கோயில் சொத்து இணையத்தில் பதிவேற்றம்

ஹிந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் அலுவலகத்தில் அமைச்சர் சேகர்பாபு தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது, ‘அறநிலையத்துறை, கோயில் நிர்வாகம், அலுவலர்கள், திருப்பணிகள்  மற்றும் விழாக்கள் போன்ற தகவல்களை இணையத்தில் வெளியிட வேண்டும். கோயில்களில் நடைமுறையில் உள்ள பதிவேடுகளை ஸ்கேன் செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.  கோயில் நிலங்கள் மற்றும் கட்டடங்களின் விவரங்களை, பொதுமக்கள் கணினி வழியில் பார்வையிடும் வகையில் புவிசார் குறியீடு செய்து இணையத்தில் வெளியிட வேண்டும். கோயில் பெயரில் உள்ள அசையும் மற்றும் அசையா சொத்துகளின் உரிமை ஆவணங்களை ஸ்கேன் செய்து இணையத்தில் பதிவேற்ற வேண்டும். கோயில் சொத்து ஆக்கிரமிப்புகளை அகற்றல், நியாய வாடகை வசூலித்தல் மற்றும் கோயில்  வருவாயினங்களைப் பெருக்கும் வகையில் விரைந்து செயல்பட வேண்டும்’ என்பது போன்ற நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள அமைச்சர் உத்தரவிட்டார்.