வரி வசூல் சாதனை

நிறுவன வரி, சுங்க வரி, ஜி.எஸ்.டி வரி வசூல் உள்ளிட்ட பல வரிகளும் சேர்த்து நாட்டின் மொத்த வரி வசூல் மார்ச் 31 வரையிலான நிதியாண்டில் 34 சதவீதம் அதிகரித்து, 27.07 லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளது. இது, கடந்த 2020 – 2021ம் நிதியாண்டில் 20.27 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. அரசு வரி வசூலுக்கு ரூ. 22.17 லட்சம் கோடி இலக்கு நிர்ணயித்திருந்த நிலையில், இலக்கை தாண்டி வரி வசூலாகியுள்ளது. நேரடி வரி வசூல் தனி நபர்கள் செலுத்தும் வருமான வரி, பெரு நிறுவன வரி ஆகியவற்றை உள்ளடக்கிய நேரடி வரிகள் ரூ. 14.10 லட்சம் கோடி வசூலாகியுள்ளது. இது கடந்த நிதியாண்டினை காட்டிலும் 49 சதவீதம் அதிகம். மறைமுக வரி வசூல் கடந்த ஆண்டினை காட்டிலும் 48 சதவீதம் அதிகரித்து, 1.99 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. இதேபோல மத்திய சரக்கு சேவை வரி உள்ளிட்ட வரி வகை 30 சதவீதம் அதிகரித்து, 6.95 லட்சம் கோடி ரூபாயாக வசூலாகியுள்ளது. எனினும் கலால் வரியானது 0.2 சதவீதம் குறைந்து, 3.90 லட்சம் கோடி ரூபாயாகவும் சரிவினைக் கண்டுள்ளது.