ரெம்டிசிவர் பதுக்கியவர் கைது

ஹையாட் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் தலைமை செயலதிகாரியான அல்தமாஷ் என்பவர் ரெம்டெசிவர் மருந்தை பதுக்கி அதனை ஒரு மருந்து குப்பியை ரூ. 40,000 முதல் 50,000 வரை விலை வைத்து கள்ள சந்தையில் விற்று வந்துள்ளார். இதன் மூலம் அவர் ரூ. 40 லட்சத்திற்கும் அதிகமாக முறைகேடாக சம்பாதித்துள்ளார். இது குறித்த தகவலின் அடிப்படையில் விசாரித்த உத்தரபிரதேச காவல்துறை அவரை கைது செய்ததுடன் அவரிடம் இருந்து ரூ. 36 லட்சம், 70 ரெம்டெசிவிர் மருந்து குப்பிகளை மீட்டுள்ளது. அல்தமாஷ் கடந்த காலங்களில் எய்ம்ஸுடன் தொடர்பு கொண்டிருந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.  ரெம்டெசிவர் தேவைப்படும் நோயாளிகளுக்கு அது கிடைக்க மத்திய அரசு பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகிறது. ரெம்டெசிவர் மருந்து தேவைப்படும் நோயாளிகளுக்கு இலவசமாக வழங்கப்படும் என்று உத்தரபிரதேச அரசு கடந்த திங்கட்கிழமை அறிவித்தது. மேலும், தனியார் கிளினிக்குகளில் ஊசி கிடைக்கவில்லை என்றால், அதை சந்தையில் வாங்கி குறிப்பிட்ட தனியார் கிளினிக்கிற்கு வழங்குவதற்கும் சம்பந்தப்பட்ட மாவட்ட நீதிபதி பொறுப்பேற்க வேண்டும் எனவும் உ.பி அரசு தெரிவித்துள்ளது.