ராணி துர்காவதி

இந்தியப் பெண்கள், ஆண்களுக்கு சிறிதும் சளைத்தவர்களல்ல; போர்முனையிலும் கூட சாகசங்களை நிகழ்த்தியவர்கள் என்பதற்கு பல சான்றாதாரங்கள் உள்ளன. அவற்றில் ஒன்றுதான், கோண்ட்வானா ராணி துர்காவதியின் தீரம் மிகு சரித்திரம்.

ராஜபுத்திர வம்சத்தைச் சேர்ந்த, சந்தேல் மன்னர் பரம்பரையில் மன்னர் கீர்த்திராயின் மகளாக பிறந்தார் துர்காவதி.

அவர் பரம்பரைக்கு ஆக்கிரமிப்பாளன் கஜினி முகமதுவை எதிர்த்துப் போரிட்ட பாரம்பரியம் உண்டு. அந்தப் பரம்பரையில் வந்த துர்காவதியும் தனது வீர பராக்கிரமத்தால் சரித்திரத்தில் நீங்கா இடம் பெற்றுவிட்டார்.

கோண்ட்வானா ராஜ்ஜியத்தின் மன்னர் சங்க்ராம் ஷாவின் மைந்தர் தல்பத் ஷாவை திருமணம் செய்தார் துர்காவதி. இரு நாட்டுவீரர்களும் இணைந்து ஷேர்ஷா ஷுரியின் படையெடுப்பை முறியடித்தனர். ஷேர்ஷா கொல்லப்பட்டார். அதே ஆண்டு ராணி துர்காவதி வீர்நாராயண் என்ற மகனை ஈன்றார்.

வீர்நாராயணனுக்கு ஐந்து வயது இருக்கும்போது மன்னர் தல்பத்ஷா இறந்தார். மகனை முன்னிறுத்தி, ராணி துர்காவதியே நாட்டை ஆட்சி செய்தார். தனது மதியூகமும் நிர்வாகத் திறனும் கொண்டு நாட்டை சிறப்பாக ஆண்டுவந்தார்.

ராணி துர்காவதியின் நாட்டின் செல்வச் செழிப்பு குறித்து கேள்வியுற்ற அக்பர் அதனையும் ஆக்கிரமிக்க விரும்பினார். தனது தளபதியை படையெடுக்கப் பணித்தார். முகலாயப் பேரரசின் படைபலத்தை விளக்கிய திவான், அக்பருடன் சமாதானமாகப் போவதே நல்லது என்று ராணிக்கு அறிவுரை கூறினார்.

ஆனால், அவமானப்பட்டு உயிர் வாழ்வதைவிட, தன்மானத்துடன் சாகவே விரும்புகிறேன் என்று முழங்கிய ராணி துர்காவதி; தனது படைகளை போருக்கு ஆயத்தப்படுத்தினார்.

போரில் ராணி துர்காவதியின் கரமே ஓங்கியது. போருக்கு முன்னதாக, இரவே முஸ்லிம் படைகளை தாக்க எண்ணிய ராணி துர்காவதி அது போர் தர்மமல்ல என்பதால் இரவுத் தாக்குதலைக் கைவிட்டார்.

மறுநாள் தில்லியிலிருந்து வந்த பெரும் பீரங்கிப்படை முன் தாக்குப்பிடிக்க முடியாமல் கோண்ட்வானா வீரர்கள் பலியாகினர். வீர் நாரயணும் படுகாயமுற்று போர்க்களத்திலிருந்து விலகினார். ஆயினும் ராணி துர்காவதி சளைக்காமல் போரில் ஈடுபட்டார்.

அப்போது எதிரிப்படையினரின் அம்புகள் ராணி துர்காவதியின் கழுத்தை துளைத்தன. தோல்வியுற்று எதிரியின் கரத்தில் சிக்குவதை விட, உயிரை மாய்த்துக் கொள்வதே சிறப்பானது’ என்று ராணி துர்காவதி, தனது குறுவாளால் மார்பில் குத்திக்கொண்டு போர்க்களத்திலேயே (1564, ஜூன் 24) உயிர்நீத்தார்.