குடியரசு தலைவர் ஆட்சி வேண்டும்

டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரான சோயிப் இக்பால், டெல்லியில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், ‘டெல்லியின் நிலை குறித்து வேதனையடைந்துள்ளேன்; மிகவும் கவலைப்படுகிறேன். என்னால் தூங்க முடியவில்லை. மக்களுக்கு ஆக்சிஜன், மருந்துகள் கிடைக்கவில்லை. என் நண்பர் பாதிக்கப்பட்டுள்ளார்; மருத்துவமனையில் இருக்கிறார். ஆனால் ஆக்சிஜன், வெண்டிலேட்டர், ரெம்டெசிவர் கிடைக்கவில்லை. எம்.எல்.ஏ.வாக இருப்பதற்கு இன்று நான் வெட்கப்படுகிறேன். அரசால் உதவ முடியவில்லை. நான் ஆறு முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவன், எனினும் யாரும் பதிலளிக்கவில்லை. இந்தச் சூழ்நிலையில், டெல்லியில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துமாறு டெல்லி உயர் நீதிமன்றத்திடம் நான் கோர விரும்புகிறேன். இல்லையெனில் சாலையில்  சடலங்களாக இருக்கும்’ என கூறியுள்ளார். சோயிப் இக்பால் கோரிக்கைக்கு பா.ஜ.க ஆதரவு தெரிவித்துள்ளது. டெல்லி மாநில காங்கிரஸ் தலைவரும், டெல்லியில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என ஜனாதிபதிக்கு நேரடியாக கடிதம் எழுதியுள்ளார். காங்கிரஸ் கட்சியில் இருந்த சோயிப் இக்பால், 2020 சட்டமன்றத் தேர்தலையொட்டி ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.