மத்திய அரசா ஒன்றிய அரசா?

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்த தி.மு.க தலைமையிலான அரசு, மத்திய அரசை ஒன்றிய அரசு ஒன்றே அழைத்து வருகிறது. இதற்கு கடும் விமர்சனங்கள் எழுந்தன. இதற்கு முன்பு அண்ணா, கருணாநிதிகூட தங்களது ஆட்சி காலங்களில் இதுபோன்ற சொல்லை பயன்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், சட்டப்பேரவை கூட்டத் தொடரில் ஒன்றிய அரசு என்ற சொல்லுக்கு பொருள் என்ன என்று பா,ஜ,க எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த முதலமைச்சர் ஸ்டாலின், “கூட்டாட்சி தத்துவ அடிப்படையில் ஒன்றிய அரசு என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. அரசியலமைப்பு சட்டத்தில் என்ன கூறப்பட்டுள்ளதோ, அதன்படியே இந்த சொல் பயன்படுத்தப்படுகிறது. மேலும், ஒன்றிய அரசு எனக் கூறுவதை குற்றமாக பார்க்க வேண்டாம். ஒன்றிய அரசு என்ற சொல்லையே தமிழக அரசு தொடர்ந்து பயன்படுத்தும்,” எனக் கூறியுள்ளார்.

இது ஒன்றிய அரசா?

இதற்கு ஒரு எளிய உதாரணம் அமெரிக்கா. பல மாநிலங்கள் ஒன்று சேர்த்து உருவாக்கியதுதான் அமெரிக்கா. ஆனால் பாரதம் பல மாநிலங்களை கொண்டது. அதாவது பாரதம் என்ற நம் தாய்நாடு, தன் நிர்வாக வசதிக்காக உருவாக்கியது தான் மாநிலங்கள். அப்படியெனில், பாரதம் மாநிலங்களை கொண்ட ஒரு முழுமை. அதனை பிரிக்க முடியாது. அது மாநிலங்களால் ஆன ஒன்றியம் அல்ல. மாநிலங்களின் கூட்டமைப்பும் அல்ல. இதை முதல்வரும் அவரது தி.மு.க அரசும் தெரிந்துகொள்ளாமல் இருப்பது நம் சாபக்கேடு.

மொழிவாரி பிரிப்பு:

பாரதத்தில் மொழிவாரி மாநில உருவாக்கத்துக்கு முன்பாக தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகியவை ஒரே மாநிலமாகத்தானே இருந்தன? இன்றும் புதுவை மக்களும், தமிழக மக்களும், கேரளாவில் சில பகுதியை சேர்ந்தவர்களும் பேசுவது தமிழ் மொழி. ஆனால் வாழ்வதோ வேறு வேறு மாநிலங்கள். அதேபோல சமீபத்தில் பிரிக்கப்பட்ட தெலுங்கானா மக்களும் அந்திர மக்களும் பேசுவது தெலுங்குதான், ஆனால் அவை இரண்டும் வேறு வேறு மாநிலங்கள். இன்னும் சொல்லப்போனால், நாளையே தமிழகமே வடக்கு, தெற்கு என தனித்தனி மாநிலங்களாக பிரிக்கப்படலாம். அதற்கு மத்திய அரசுக்கு உரிமையும் உள்ளது. அம்பேத்கர் வகுத்துத் தந்த இதை அரசியலமைப்பு சொல்கிறது. ஆனால் நாம் பேசும் மொழி என்னவோ தமிழ்தான். இதன் மூலம், நமது நாடு ஒன்றுதான். அது நிர்வாக வசதிக்காகவே பல மாநிலங்களை உருவாக்கியது என்பது தெளிவாகிறது.

எப்படி அழைக்க வேண்டும்?

நமது அரசியலமைப்பில், நமது அரசு தெளிவாக இந்திய அரசு (Government of India) அல்லது மத்திய அரசு (Central Government) என்று மட்டுமே தெளிவாக குறிப்பிடப்படுகிறது. இதை தவிர வேறு எப்படி நமது அரசை அழைத்தாலும் அது குற்றமே. அது, நமக்கு சுதந்திரம் பெற்றுத்தந்த பல லட்சம் சுதந்திர போராட்ட வீரர்கள், நமக்கு அரசியலைப்பு சட்டத்தை உருவாக்கித் தந்த அம்பேத்கார், அவர் எழுதிய அரசியலமைப்பு சட்டம் ஆகியவற்றை ஒருசேர அவமதிப்பதற்கு ஒப்பாகும்.

மதிமுகன்