திருடப்பட்ட சிலைகள் திரும்பின

உத்தரபிரதேசம் மாநிலம் சித்ரகூட மாவட்டத்தின் தருஹா என்னும் கிராமத்தில் 300 ஆண்டுகள் பழமையான பாலாஜி கோயில் உள்ளது. இங்கு கடந்த மே 9ம் தேதி இரவு, பல கோடி மதிப்பிலான 16 சுவாமி சிலைகளை சில மர்ம நபர்கள் திருடி சென்றனர். இது தொடர்பாக காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்நிலையில், திருடுபோன ஒரு சில நாட்களில் சிலைத் திருடர்கள் தாங்கள் திருடிய 16 சிலைகளில் 14 சிலைகளை அந்தக் கோயில் அர்ச்சகரின் வீட்டருகே இரவு நேரத்தில் வைத்துவிட்டு அதன் கூடவே ஒரு கடிதத்தையும் வைத்துச் சென்றனர். அதில், ‘சிலைகளைத் திருடியதில் இருந்து தொடர்ச்சியாக பயங்கரமான கனவுகளாக வருகின்றன. இதனால் பயந்துள்ளோம், நிம்மதி இழந்துவிட்டோம். எனவே சிலைகளை திரும்பி ஒப்படைக்க முடிவு செய்தோம்’ என எழுதியிருந்தனர். மீதமுள்ள 2 சிலைகளின் நிலை என்ன என காவல்துறை விசாரித்து வருகிறது.