அயோத்தி ராமஜென்ம பூமி வரலாறும் வெளிவந்த உண்மைகளும்

பல நூறு ஆண்டுகளுக்கு பின்னர்,  2019-ல் ராமர் பிறந்த இடமான அயோத்திக்கு ஒரு நிரந்திர தீர்வு ஏற்படும் வகையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு அமைந்துள்ளது. ராம ஜென்ம பூமி  வரலாறு பற்றிய ஆதாரங்கள்  பல வழிகளில் கிடைத்துள்ளது.    தொல்லியல் துறையின் மூலம் நடத்திய அகழ்வாய்வு முடிவுகள், இடிபட்ட இடத்தில் கிடைத்த  ஆவணங்கள்,  இலக்கியம் மற்றும்  யாத்திரிகர்கள் மூலம் கிடைத்த ஆவணங்கள் மூலம் உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இதுவரை அயோத்தியில் ஐந்து முறை அகழ்வாய்வுகள் நடத்தப்பட்டுள்ளன.   1862 – 1863ல் ஏ.இ. கன்னிங் ஹாம்  நடத்திய ஆய்வு,  இரண்டாவது ஆய்வு 1889 முதல் 1891 வரை  ஏ.ப்யூரர் நடத்தியது,  பேராசிரியர் ஏ.கே. நரேன்  1969 – 1970-ல் நடத்திய மூன்றாம் ஆய்வும்,   பேராசிரியர் பி.பி லால்  1975 – 1976ல் நடத்திய  நான்காம் ஆய்வு,   அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் உத்திரவின் படி 2003-ல் ஏ.எஸ்.ஐ. மூலம் நடத்தப்பட்ட ஐந்தாம் முறை ஆய்வு. மேற்படி ஐந்து முறை நடத்திய ஆய்வின் படி கூட கோயில் இடிக்கப்பட்டு, அதன் மீது மசூதி கட்டப்பட்டது என்பதே அறிக்கையின்  உள்ளடக்கமாகும்.
ஹிந்துக்களின் ஆலயங்கள் தனித்துவ மிக்கவை. ஹிந்து ஆலயங்களின் முத்திரைகள், விமானங்கள், கர்ப்ப கிரஹங்கள், மண்டபங்கள், தூண்கள், சாளரங்கள், ஜஹதி, மேற்கூரைகள் என ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு முத்திரை பதித்திருப்பார்கள். இவை அனைத்தும் அயோத்தியில் ஸ்ரீ ராமர் ஆலயத்தின் அகழ்வாய்வில் கிடைக்கப் பட்டன. அகழ்வாய்வில் 12 தூண்கள் கிடைக்கப் பெற்றன.   இந்த தூண்கள் இருந்ததற்குரிய கட்டுமான அடித்தளங்களும் கண்டு பிடிக்கப்பட்டன.    அதோடு 12 தூண்கள் மசூதி கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்பட்டிருந்தன.
அந்த தூண்களின் பூர்ண கலசமே அவை ஹிந்து கட்டுமானத்தின் ஒரு பகுதி என்பதன் சான்று தான்.  மேலும் நடத்திய அகழ்வாய்வில் 50க்கும் மேற்பட்ட முழு தூண்கள் கிடைத்திருக்கிறது. 17 வரிசைகளில் இந்த தூண்கள் இருந்ததற்குரிய கட்டுமான அடித்தளங்களும் அகழ்வாய்வில் கண்டறியப்பட்டது.  263க்கும் மேற்பட்ட நாக கன்னிகைகள், நடன மாதர்கள், யட்சர்கள், கந்தர்வர்கள், வாத்தியம் இசைப்பவர்கள், துவார பாலகர்கள் என்று ஹிந்து ஆலய லட்சணத்திற்குரிய அனைத்து ஆதாரங்களும் கண்டறியப்பட்டு நீதி மன்றத்திலும் அதற்குரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது
1992 டிசம்பர் மாதம் 6ம் தேதி, கர சேவை நிகழ்ச்சிக்குப் பின்,    அங்குள்ள இடிபாடுகளை நீக்கும் பொழுது 12ஆம் நூற்றாண்டை சார்ந்த விஷ்ணு ஹரி சிலா பலகை இடிபாடுகளில் சிக்கி இருந்தது. அதில் மிகத் தெளிவாக இந்த ஆலயம் வாலியை வதைத்தவனுக்கு, 10 தலை உடைய ராவணனை கொன்ற ராகவராமனுக்கு சமர்ப்பணம் செய்யப்பட்ட ஆலயம் என்று தெளிவாக  குறிப்பிட்டுள்ள கல்வெட்டும் கண்டுபிடிக்கப்பட்டது.   மேலும் ஹரி விஷ்ணு  கல்வெட்டில் மொத்தம் 20 வரிகள் இருந்தன.   இந்த கல்வெட்டு 1.10 மீட்டர் நீளமும், 0.56 மீட்டர் அகலமும் கொண்டதாகும். 11, 12ம் நூற்றாண்டைச் சார்ந்த காட்வாலா அரச வம்சம் விஷ்ணுவிற்கு அர்ப்பணித்த ஆலயம் என்ற கல்வெட்டு ஆதாரம் கிடைத்திருக்கிறது. பாப்ரி மசூதியின் கட்டுமானத்தில் ஆலயங்களில் இருக்கும் பூர்ண கலச தூண்களை உபயோகித்து கட்டியிருப்பதையும்  ஆதாரங்களாக உச்ச நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது. இதே போன்ற கட்டுமானத்தை  குதுப்மினாருக்கு அருகில் உள்ள குவாதுல் இஸ்லாம் மசூதியில் தற்போதும் பார்க்கலாம். அந்த மசூதி கட்டப்பட்டது பற்றிய சான்றுகளை சொல்லும் பொழுதே 23 ஆலயங்களை அழித்து கட்டப்பட்ட மசூதி என்று இருக்கிறது. அதே போல தூண்கள் இருந்தது.
தொல்லியல் மூலம்  கிடைத்த ஆதாரங்களில் முக்கியமானவை, ஒரே அளவிலான 30 தூண்களின் அடிப்புறங்கள் கிடைத்துள்ளன. தூண்கள் இரண்டு வரிசையாக அடுத்தடுத்து இணையாக அமைக்கப்பட்டுள்ளன. உடைந்த நிலையில் கிடைத்த கருங்கல் துண்டுகளில் ஹிந்து மதத்தின் சின்னங்களான தாமரை, கவுஸ்துப மணி (விஷ்ணுவின் மார்பில் இருப்பது), முதலை ஆகியவற்றின் புடைப்புச் சிற்பங்கள் காணப்பட்டன.      ஒரு கருங்கல் பலகையின் ஒரு பகுதி 20 அடி ஆழத்தில் எடுக்கப்பட்டது. தேவநாகரி எழுத்தில் ஐந்து எழுத்துக்கள் கொண்ட ஒரு ஹிந்துப் பெயர் பொறிக்கப்பட்டிருந்தது.   எட்டு முனைகள் (அஷ்ட கோணம்) கொண்ட யாக குண்டம் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டது.
அகழ்வாய்வில் கிடைத்த கல்வெட்டு சம்ஸ்கிருதத்தில் மிக உயர்ந்த நடையில் எழுதப்பட்டுள்ளது. இதன் ஒரு சிறிய பகுதி மட்டும் செய்யுளில் அமைந்துள்ளது. இக்கல்வெட்டு, அதில் குறிப்பிடப்பட்டுள்ள கோயிலின் சுவரில் பதிக்கப்பட்டிருந்தது. இதன் 15 வது வரி, இக்கோவில் கற்களால் (சிலா சம்ஹதி கிரக) அமைக்கப்பட்டதாகவும், தங்கக் கலசத்துடன் (ஹிரண்ய கலச, ஸ்ரீசுந்தரம்) கூடியதாகவும், மற்றக் கோயில்களுடன் ஒப்பிட முடியாத அழகு பொருந்தியதாகவும் முன்பு இருந்த அரசர்களால் (பூர்வைரபியக்ருதம் க்ருதம்ந்ரு பாதிபிர்) கட்டப்பட்டதாகவும் கூறுகிறது. “இந்த அற்புதமான (அதி அத்புதம்) கோயில், சாகேத மண்டலத்தில் அமைந்துள்ள கோயில் நகரமான (விபுத் ஆலாய்னி) அயோத்தியில் (19 வது வரியில்), பலி மற்றும் ராவணனைக் கொன்றழித்த இறைவன் விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது’
வரலாற்று சான்றுகள் அக்பர் நாமாவின் ஆசிரியருமான அபுல் பஸல் தன் ‘அய்னி இ அக்பர்’ நூலில்  ‘ஜென்மஸ்தான்’ என்று அயோத்தியைப் பற்றி குறிப்பிட்டுள்ளார்.    இதற்கு முன் அங்கு மசூதி இருந்திருந்தால்,  ஜென்மஸ்தான் என குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை. ஜெசூட்ஸ் பாதிரியான ஜோஸப் டிபண்ட்தாலெர்  (Joseph Tieffenthaler)  1740-ல் தனது பயணம் பற்றி குறிப்பிடும் போது,  அயோத்தியில் வழிபாட்டிலிருந்த குழந்தை ராமன் ஆலயம், சீதையின் சமையலறை, சொர்க்க வாயில்  பற்றி நேரில் பார்த்து பதிவு செய்திருக்கிறார்.   இவரது கருத்துக்கு ஆதரவாக ஏ.கே. சட்டர்ஜி ஒரு முழு விவர அறிக்கையை  வெளியிட்டார்.  மேலும், டிபண்ட்தாலெர் எழுதிய ஆவணத்திற்கு ஆதரவாக முன்னாள் அலகாபாத் அருங்காட்சியகத்தின்  இயக்குநர் டாக்டர் எஸ்.பி.குப்தா ‘Manthan’ என்ற இதழில் இரண்டு கட்டுரைகள் எழுதியுள்ளார்.   மேற்படி கட்டுரையில்   1767-ல் டிபண்ட்தாலெர்  பற்றியும்,  அவரது விஜயத்தை வலியுறுத்தி 1838ல்  Montgomery Martin      அளித்த அறிக்கையும்,   இதற்கு  இணையாக  1608- – 1611ல்   William Finch      எழுதிய ஆய்வு அறிக்கையையும்   கட்டுரையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
லக்னோவில் புகழ் பெற்ற இஸ்லாமிய அகாடமியான ‘நட்வத்-உல்- உலாமா’வின் ரெக்டரான மௌலானா ஹக்கீம் சயீத் அப்துல் ஹய் இந்தியா என்ற அரேபிய மொழியில் எழுதிய புத்தகத்தை 1973ல் உருது மொழியிலும்,  1977 ஆங்கிலத்திலும் மொழி பெயர்த்உள்ளார்.  மேற்படி நூலில்   Hindustan ki Masjidein        என்ற தலைப் பில் 17 பக்கங்களில்   இந்தியாவில் உள்ள  7 மசூதிகளைப் பற்றி எழுதியுள்ளார்.   ஏழு மசூதிகளும்    ஹிந்துக் கோயில்கள் இடிக்கப்பட்டு, இடிக்கப்பட்ட கட்டுமான பொருள்களைக் கொண்டு அதன் மீது மசூதி கட்டப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அதில் ஒன்று அயோத்தி.  1813 — 1814 வருடங்களில் கிழக்கிந்திய  கம்பெனிக்காக நில அளவை செய்யும்பொழுது, அயோத்தியிலும் சர்வே நடத்தப்பட்டது.
இது பற்றி  சர்வே நடத்திய பொறியாளர் பிரான்சிஸ் புக்கானன், வழிபாட்டில் இல்லாத மூன்று கும்மட்டங்களை பற்றியும் அங்கு இருந்த சுவர்களில் பொறிக்கப்பட்டிருந்த கல்வெட்டுகளில் ஹிந்து தெய்வங்களின் சிற்பங்கள் இருந்ததையும் குறிப்பிட்டிருக்கிறார். மேலும், 1528 முதல் 1668 வரையிலான காலத்தில் அங்கு மசூதியோ, முஸ்லிம் வழிபாட்டிடமோ இருந்ததற்குரிய சான்றுகள் இல்லையென குறிப்பிட்டுள்ளார். 1598-ல் அவந்த பிரதேசத்தில்  குறிப்பாக அயோத்தியில் ராம நவமி கோலாகலமாக கொண்டாடப்பட்டது பற்றி அய்ன் – இ – அக்பரின் மூன்றாம் பாகத்தில் விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
முதன்மையான சீக்கிய குரு, குரு நானக் தேவ்  1510 – 1511 வருடங்களில் அயோத்தியில் குழந்தை ராமன் ஆலயத்திற்கு வந்ததாக  சீக்கிய குறிப்புகளும் ஆவணங்களும்   உள்ளன. 2003-ல் ஜனவரியில் கனடா நாட்டைச் சேர்ந்த நிலவியல் அறிஞர் கிளவுட் ரோபில்லார்ட் என்பவர்  ரேடர் அலைகள் மூலம் ஆய்வு செய்தபின்,  இந்த மசூதிக்கு அடிப்புறத்தில் சில கட்டடப் பகுதிகள் உள்ளன.   இக்கட்டடப் பகுதிகளில் உள்ள தூண்கள், அஸ்திவாரச் சுவர்கள் செங்கல் பாவிய தரைகள் ஆகியவை ஒரே காலத்தில் கட்டப்பட்ட தொன்மை வாய்ந்த கட்டடமாக இருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.1990 ஜனவரி 10 தேதியிட்ட நீதிபதி சுதிர் அகர்வாலின் தீர்ப்பின்படி, மாநில தொல்பொருள் துறையால்   எடுக்கப்பட்ட புகைப்படங்களைக் கொண்ட மூன்று தொகுப்பு ஆல்பங்கள் உள்ளன என்று பதிவு செய்கிறது. மாநில தொல்பொருள் துறை இயக்குநராக இருந்த டாக்டர் ராகேஷ் திவாரி (OPW-14) மூலம்  புகைப்படங்கள்  சரிபார்க்கப்பட்டன. அவற்றில், 204 புகைப்படங்களைக் கொண்ட வண்ண புகைப்படங்களின் ஒரு தொகுப்பு காகித எண் 200 சி 1 / 1-204 எனக் குறிக்கப்பட்டது. கருப்பு மற்றும் வெள்ளை புகைப்படங்களின் இரண்டாவது தொகுப்பில் 111 புகைப்படங்கள் உள்ளன, அவை காகித எண் 201 சி (1) / 1-111 என குறிக்கப்பட்டன.
இந்த ஆல்பங்களில் கசாட்டி கல் தூண்களின் புகைப்படங்கள் சர்ச்சைக்குரிய கட்டமைப்பின் பிற அம்சங்கள் இருந்தன,  மசூதி காலியிடத்தில் கட்டப்பட்டது கிடையாது, கோயிலை இடித்து கட்டப்பட்டது என  நீதிபதி சுதிர் அகர்வாலின் தீர்ப்பை   உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் சுட்டிக் காட்டியுள்ளது.இவ்வாறு பல்வேறு ஆதாரங்களை சமர்பித்த பின்னரும் கூட, வழக்கு நீண்டதற்கு முக்கியமான காரணம்,  மதசார்பற்றவாதிகளின்   குறுக்கு புத்தியும்  இடதுசாரி வரலாற்று ஆசிரியர்களாக தங்களை காட்டிக் கொண்ட, ரோமிலா தாப்பர்,  சர்வபள்ளி கோபால்,  பிப்பின் சந்தரா போன்றவர்களின்  தேவையற்ற வாக்குவாதமும்     இவர்களுக்கு ஆதரவான ஊடகங்களும்  முக்கியமான காரணிகளாகும்.
– ஈரோடு சரவணன்