ஏமாற்றம் தந்த ஸ்டாலின்

இந்த தேர்தலில், 173 தொகுதிகளில் போட்டியிடும் தி.மு.க, பெரும்பாலான தொகுதிகளில், பழைய வேட்பாளர்களுக்கும், வாரிசு அரசியல் அடிப்படையில் அவர்களின் குடும்பத்தினருக்கு மட்டுமே மீண்டும் போட்டியிட வாய்ப்பு கொடுத்திருப்பது தி.மு.கவினரிடையே சோர்வை உருவாக்கியுள்ளது. புதிய ரத்தம் பாய்ச்சுவார், ஜெயலலிதா பாணியில் ஆட்சி நடத்துவார், ஐ பேக் டீம் களமிறங்கி சர்வே செய்து, போட்டியிட தகுந்த வேட்பாளர்கள் யார், உண்மையிலேயே கட்சிக்கு உழைக்கின்றனர் யார், பதவியை வைத்து சம்பாதித்து சுகம் காண்பவர்கள் யார் என பார்த்து பார்த்து தகவல் சேகரித்ததால் இம்முறை பல புதியவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என காத்திருந்த பலருக்கும் இந்த வேட்பாளர் பட்டியல் ஏமாற்றத்தையே தந்துள்ளது.

அ.தி.மு.கவே, தற்போது பதவியில் உள்ள 41 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வாய்ப்பு மறுத்துள்ளது. அந்த துணிச்சல்கூட ஸ்டாலினுக்கு இல்லையே என வருத்தத்தில் உள்ளனர் உடன் பிறப்புகள். இதனால் ‘இருப்பதோ 173 தொகுதிகள், மனு செய்தவர்களோ 7,000 பேர். யாரும் பிடிவாதம் பிடிக்கக்கூடாது. மீறுவோர் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டை மீறுபவர்களாகி விடுவர். ‘உன் சுற்று வரும்வரை காத்திரு’ என்று அண்ணா சொன்னதை தற்போது நினைவு கூர்கிறேன். மாச்சாரியங்களுக்கு இடம் கொடுக்கக்கூடாது’ என ஸ்டாலின் சப்பைக்கட்டு கட்டி தொண்டர்களை சமாதானப்படுத்த முயன்றுள்ளார்.