பாரத விடுதலைப் போரின் தீப்பொறி

மங்கள் பாண்டே 1827ல் உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் பிராமணக் குடும்பத்தில் பிறந்தார். 1849ல் பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தில், 34வது நேட்டிவ் பெங்கால் இன்பான்ட்ரியில் ஆறாவது கம்பெனியில் சிப்பாயாக சேர்ந்தார். மார்ச் 29, 1857ல் மங்கள் பாண்டே இரண்டு ஆங்கிலேய அதிகாரிகளைக் கொன்று, ஒரு கலகத்தை உண்டாக்குமாறு தன்னுடன் இருந்த சிப்பாய்களை கேட்டுக் கொண்டார். பிடிபட்டபோது தன் துப்பாக்கியைக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.

இதன் காரணமாக ஏப்ரல் 18ல் அவரைத் தூக்கிலிட முடிவு செய்யப்பட்டது. அவ்வளவு நாட்கள் காத்திருந்தால், மேலும் இது போல கலகங்கள் உண்டாகலாம் என்று அஞ்சிய ஆங்கிலேய அரசு,10 நாட்களுக்கு முன்பாக ஏப்ரல் 8லேயே அவருடைய தூக்கு தண்டனையை நிறைவேற்றியது. தன் 29ஆவது வயதில் பாரத வரலாற்றில் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக நடந்த மிகப்பெரிய கலகத்திற்கு வித்திட்டுவிட்டு வீரமரணமடைந்தார் மங்கள் பாண்டே.

இந்த செயலில் தனக்கு யாரும் உதவி செய்யவில்லை என்றும் தான் தனியாகவே செயல்பட்டதாகவும் மங்கள் பாண்டே நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார். எனினும் அவர் அங்கிலேய அதிகாரிகளை கொலை செய்தபோது, மற்றவர்கள் வேடிக்கை பார்த்ததாகக் கூறி அவர் வேலை பார்த்த ஒட்டுமொத்த அறாவது கம்பெனியே நம்பிக்கைக்கு உகந்தது அல்ல என்று கலைக்கப்பட்டது. அவரின் பெயர் ஆங்கிலேயர்களுக்கு மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. அதன் பிறகு விடுதலைப் போரில் ஈடுபடும் எந்த சிப்பாயையும் ‘பாண்டே’ என்றே அழைத்தனர்.

பிரிட்டிஷார் அஞ்சியது வீண்போகவில்லை .மே மாத கடைசியில் மீரட்டில் தொடங்கிய சிப்பாய்க் கலகம் தேசம் முழுவதும் பரவ ஆரம்பித்தது. 1858 வரை நீடித்த கலகம் தோல்வியில் முடிவடைந்தாலும்,  பாரத விடுதலைக்கு இது ஒரு முக்கிய திருப்புமுனையாக வரலாற்றில் அமைந்தது. பாரத அரசு 1984ல் மங்கள் பாண்டேவை சிறப்பிக்கும் விதமாக ஒரு தபால் தலை வெளியிட்டது. 2005ல் அவருடைய வாழ்க்கையை மையமாக வைத்து Mangal Pandey: The Rising என்ற திரைப்படம் வெளியானது.

மங்கள் பாண்டேவின் பலிதான தினம் இன்று