட்களைத் தூக்கி போட்டு உடைப்பாள். இது அம்மாவுக்கும், அப்பாவுக்கும் கவலையாக இருந்தது.
மாயா தனது மாமா வீட்டுக்கு ஒருமுறை சென்றிருந்தாள். மாமா வீட்டில் அழகான பூந்தொட்டிகள் வைக்கப்பட்டு பால்கனி அலங்கரிக்கப்பட்டிருந்தது. அதைப் பார்த்ததும் மாயாவுக்கு ஆசையாக இருந்தது. “எனக்கும் ஒரு பூந்தொட்டி தர்றீங்களா மாமா” என்று கேட்டாள்.
மாமா ஒரு பூந்தொட்டியைத் தர ஒத்துக்கொண்டார். “ஆனா ஒரு கண்டிஷன். தினமும் தண்ணி ஊத்திட்டு ஒழுங்கா இறங்குதான்னு பார்க்கணும்” என்றார். மாயாவும் ஒத்துக்கொண்டு பூந்தொட்டியை தன் வீட்டுக்கு கொண்டு வந்தாள்.
பூந்தொட்டியில் ரோஜா செடி வளர்க்க ஆரம்பித்தாள் மாயா. தினமும் காலையில் அதில் தண்ணீர் ஊற்றிவிட்டு அது சரியா போகிறதா என்று ஓரிரு நிமிஷங்கள் பார்ப்பாள். மண்ணில் நன்றாக ஊறிய பிறகே அந்த இடத்தை விட்டு நகர்வாள்.
ஆனால் அன்றைக்கு தண்ணீர் விடும்போது மண்ணில் ஊறவில்லை, தொட்டியில் இருந்த ஓட்டை வழியாக கீழே விழுந்தது. அப்போது தான் ஓட்டை இருந்ததை மாயா கவனித்தாள்.
உடனே அம்மாவிடம் சென்று, “தொட்டி உடைஞ்சு போச்சும்மா” என்று சிணுங்கினாள். ”ஓட்டை விழுந்த இடத்த துணியால அடச்சு பாரு” என்றாள் அம்மா.
“அதெப்படிமா முடியும்? விழுந்த ஓட்டை விழுந்தது தானே?” என்றாள் மாயா. ”இப்ப அப்பா வரப்போறார். தண்ணில வழுக்கி விழப்போறார்” என்றாள் அம்மா.
மாயா திடுக்கிட்டாள். ”புதுசா வேற ஒரு தொட்டி வாங்கித்தா” என்றாள் சினுங்கியபடியே.
அம்மா சிரித்தபடியே மாயாவின் தலையை கோதியபடி, ”நீ கூட ரொம்ப சுட்டி பொண்ணு தான். நல்லா படிக்கற. பாடற… நெறய பரிசெல்லாம் வாங்கற. கோபம் வந்து எல்லாத்தையும் கெடுக்குது. நாங்க பொறுத்துக்கறோம் இல்ல” என்றாள்.
மாயா பதில் சொல்ல முடியாமல் திணறினாள்.
 “கோபப்படறது தப்பில்ல. ரௌத்திரம் பழக சொல்லியிருக்கார் பாரதியார். ஆனா தேவையான இடத்துல வரணும்” – தொடர்ந்தாள் அம்மா.
“இனிமே கோபப்பட மாட்டேன். சரியா?…” என்றபடி வெட்கத்துடன் ஓடிப் போனாள் மாயா.
ஆறுவது சினம்!
-பிரவீண்