சிலம்பில் ஒலிக்கும் வேதநாதம்

“தமிழ்நாட்டில் ஆரியர்களால் அதாவது  பிராமணர்களால் வேத நெறி திணிக்கப்படுவதற்கு முன்பு இங்கே சமணமும் பௌத்தமும்தான் தழைத்திருந்தன” என்று இக்காலத் திராவிடர்களும், தனித் தமிழர்களும் எடுத்துவிடும் கட்டுக்கதைகளைக் கட்டறுப்பதற்கு சமணக் காப்பியமான சிலப்பதிகாரம் ஒன்றே போதும். சங்கம் மருவிய காலத்திலே தோன்றிய முதல் காப்பியம் இது. இதை ஊன்றிப் படித்தால், தமிழகத்திலே தமிழர்தம் ஊனிலும் உதிரத்திலும் கலந்திருப்பது வேத நெறிப்பட்ட ஹிந்துப் பண்பாடே என்பதும், சமணமும் பௌத்தமுமே பின்னர் இங்கே வந்தவை என்பதும் தெளிவாகும்.

உடனே சிலர், இதன் மறுப்புரையாக ஆசீவகம் என்ற மதமே தமிழர்தம் பழைய மதம் என்பார்கள். அதுவும்கூட மற்கலி கோசாலர் என்ற வடநாட்டுத் தத்துவ ஞானியால் உருவாக்கப்பட்ட ஆஜீவக மதமே, தமிழர்தம் சொந்தச் சரக்கல்ல. மேலும், அந்த மதம், தொடக்கத்தில் சமணம் எனப்படும் ஜைனத்தோடு இணைந்திருந்து, பின்னர் பிரிவுற்றது. ஆசீவகம்தான் தமிழகத்தின் தொன்மை மதம் என்பதற்கு சங்க இலக்கியங்களில் இருந்தோ இல்லையேல் சிலப்பதிகாரம் போன்ற காப்பியங்களில் இருந்து எந்த ஆதாரமும் காட்ட முடியாது. அதேநேரத்தில், இன்றைய ஹிந்து மதமும், அதன் ஆணிவேரான வேத நெறி வழிபாடும் பழந்தமிழர் வாழ்வோடு பின்னிப் பிணைந்தவை என்பதற்கு சிலப்பதிகாரம் பல்வேறு சான்றுகளைத் தருகிறது.

சிலப்பதிகாரத்தில் கவுந்தி அடிகள் என்ற முக்கியக் கதாபாத்திரத்தின் மூலம் சமண நெறிகளை ஆங்காங்கே இக்காப்பியத்தின் ஆசிரியர் இளங்கோவடிகள் சொல்கிறார். நிக்கந்தர், அருகத் தேவர் என்றழைக்கப்டும் சமணத் தெய்வங்களுக்கு (நிறைமாந்தராய் வாழ்ந்து இறையாய் உயர்ந்தோருக்கு) ஆலயங்கள் இருந்ததையும் அவர் குறிப்பிடுகிறார். ஆயினும், அவற்றைவிட மிக அதிகமாக, அக்காலத் தமிழகத்தில் நிலவிய  வேதநெறியும் நாட்டுப்புற வழிபாடுகளும் கலந்த ஹிந்து மதத்தின் தொன்மத்தையே சிலப்பதிகாரம் பெரிதும் சாற்றுகிறது.  அச்சான்றுகளுள் முக்கியமானவற்றை இப்போது காண்போம்.

சிலப்பதிகாரத்தின் முதல் காண்டமான புகார்க் காண்டத்தில் இரண்டாவது அத்தியாயமாக இருப்பது கண்ணகியும் கோவலனும் இல்லற வாழ்வில் நுழையும் “மனையறம்படுத்த காதை”. அதிலே, கண்ணகியின் அழகை கோவலன் வர்ணிக்கும் காதல் பாட்டிலேகூட ஹிந்து மதக் கூறுகள் வெளிப்படுகின்றன. அதிலே தேவர் கோமான் தெய்வக் காவல் படை நினக்கு அளிக்க, அதன் இடை நினது இடை (வரிகள் 47 – 48) என கண்ணகியின் இடுப்பைப் புகழ்கிறான் கோவலன். இதன் பொருள்: “தேவர்களின் தலைவனாகிய இந்திரனின் படை ஆயுதமாகிய வஜ்ஜிராயுதம் இரு கூர்முனைகளையும் நடுவிலே வளைந்த பிடியையும் கொண்டது, அந்தப் பிடியைப்போல் வளைந்த அழகான இடுப்பு உனக்கு இருக்கிறது”.

அடுத்ததாக, கண்ணகியின் கண்ணழகை வர்ணிக்கும் கோவலன், அதற்கு, முருகப் பெருமானின் வேலாயுதத்தை உதாரணமாகக் கூறுகிறான். (வரிகள் 49-52):

அறுமுக ஒருவன்ஓர் பெறுமுறை இன்றியும்

இறுமுறை காணும் இயல்பினின் அன்றே

அஞ்சுடர் நெடுவே லொன்றுநின் முகத்துச்

செங்கடை மழைக்கண் இரண்டா வீத்தது   

இதன் பொருள்: “ஆறுமுகம் படைத்த முருகப் பெருமான், எந்தவொரு வரைமுறையும் இல்லாத உரிமையோடு, எனது துன்பத்தைக் காணத் துடிக்கிறான். அதனால்தான் தனது கையில் உள்ள அழகிய, சுடரையுடைய (ஜோதி வடிவிலான),  நீண்ட வேலாயுதத்தை உனது ஒரு கண்ணாகவும், நாணத்தால் கடைக்கண் சிவந்து கருணை மழை பொழிவதை மற்றொரு கண்ணாகவும் வழங்கியுள்ளான்.”

மற்றோர் இடத்தில் (வரி எண் 78) அலையிடைப் பிறவா அமிழ்தே அதாவது, கடலில் இருந்து பிறவாத அமிழ்தமே என்று கண்ணகியைக் கோவலன் போற்றுவதன் மூலம், பாற்கடலைக் கடைந்து அமிருதம் எடுத்த புராணச் சம்பவத்தை இளங்கோவடிகள் கோடிட்டுக் காட்டுகிறார்.

இதே புகார்க் காண்டத்தின் ஐந்தாவது அத்தியாயத்தின் தலைப்பே “இந்திரவிழவு ஊரெடுத்த காதை” என்றமைந்துள்ளது. “தேவர்கள் என்றால் ஆரியர்கள், அசுரர்கள் என்றால் திராவிடர்களாகிய தமிழர்கள்” என்று  புளுகுவது திராவிட இயக்கத்தாரின் பொழுதுபோக்கு. ஆனால், தேவர்களின் தலைவனான இந்திரனுக்குத் தமிழர்கள் கோட்டம் (கோவில்) அமைத்து விமரிசையாகத் திருவிழா நடத்தியதை இந்த அத்தியாயம் வர்ணிக்கிறது. அதிலே, 164 முதல் 168 வரையிலான வரிகள், காவிரியாற்றில் இருந்து 1,008 குடங்களிலே புனித நீர் கொண்டு வந்து விண்ணவர் தலைவனுக்கு நன்னீராட்டியதை விளக்குகின்றன. அதுமட்டுமின்றி, இதே இந்திர விழாவின்போது இந்திரன் உட்பட பல்வேறு தெய்வங்களுக்கான ஆலயங்களிலும் யாகங்கள் வளர்த்து விழாக்கள் நடைபெற்றதை 169 முதல் 175 வரையிலான வரிகள் வர்ணிக்கின்றன:

பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும்,

அறுமுகச் செவ்வேள் அணி திகழ் கோயிலும்,

வால் வளை மேனி வாலியோன் கோயிலும்,

நீல மேனி நெடியோன் கோயிலும்,

மாலை வெண்குடை மன்னவன் கோயிலும்,

மாமுது முதல்வன் வாய்மையின் வழாஅ

நான்மறை மரபின் தீமுறை ஒருபால்

இதன் பொருள்: “தாய் வயிற்றில் பிறக்காமல் இயற்கையாகவே உடலெடுத்த மகாதேவனாகிய சிவபெருமான் கோயில், ஆறுமுகங்களும் சிவந்த நிறமுமுடைய முருகப் பெருமான் கோயில், வெள்ளைச் சங்கு போன்ற உடல் நிறத்தைக் கொண்ட பலராமன் கோயில், நீல நிற உருவம் கொண்ட நெடியோனாகிய திருமால் கோவில், மாலையும் வெண்குடையும் கொண்ட வேந்தனாகிய இந்திரன் கோவில் ஆகியவற்றில், மிகத் தொன்மையான இறைவன் கூறிய வாய்மொழிகளில் இருந்து சிறிதும் பிசகாத, நான்கு பிரிவுகள் கொண்ட வேத மரபுப்படி தீயை வளர்த்து ஒருபுறம் வேள்விகள் செய்யப்பட்டன.”

இதேபோல, “கனாத்திறம் உரைத்த காதை” என்ற மற்றொரு அத்தியாயத்திலும் (வரிகள் 9-13) பல்வேறு கோயில்கள் பற்றி எடுத்துரைக்கப்பட்டுள்ளது:

அமரர் தருக்கோட்டம் வெள்யானைக் கோட்டம்

புகர்வெள்ளை நாகர்தங் கோட்டம் பகல்வாயில்

உச்சிக் கிழான்கோட்டம் ஊர்க்கோட்டம் வேற்கோட்டம்

வச்சிரக் கோட்டம் புறம்பணையான் வாழ்கோட்டம்

நிக்கந்தக் கோட்டம் நிலாக்கோட்டம் புக்கெங்கு.

இதன்பொருள்: “தேவலோக தரு (மரம்) எனப்படும் கற்பக மரம் நிற்கும் கோயில், இந்திரனின் வாகனமாகிய ஐராவதம் எனப்படும் வெள்ளை யானை நிற்கும் கோயில், அழகான வெள்ளை நிறம்கொண்டவரும் நாகரான ஆதிசேஷனின் அவதாரமுமான பலராமர் கோயில், கிழக்குத் திசையில் தோன்றுகின்ற சூரியனுக்குரிய கோயில், இறைவனின் ஊராகிய கயிலாய மலை (மேரு மலை) வடிவமைக்கப்பட்ட கோயில், முருகப் பெருமானின் வேல் நிற்கும் கோயில், இந்திரனின் ஆயுதமான வச்சிராயுதம் வணங்கப்படும் கோயில், புறம்பணையான் எனப்படும் சாதவாகனன் உறைகின்ற கோயில், நிக்கந்தர் எனப்படும் அருகத் தேவன் கோயில், சந்திரன் கோயில் ஆகியவற்றுக்கெல்லாம் சென்றனர்.”

புகார்க் காண்டத்தின் இறுதி (10ஆவது) அத்தியாயமாகிய “நாடுகாண் காதை”யில், புது வாழ்வுக்காக மதுரையை நோக்கிப் புறப்பட்ட கோவலனும் கண்ணகியும், பூம்புகார் நகரை விடுத்துச் செல்லும்போது, திருமால் கோவிலை வலம் வந்து புறப்பட்டனர் என்பதை, அணிகிளர் அரவின் அறிதுயில் அமர்ந்த மணிவண்ணன் கோட்டம் வலஞ்செயாக் கழிந்து (வரிகள் 9-10) என்று குறிப்பிட்டுள்ளார் இளங்கோவடிகள். ஆதிசேஷனாகிய பாம்புப் படுக்கை மீது, அனைத்தையும் அறிந்திருந்திருந்தாலும் அறியாததுபோல் நடித்தபடி படுத்துக்கொண்டிருக்கும், நீலமணி போன்ற நிறத்தையுடைய விஷ்ணுவின் கோவில் என்று எத்தனை அழகாகக் கூறியுள்ளார்!

இதே நாடுகாண் காதையில், வேதம் ஓதுகின்ற அந்தணர்கள், தங்களது வேள்வித் தீயில் ஆவுதி அளித்து, அதிலிருந்து எழும்புகின்ற நறுமணம் கொண்ட புகை மூலம், வானத்து கருமேகங்களை உயிர்ப்பித்து மழை பெய்விக்கும் வித்தையையும் அறிந்திருந்தனர் என்ற அரிய செய்தியையும் எடுத்துரைக்கிறார் இளங்கோவடிகள் (வரிகள் 143-144). மழைக்கரு உயிர்க்கும் அழல்திகழ் அட்டில் மறையோர் ஆக்கிய ஆவுதி நறும்புகை என்பன அவ்வரிகள். தற்காலத்தில் டிரோன் அல்லது ஹெலிகாப்டர் மூலம் மேகங்களில் ரசாயனப் புகைப் பொருளைத் தூவி, மழை பெய்விக்கும் முயற்சியை இதனுடன் ஒப்புநோக்கவும்.

இதே அத்தியாயத்தில் மற்றோர் அரிய தகவலும் காணக் கிடைக்கிறது. சாரணர் என்றழைக்கப்படும் சமண மதத் தெய்வம் (வானில் இருந்து தோன்றும் இறைத்தூதர் போன்றவர்), சமணர்களின் பெருந்தெய்வமாகிய அருகத் தேவன் (அர்ஹத்) புகழை எடுத்துரைக்கும்போது, அவரை “சிவகதி நாயகன்என்று (வரி 179) குறிப்பிடுகிறார். அதாவது வீடுபேறு எனப்படும் முக்தியை அளிக்கும் இறைவன் அருகத் தேவன் என்கிறார். மரணமடைந்தோர் இறைவன் திருவடி நிழலை அடைந்துவிட்டார் என்பதை இப்போதும்கூட நாம் சிவலோகம் அடைந்தார் என்கிறோம். சிவபெருமானின் திருவடியே முக்தி என்ற தொன்மையான கருத்து, ஆகுபெயராக சிவகதி என்ற சொல்லாக உருவெடுத்துள்ளது. இந்த மரபை சமணமும் எடுத்தாண்டிருப்பது, தமிழகத்தில் எந்த அளவுக்கு நமது புராதன ஹிந்து சமயம் வேரூன்றியுள்ளது என்பதைச் சந்தேகமின்றித் தெளிவாக்குகிறது.

சிலப்பதிகாரத்தின் இரண்டாவது காண்டமாகிய மதுரைக் காண்டத்தில், மலைமகளாகிய கொற்றவையும், மாதவனாகிய திருமாலும் மிக அதிகமாகவே துதிக்கப்பட்டுள்ளனர். இதுபற்றி அடுத்த அத்தியாயத்தில் காண்போம்.