அன்றலர்ந்த செந்தாமரையின் வென்றதம்மா!

நடக்கும் என்பவை நடக்காமல் போவதும் நடக்காது என்பவை நடந்துவிடுவதும் அசாதாரண நிகழ்வுகள் அன்று. சில நிகழ்வுகள் எதிர்பார்த்தபடி நடக்காவிட்டால் வேதனை ஏற்படுவது இயல்பு. இது ஒருபுறம் இருக்க, எதிர்பாராத சில நிகழ்வுகள் திடீரென்று நடைபெறும்போது ஆனந்த அதிர்ச்சி ஏற்படுவதையும் குறிப்பிடாமல் இருக்கமுடியாது.
நினைத்தபடி காரியம் நடந்துவிட்டால் மகிழ்ச்சி அடைவதோ, சற்றும் நினைக்காத காரியம் நடந்துவிட்டால் வேதனைப்படுவதோ கூடாது. ஆனால் இந்த மனப்பக்குவம் அனைவருக்கும் எளிதில் வாய்த்துவிடாது. காலம் போதிக்கும் அனுபவ ஞானத்தை அகவயப்படுத்திக்கொள்வது படிப்படியாகவே நனவாகும். எதிர்பாராத மகிழ்ச்சிகரமான நிகழ்வுகளை சந்திப்பது பரவசமளிக்கக் கூடியதே. ஆனால் எதிர்பாராத அதிர்ச்சிகரமான நிகழ்வுகளை சந்திப்பது மனோதிடத்தையே அசைத்துப் பார்த்துவிடும் என்பதை உளவியல் ஆய்வா ளர்களே உரைக்கின்றனர்.
ராமபிரான் இளம்பிராயத்திலேயே மனப்பக்குவம் கொண்டவராக விளங்கினார். அவரது சிறப்புப் பண்புகளின் சிகரமாக இதைக் குறிப்பிடலாம். ஒருவர் தனக்கு கிடைக்கவிருந்த அரச பதவியை இழக்க நேரிட்டால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகாமல் இருக்கமுடியாது. நிகழ்கால அரசியல்வாதிகள் பதவிக்காக எதையும் செய்யத் தயங்கமாட்டார்கள் என்பதை நாம் கண்கூடாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இப்பின்னணியில் ராமனின் அணுகுமுறையை உற்று நோக்கினால்தான் அவரது பெருமையை நன்கு புரிந்துகொள்ள முடியும்.
ராமபிரான் பட்டாபிஷேகத்துக்கு நாள் குறிக்கப்பட்டு விட்டது. அரியணை ஏறும் தருணம் நெருங்கிக்கொண்டிருந்த வேளையில் சிற்றன்னை கைகேயி நாட்டை பரதனே ஆள்வான், நீ 14 ஆண்டுகள் காட்டுக்குச் செல்வாயாக என்று மன்னர் தசரதன் ஆணையிட்டுள்ளார் என ராமனை நோக்கி கூறினார். இதை செவிமடுத்த ராமபிரானின் மனத்தில் கலக்கம் சற்றும் ஏற்படவில்லை. மாறாக உள்ளத்தில் உவப்பு ஊற்றாகப் பொங்கியது.
ஏற்கனவே செந்தாமரையின் பொலிவு ராமபிரானின் முகத்தில் மிளிர்ந்தது. சிற்றன்னை கைகேயி கூறியவுடன் அப்போது தான் மலர்ந்த செந்தாமரையின் பொலிவை ராமபிரானின் வதன வனப்பு வென்றுவிட்டது என கவிச்சக்கரவர்த்தி  கம்பர் மிக நேர்த்தியாக சித்திரித்துள்ளார்.

இப்பொழுது, எம்மனோரால் இயம்புதற்கு எளிதே? – யாரும்
செப்ப அருங் குணத்து இராமன் திருமுகச் செவ்வி நோக்கின்;
ஒப்பதே முன்பு பின்பு; அவ் வாசகம் உணரக் கேட்ட
அப் பொழுது அலர்ந்த செந்தாமரையினை வென்றதம்மா!
என்ற கம்பரின் கவிக்கமலம், ராம பக்தர்களின் உள்ளத்தடாகத்தில் என்றென்றும் புகழ் மணம் பரப்பிக்கொண்டே இருக்கும் என்பது திண்ணம்.
நிகரியவாதி