மர்ம விருந்தாளி

இப்போதெல்லாம் சோமு சரியான நேரத்தில் சாப்பிட்டு விடுகிறான். காய்கறி நிறைய சேர்த்துக் கொள்கிறான். பால் என்றாலே ஓடுகிறவனின் பால் டம்ளரில் உள்ள பால் நொடியில் மாயமாகி விடுகிறது. அவன் அம்மா பார்ப்பவர்களிடம் எல்லாம் சந்தோஷமாக மகன் பெருமையை சொல்கிறார்.
ஆனால், சோமு முன் போல வீட்டுக் கூடத்தில் தொலைக்காட்சி பார்த்தபடி சாப்பிடுவதில்லை. “நிறைய போடும்மா. என் ரூம்ல படிச்சிக்கிட்டே நீட்டா சாப்பிடறேன்” என்று வாங்கிக் கொள்வான். “இங்கயே சாப்பிடு டா. ரூம்ல எறும்பு வந்துறப் போகுது” என்று கத்துவார் அம்மா. “அத நான் பார்த்துக்கறேன்” என்றபடி தட்டுடன் சென்றுவிடுவான்.
அப்பாவும் அம்மாவும் வீட்டில் அட்டாச்டு பாத்ரூம், பால்கனியுடன் கூடிய அறையை நான்காம் வகுப்பு படிக்கும் சோமுவுக்கு என ஒதுக்கியிருக்கிறார்கள். கொரோனா காலத்தில் ஆன்லைன் வகுப்புகளுக்கு அந்த அறை நன்றாகவே பயன்படுகிறது. நான்கு நாளாகத்தான் சோமுவின் இந்த புது வழக்கம். என்ன காரணம் என்பது அம்மா, அப்பாவுக்கு தெரியவில்லை. ஆன்லைன் கிளாசில் ஏதாவது சொல்லியிருக்கலாம், நல்லா சாப்பிட வேண்டும் என்பது பற்றி.
அன்று சோமு தன் நண்பன் விமல் வீட்டுக்குப் போயிருந்தான். சமையல் வேலை முடித்து அம்மா வீடு பெருக்கிக் கொண்டிருந்தார். சோமுவின் அறைக்குச் சென்று பெருக்க ஆரம்பித்தார். பால்கனி கதவு சிறிதே திறந்திருந்தது. அம்மா கதவை நன்றாகத் திறந்ததும் அழகான நாய்க்குட்டி ஒன்று ‘வள்ள்ள்…’ என்று குரைத்தது. ’எங்கிருந்து கொண்டு வந்தான் இந்த நாய்க்குட்டிய?’ என்று நினைத்தபடி அம்மா அதை கையில் எடுத்தாள். காலில் கட்டுப் போட்டிருந்தது. எங்கிருந்தோ அதை எடுத்து வந்து சோமு முதலுதவி செய்கிறான் என்று புரிந்துகொள்ள நேரமாகவில்லை.
கொஞ்ச நேரம் கழித்து சோமு அறைக்கு வந்தபோது பால்கனி கதவு திறந்திருந்தது. உள்ளே தரை துடைக்கப்பட்டிருந்தது. நாய்க்குட்டியை காணோம்.
“அம்மா… அம்மா…. இங்க இருந்த நாய்க்குட்டி எங்க?” என்று அலறினான். ”நீ அவசர அவசரமா உள்ள வரும்போது வலப் பக்கம் தூங்கிக்கிட்டிருந்ததே, பார்க்கலியா?” என்று சிரித்தபடி கேட்டாள் அம்மா.
சோமு வெளியே ஓடி வந்த சத்தம் கேட்டு நாய்க்குட்டி விழித்துக்கொண்டு அவனைப் பார்த்தது வாலாட்டியது. கையில் மெல்ல எடுத்து, அதன் தலையைத் தடவிக் கொடுத்தான்.
“இந்த நாய் அழகா இருக்கும்மா. நாமளே வச்சிப்போமே?” என்று கேட்டான். “வச்சிக்கலாமே…” என்ற அம்மா, “ஆனா ஒரு கண்டிசன். நீ ஒழுங்கா சாப்பிடணும் இனிமே” என்றாள் கண்டிப்புடன்.
“நிச்சயம். அம்மான்னா அம்மா தான்” என்று கட்டிக்கொள்ள வந்தான். “டேய்! நாயை தொட்டதும் கைய நல்லா கழுவிட்டு வாடா” என்று நகர்ந்தாள் அம்மா. வாலை வேகமாக ஆட்டியது நாய்க்குட்டி.
அறம் செய்ய விரும்பு
-பிரவீண்