தூத்துக்குடியில் துரத்தப்பட்ட ஆதிக்கம்

பாரத விடுதலைப் போராட்ட வரலாற்றில் மிக முக்கியமானது வ.உ.சி முன்னெடுத்த கோரல் மில் போராட்டம். ஆசியாவின் முதல் தொழிற்சங்கப் போராட்டம் என்று இதனைக் கூறலாம். பாரதத்தில் முதன்முதலாக பருத்தி நூல் ஆலைகளை பிரிட்டிஷ் அரசு 1851ம் ஆண்டு தொடங்கியது. 1903ம் ஆண்டு 201 ஆலைகள்  இருந்தன.

ஃப்ராங்க்ளின் ஹார்வி என்பவர் 1885-ம் ஆண்டு திருநெல்வேலி மில்ஸ் பிரைவேட் லிமிடெட் எனும் நிறுவனத்தை பாபநாசத்தில் தொடங்கினார்.
பாபநாசத்தைத் தொடர்ந்து தூத்துக்குடியிலும் இதே நிர்வாகத்தால் 15 லட்சம் முதலீட்டில் கோரல் மில் என்ற இரண்டாவது ஆலை துவங்கப்பட்டது.
கோரல் மில்லில் தொழிலாளர்கள் பெரும் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார்கள். வார விடுமுறை கிடையாது. உணவு இடைவேளை கிடையாது. வேலை உறுதி கிடையாது. உடல்நிலை காரணமாகவோ, வேறு காரணங்களாலோ விடுமுறை எடுத்தால் திரும்ப வேலை கொடுக்க மாட்டார்கள்.

தொழிலாளர்கள் சிறு தவறு செய்தாலும் பிரம்பால் அடிப்பார்கள். இந்தக் கொடுமைகளுக்குத் தீர்வு காண வ.உ.சி யோசித்துக் கொண்டிருந்தபோதுதான் அவருக்கு சுப்ரமணிய சிவாவின் அறிமுகம் கிடைத்தது. தமிழ்நாடு முழுவதும் பயணித்து தேசபக்தி கருத்துக்களை பரப்பி வந்த சிவா 1908ம் ஆண்டு பிப்ரவரியில் தூத்துக்குடி வந்தார். தேசபக்த இளைஞர் சங்கத்தின் சார்பில் தொடர் சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். அப்போது தூத்துக்குடியில் சுதேசி இயக்கத்தில் தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருந்த வ.உ.சி,  சிவாவை தன் வீட்டிலேயே தங்கவைத்து ஆங்கிலேய அரசுக்கு எதிரான கூட்டங்களை நடத்தினார்.

இவர்களின் தொடர் பிரசாரம் தூத்துக்குடியில் உரிமை போருக்கான கனலை மூட்டியது. 1908ம் ஆண்டு பிப்ரவரி 27-ம் தேதி வ.உ.சி தலைமையில் கோரல் மில் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தை தொடங்கினார்கள். இதில் 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். இந்தப் போராட்டம் துவங்கியதுமே நெல்லையில் இருந்தும் சிவாகாசியில் இருந்தும் காவல்துறை தூத்துக்குடியில் குவிக்கப்பட்டது. தூத்துக்குடி நகரில் ஆங்கிலேயர்களின் தொழிலாளர் விரோதப் போக்கினைக் கண்டித்து பொதுக்கூட்டங்கள் தொடர்ந்து நடைபெற்றன.  வ.உ.சியின் பேச்சுகள் தொழிலாளர்களின் ஊக்கத்தையும், உறுதியையும் அதிகப்படுத்தியது.

அதனால் மில் முதலாளிகள் வ.உ.சி மீது  கோபம் அடைந்தார்கள். வேலைநிறுத்தம் செய்வதற்குத் தூண்டிவிட்டவர் வ.உ.சி என்று வழக்கு தொடுக்கப்பட்டது.   மாஜிஸ்திரேட் வ.உ.சியை நேரடியாக அழைத்து எச்சரித்தார். மாஜிஸ்திரேட்டின் எச்சரிக்கையை வ.உ.சி கேட்கவில்லை. தொடர்ந்து பொதுக்கூட்டங்களில் பேசி வந்தார். தூத்துக்குடியில் எல்லா தரப்பு மக்களும் பங்கெடுத்தனர். தூத்துக்குடி வியாபாரிகள் ஆங்கிலேயர்களுக்கு உணவுப் பொருட்களை
விற்க மறுத்தார்கள்.

போராட்டக்காரர்கள் கைது செய்தல், தண்டனை வழங்குதல் என்று ஆங்கிலேயர்கள் அட்டூழியம் செய்தாலும் கோரல் மில் போராட்டம்
ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டமாக வலுவடைந்து மக்களிடையே சுதந்திர விழிப்புணர்வை ஏற்படுத்தியது. இறுதியில் கூலி உயர்வு, பணி நிரந்தரம், ௮ மணிநேர வேலை என தொழிலாளர் உரிமைக்கு மில் நிர்வாகம் பணிந்தது.

  -ஆதலையூர் சூரியகுமார்