கோயில்கள் பக்தர்களிடமே

ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ், ‘மதத்துக்கும், அரசுக்கும் சம்பந்தம் இருக்கக் கூடாது. அரசாங்கத்தில் மதமோ அல்லது மதத்தில் அரசாங்கமோ கலக்கக் கூடாது. தமிழ்க் கலாச்சாரத்துக்கு மூலமானதாக கோயில்கள் உள்ளன. நம் கலாச்சாரத்தில் கோயில் என்பது ஆன்மா போன்றது. இந்த ஆன்மா,அரசின் கையில் தற்போது அடிமையாக உள்ளது. பல கோயில்கள் பாழடைந்துக் காணப்படுகின்றன. இது தொடர்ந்தால், அடுத்த 50 ஆண்டுகளில் முக்கிய கோயில்களைத் தவிர, மற்றவை அழிந்துவிடும். தமிழகத்தில் 11,999 கோயில்கள் ஒருகால பூஜை செய்யக்கூட வருவாயின்றி தவிக்கின்றன.

அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 44,121 கோயில்களில், 37 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோயில்களில் பூஜை, பராமரிப்புப் பணிகளையும் மேற்கொள்ள ஒருவருக்கு மேல் நியமிக்க  வருவாய் கிடையாது. 34,093 கோயில்கள் ரூ.10 ஆயிரத்துக்கும் கீழ் ஆண்டு வருவாய் உள்ளது. கோயில்கள் பக்தர்களின் கட்டுப்பாட்டில் இருந்தால் உயிரோட்டமாகவும், அதிர்வலையோடு சுயசார்புடையதாக இருக்கும். எனவே, ‘கோயில்களை பக்தர்களிடம் ஒப்படைப்போம்’ என கட்சிகள் தங்களது தேர்தல் அறிக்கையில் சேர்க்க வேண்டும்.

இதற்கான செயல் திட்டத்தை வகுக்க வேண்டும்’’ என தமிழக முதல்வர், எதிர்கட்சித் தலைவர் உட்பட பல கட்சி தலைவர்களுக்கும் கோரிக்கை விடுத்துள்ளார். இதற்காக ‘கோவில் அடிமை நிறுத்து’ ‘ Free TN Temples’ என்ற ஒரு இயக்கம் துவக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆதரவு தெரிவிக்க 83000 83000 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுக்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது.