சச்சினுக்கு சஞ்சய் வக்காலத்து

ரிலையன்ஸ் நிறுவன அதிபர் அம்பானி வீட்டருகே காரில் வெடிபொருட்கள் சிக்கிய வழக்கில், அக்காரின் உரிமையாளர் ஹிரேன் மன்சுக் விசாரிக்கப்பட்டார். சில நாட்களுக்குப் பின் ஹிரேன், ‘தானே’ கழிமுகப் பகுதியில் சடலமாக மீட்கப்பட்டார். இந்நிலையில், இந்த சம்பவத்தில் காவல்துறை உதவி ஆய்வாளர் சச்சின் வாசேவுக்கு தொடர்பு இருப்பதாக பா.ஜ.க. குற்றம்சாட்டியது. ஹிரேன் மன்சுக்கின் மனைவியும் கணவரின் மரணத்தில் சச்சின் வாசேவுக்கு தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டினார். இவ்வழக்கை மாநில அரசு, குற்றப்புலனாய்வு பிரிவில் இருந்து பொதுமக்கள் குறைதீா்ப்பு மையத்திற்கு மாற்றியது. இச்சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமையான என்.ஐ.ஏவும் தனியாக விசாரித்தது. திஹார் சிறையில் இருக்கும் பயங்கரவாதிகளுக்கு இதில் தொடர்பு இருந்தது தெரியவந்தது. என்.ஐ.ஏ. அதிகாரிகள் சச்சின் வாசேவிடம் விசாரணை நடத்தினர். இந்த சதிச் செயலில் அவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்ததால் அவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், ‘சச்சின் வாசே மிகவும் நேர்மையான, திறமையான அதிகாரி, மத்திய முகமைகள் தொடர்ந்து மும்பைக்குள் நுழைந்து, மும்பை போலீசாரின் நம்பிக்கையை குலைக்கின்றன’ என சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் சச்சின் வாசேவுக்கு வெளிப்படையாகவே ஆதரவு தெரிவித்துள்ளார்.