400 ஆண்டுகளாகவே சர்ச் நோக்கம் சமூக நீதியல்ல மதமாற்றமே

கிறிஸ்தவர்கள் ஹிந்துக்களிடையே சாதித் தீமைகளை கூறி மதமாற்றுகிறார்களே, அது ஏன்? ’ஹிந்து மதத்தை குறை கூறும் தகுதி தனக்கு உண்டு’ என்ற எண்ணம் அவர்களுக்கு. ஆனால், கிறிஸ்தவர்களின் தலைவர் போப்பின் அனுமதியுடன் சாதி / பிரிவினை / தீண்டாமை ஆகியவற்றை அவர்களே கடைபிடிப்பதை வசதியாக மூடிமறைக்கப் பார்க்கிறார்கள்.பட்டியல் சமூகத்திலிருந்து கிறிஸ்தவர் ஆனவர்களை பாதிரியாக நியமனம் செய்வதிலும், “தலித்கிறிஸ்தவர்”களை சர்ச் நிர்வாகத்திலிருந்து முற்றிலுமாக விலக்குவதிலும் கிறிஸ்தவ தலைமை பீடம் முனைப்பாக இருப்பதைக் காட்டி “தலித் கிறிஸ்தவர்கள்” நீதி கோரியதால், 2020 டிசம்பர் 3 அன்று புதுச்சேரியில் உள்ள பாண்டிச்சேரி, கடலூர் மறைமாவட்டத்தின் தலைமையகத்தின் முன் போராட்டங்கள் வெடித்தன. “தலித் கிறிஸ்டியன்” என்ற வார்த்தை சூடான ஐஸ்கிரீம் என்பது போலத்தான்! ஏனெனில், கிறிஸ்தவத்துக்கு தன் சமத்துவத்தன்மை பற்றி பெருமளவில் பெருமிதம் உண்டு. தங்களிடையே எந்தவொரு பாகுபாட்டிற்கும் இதுவரை எந்த வாய்ப்பும் இல்லை என்று அது கூறிக்கொள்கிறது.

“குறிப்பாக தலித் பாதிரியார்கள் நியமனம், சாதிப் பாகுபாடு / தீண்டாமை ஒழிய, மறைமாவட்ட நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் இங்கு வந்துள்ளோம்” என்றார், “தலித் கிறிஸ்தவ விடுதலை இயக்க” தமிழக மாநிலத் தலைவர் மேரி ஜான். இத்தகைய எதிர்ப்புகள் அதிகம் இல்லை. காரணம், ஹிந்து மதத்திலிருந்து கிறிஸ்தவத்திற்கு மாறியவர்கள், அப்பட்டமான பாகுபாட்டையும் அதன் அவலத்தையும் சகித்துக் கொள்கின்றனர். எழும் கேள்வி இதுதான்: பாரதத்தில் சர்ச்சின் கவனம் எதில்? (கூறப்படுவது போல்) சமூக நீதியிலா, மத மாற்றத்திலா? சாதியைச் சொல்லி ஹிந்துக்களை மாற்றுகிறார்களே, கிறிஸ்தவம் சமூக நீதியை உறுதிப்படுத்த முயற்சித்ததா? கிறிஸ்தவத்தில் எப்போதாவது சமத்துவம் இருந்ததா?

ஐரோப்பாவின் கொடிய தீண்டாமை

ஆரம்பகால கிறிஸ்தவ மிஷனரிகள் ஐரோப்பாவிலிருந்து வந்தவர்கள். 16ம் நூற்றாண்டு ஐரோப்பா சமத்துவத்திற்கு பேர்போன சமூகம் அல்ல. மாறாக, அங்கே சமுதாயத்தின் பல பிரிவினர் ஒதுக்கி வைக்கப்பட்டவர்களாக, வெளியேற்றப்பட்டவர்களாக கருதப்பட்டனர்.
600 – 800 ஆண்டுகளுக்கு முன்பு பாரதத்திலிருந்து ஐரோப்பாவின் பல்வேறு பகுதிகளுக்கு குடி பெயர்ந்த ரோமா ஜிப்சிகளை அந்த சமூகம் நடத்திய விதமே அதை நிரூபிக்கும். அவர்களின் பாகுபாடு / படுகொலைகள் / தாக்குதல் இன்று வரை தொடரத் தானே செய்கிறது? நாஜி ஹிட்லர் தர்பாரில் குறைந்தது 15 லட்சம் ரோமாக்கள் கொல்லப்பட்டனர். ஐரோப்பாவின் ‘ககோட்கள்’ வெளியேற்றப் பட்டவர்களாகக் கருதப்பட்டு கிராமங்களின் விளிம்பில் வாழ வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ‘ககோட்கள்’ கிட்டத்தட்ட 700 ஆண்டுகளாக வெறுப்பு நிறைந்த பாகுபாடுகளுக்கு உட்படுத்தப்பட்டனர். தொழுநோயாளிகள் / பிற மதத்தவர்கள் / நரமாமிசவாதிகள் என ஒதுக்கி வைக்கப்பட்ட அவர்கள், ககோட்டரிஸ் என்று அழைக்கப்படும் குடிசைப் பகுதிகளில் உழல வேண்டியிருந்தது. அங்கு அவர்கள் தச்சு வேலை, கசாப்பு அல்லது மரண தண்டனை நிறைவேற்றும் வேலை செய்பவர்கள் அவ்வளவு தான்.

சர்ச்சிற்குள் நுழைவதற்கு அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்ட போது (பல சந்தர்ப்பங்களில் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது), அவர்கள் சபையின் மற்ற பகுதிகளிலிருந்து பிரிக்கப்பட்டனர். மேலும் ’நற்கருணை’ ஒரு நீண்டகுச்சியின் தயவாலே அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் சிவப்பு நிறத்தில் வாத்து அல்லது நெல்லிக்காய் அடையாளத்தை அணிய வேண்டியது கட்டாயம்.

பாரதத்தில் கொடூரமான சர்ச் வரலாறு

பாரதம் வந்த மிஷனரிகள் சமூகத்தின் சில பிரிவுகளுக்கு எதிராக வெளிப்படையாக பாகுபாடு காட்டிய ஐரோப்பிய சமூகத்தின் ஒரு பகுதியாக இருந்தனர். அங்கு கிறிஸ்தவர் அல்லாதவர்களை தூக்கிலிடப்படுவது அதிகாரப்பூர்வமாக அனுமதிக்கப்பட்டது. சூனியக்காரிகள் என்று பெண்கள் தூக்கிலிடப்படுவது வழக்கம் (சூனியக்காரிகள் மரணதண்டனை ஸ்காட்லாந்தில் 1727 வரை நடந்தது). கிறிஸ்தவரல்லாதவர்களின் மரண தண்டனை 1826 வரை தொடர்ந்தது. கிறிஸ்தவ மிஷனரிகளின் வருகை எதற்கு? அவர்கள் ஒருபோதும் பாரதத்தில் சமத்துவ கிறிஸ்தவ சமுதாயத்தை உருவாக்க முயற்சிக்கவில்லை என்பதில் ஆச்சரியமில்லை. மாறாக, அவர்கள் ஹிந்து சமுதாய சாதிப் பிளவுகளை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றுவதற்கான கருவியாகவே பயன்படுத்தினர்.  அத்தகைய ஒரு கிறிஸ்தவ மிஷனரி ‘ராபர்ட் டி நொபிலி’ (Robert de Nobili).

மட்டமான மதமாற்று மோசடி

ஹிந்துக்களை மாற்றுவதற்கும் பாரதத்தில் கிறிஸ்தவத்தை விரிவுபடுத்துவதற்கும் ராபர்ட் டி நொபிலி பின்பற்றிய வழிமுறை அப்பட்டமான மோசடி. 1577ல் இத்தாலியில் பிறந்த இவர், ஏசு சபையின் (ஜெசூட்) பாதிரியாக 1605ல் பாரதம் வந்தார். 1606ல் மதுரை சென்றார். ஹிந்துக்களை மத மாற்றுவதற்கான அப்போதைய முறைகள் பயனுள்ளதாக இல்லை என்பதைக் கண்டறிந்தார். காவி ஆடை அணிந்து, தலையை மொட்டை அடித்து, மர செருப்பை அணிந்தார். தன்னை ‘தத்வ போதகர்’ என்று அழைத்தார். தன்னை ‘ரோமன் பிராமணர்’ என்று அழைத்துக் கொண்டு பூணூல் அணிந்தார்.

பைபிள் ’வேதம்’ ஆனது, சர்ச் ‘கோயில்’ ஆனது. போதகர் ‘சாமியார்’ ஆனார். சமஸ்கிருதம், தமிழ், தெலுங்கு மொழிகளில் தேர்ச்சி பெற்றார். ராபர்ட் டி நொபிலி கற்பிப்பது ஹிந்து மதத்தின் மற்றொரு கிளை என்று உண்மையாக நம்பிய ஏராளமான ஹிந்துக்களை இது ஈர்த்தது. தான் ரோம் நாட்டைச் சேர்ந்த சன்யாசி என்று வலியுறுத்தினார். கிறிஸ்தவத்தை ‘பரங்குய் குலம்’ (பரங்குய் = ஃபிரங்கி அல்லது வெளிநாட்டு மதம் என்ற ரீதியில்) அழைத்தார். நொபிலி தனது நோக்கத்தை மேலும் கூர்தீட்ட அப்பட்டமான சாதி பாகுபாட்டைக் கடைப்பிடித்தார். ரோமானிய பிராமணராக நடித்துக் கொண்டிருந்ததால், ’பட்டியலினத்தை சேர்ந்த’ ஒருவருக்கு உடல் நிலை சரியில்லாமல் இருந்தால், நொபிலி அவரது குடிசைக்குள் போய் அவரைப் பார்க்க மாட்டார், அவரை வெளியே கொண்டுவர வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். ரகசியமாக இருளில், இரவில் மட்டுமே சக ஜெசூட் பாதிரிகளை சந்தித்தார்.

1623 ஜனவரியில், நொபிலியின் தந்திரோபாயங்கள் கிறிஸ்தவ தலைமைப்பீடமான போப்பால் அங்கீகரிக்கப்பட்டன. பாரதத்தில் கிறிஸ்தவர்களிடையே சாதி வாரி ஏற்றத் தாழ்வுகள் அதிகாரபூர்வமாக அனுமதிக்கப்பட்டன. “கிறிஸ்தவ உபநயனம்” (பூணூல் போடும் விழா) சர்ச்சில் நிகழ்த்தப்படும் என்பதுதான் போப் அனுமதி பெற்ற மிகவும் வேடிக்கையான அம்சம். போப் ஒப்புதல் கடிதம் பின் வருமாறு கூறுகிறது: “கோயிலில் அல்லது அவர்களின் பூசாரிகளில் ஒருவரிடமிருந்து பூணூல் பெறப்படக் கூடாது, ஒரு கத்தோலிக்க பாதிரியாரிடமிருந்து, அதை பெறும் போது, பரிந்துரைக்கப்பட்ட பிரார்த்தனைகளை ஓத வேண்டும். பூணூல் பெற்றவுடன் சொல்ல வேண்டிய கிறிஸ்தவமல்லாத மத பிரார்த்தனைகளும் மந்திரங்களும் கற்றுக்கொள்ளக்கூடாது, நிரந்தரமாக மறந்து விட வேண்டும். மூன்று இழைகளால் ஆன பூணூல் அணிவது, அவர்களின் சிலைகளுக்கு மரியாதை தருவதற்காக அல்ல, மாறாக ஆசீர்வதிக்கப்பட்ட கிறிஸ்தவத்தின் நினைவாக! மதமாறியவர்கள், ஏற்கனவே பூணூல் அணிந்திருந்தால் அதை எரிக்க வேண்டும், புதியதை கத்தோலிக்க பாதிரியிடமிருந்து பெற வேண்டும்.”

அதாவது, ஹிந்துக்களின் வேதங்களில் குறிப்பிடப்படாத அல்லது அனுமதிக்கப்படாத தீண்டாமைக்கு கிறிஸ்தவத்தின் மிக உயர்ந்த பீடமான போப்பின் ஒப்புதல் முத்திரை கிடைத்தது! ஆத்மாக்களை அறுவடை செய்வதே குறிக்கோளாக இருக்கும் போது, சமூக நீதியும் சமூக சீர்திருத்தமும் சர்ச்சுக்கு முக்கியம் இல்லை என்பதையே இது தெளிவாக நிரூபிக்கிறது. மதமாற்றம் செய்வதற்கு வசதியாக பிராமண மிஷனரிகள், தாழ்த்தப்பட்ட சாதி மிஷனரிகள் என்று இரு தனி வகுப்புகளை நொபிலி உருவாக்கினார். ’மேல் ஜாதி’ ஹிந்துக்களிடையே மதமாற்றம் செய்ய பூணூல் அணிந்த, பிராமண உடையணிந்த ’பிராமண மிஷனரிகள்’ பயன்படுத்தப்பட்டார்கள். முதல் பிராமண மிஷனரி பாதர் எஸ். மாயா. நொபிலி பிராமணர்களை சந்திக்கச் சென்ற போதெல்லாம் இவர் கூடவே செல்வார். நொபிலிக்கோ எப்போதும் காவி உடைதான், மார்பில் பூணூல்தான், கையில் கமண்டலம்தான்! அவரது சீடரோ மான் தோல், மரியாதைக்குரிய குடை சகிதம் பின்தொடர்வார்!

சாதிப் பாகுபாடு, தீண்டாமை எவ்வாறு தேவாலய கட்டிடக்கலையின் ஒரு பகுதியாக மாற்றப்பட்டது என்பதை, நொபிலியால் கட்டப்பட்ட சர்ச் கட்டிட பிளான் காட்டுகிறது. சர்ச்சின் பிரதான நுழைவாயில் உயர் சாதியினருக்காக ஒதுக்கப்பட்டிருந்ததை பிளான் காட்டுகிறது. ’தாழ்த்தப்பட்ட’ சாதிகள் வேறு நுழைவாயிலைப் பயன்படுத்த வேண்டியிருந்தது. சர்ச்சின் ஒவ்வொரு அம்சமும் – பலிபீடம், ஆராதனை, பாவமன்னிப்பு, பொது இடம், சமையலறை ஏன், முற்றத்தில் கூட மேல்சாதி, – பிறர் என தனித் தனியாகத்தான். சர்ச் சுவரில் ஒரு திறப்பு மூலம் மட்டுமே திருப்பலி, ஆராதனை போன்றவற்றை தாழ்த்தப்பட்டவர்கள் கேட்க வேண்டிஇருந்தது, இந்தப் பாகுபாட்டு முறை அன்றைய கால கட்டத்திலே கூட மிக அதிர்ச்சி அளிக்கக் கூடியதாக உள்ளது. சாதிகளிடையே ஏற்றத்தாழ்வு பார்ப்பது பெரிய விஷயமல்ல என்பது போல சர்ச் நடந்துக் கொண்டது. அதுமட்டுமல்ல, மதமாற்றுவதற்குக் காரணம் காட்ட சாதி ஏற்றத்தாழ்வுகளை திறமையாக பயன்படுத்தியது.

சாதியத்துக்கு சர்ச் அனுமதி

இன்றும் கிறிஸ்தவர்கள் ஹிந்து சாதி பாகுபாட்டைக் காட்டி ஹிந்து மதத்தை குறை கூறும் வாய்ப்பை தவறவிடுவதில்லை. சாதிப் பாகுபாடு / தீண்டாமை ஆகியவை போப் அனுமதி பெற்றதைப் பார்த்தோம். அதை இவர்கள் மூடிமறைக்கப் பார்க்கிறார்கள்.
கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றப்பட்டு பல தலைமுறைகளுக்குப் பிறகு, பெயரின் ஒரு பகுதியாக ஹிந்து சாதிப் பெயர் பயன்படுத்துவதை சர்ச் எதிர்க்கவில்லை. ஆந்திராவில், ‘ரெட்டி’, ‘சவுத்ரி’ போன்ற அடையாளங்களைப் பயன்படுத்தும், மூன்றாவது அல்லது நான்காம் தலைமுறை கிறிஸ்தவர்களைக் காணலாம். சர்ச் நோக்கம் சமூக நீதி அல்ல, சமூக ஏற்றத்தாழ்வுகளை மேலும் வளர்ப்பதே என்பதால்தான். இந்த 21ம் நூற்றாண்டில் கூட, மேரி ஜான் போன்றவர்கள் தலித் கிறிஸ்தவ விடுதலை இயக்கங்கள் போன்றவற்றின் மூலம் போராடும் கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.
கட்டுரையாளர்: ஆராய்ச்சியாளர், ‘சென்டர் பார் சவுத் இந்தியன் ஸ்டடீஸ்’ஹைதராபாத்,
தமிழில்: கணேசன், சென்டர் பார்
சவுத் இந்தியன் ஸ்டடீஸ். சென்னை
நன்றி: ஆர்கனைஸர்.