தமிழகத்தில் பிரதமர் மோடி

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நடந்த தேசிய ஜனநாயக கூட்டணி பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். ‛வெற்றிவேல் வீரவேல்’ என கோஷத்துடன் தன் பேச்சை துவக்கிய மோடி, ‘ஐ.நா சபையில் உலகின் தொன்மையான மொழியான தமிழில் சில வார்த்தைகளில் பேசியது மகிழ்ச்சி அளிக்கிறது. நாங்கள் வளர்ச்சி திட்டத்தை அடிப்படையாக வைத்து ஓட்டு கேட்கிறோம். தமிழ்மொழி, கலாசாரத்தை வளர்க்க படிக்க வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மருத்துவத்தை தாய்மொழியில் அளிக்க முயற்சிக்கிறோம். தேவேந்திர குல வேளாளர் பிரச்னையை தீர்க்கப்பட்டுள்ளது. மக்களுக்கு சேவையாற்ற எங்கள் கூட்டணி உங்கள் ஆதரவை வேண்டி நிற்கிறது.

காங்கிரஸ் தி.மு.க கூட்டணிக்கு வாரிசு அரசியலே முக்கியம். அக்கட்சி கூட்டணியினர் பேச்சில், செயல்திட்டமோ, நேர்மறை செய்திகளோ இல்லை. அடுத்தவர்களை அவமானபடுத்துகின்றனர், பொய் கூறுகின்றனர். பெண்களை இழிவுபடுத்துகின்றனர். முதல்வரின் தாயை அவமானப்படுத்தி பேசினர். அவர்களை கட்டுப்பாட்டுடன் பேச தி.மு.க காங்கிரஸ் அறிவுறுத்த வேண்டும். ஜெயலலிதாவை, சட்டசபையில் தி.மு.கவினர் எப்படி நடத்தினார்கள் என்பதை மறந்துவிடக்கூடாது. அவர்களின் ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்தன. பெண்களை அவமானப்படுத்துவதே திமுக காங்கிரஸ் கலாசாரம்.

விவசாயிகளுக்கு மரியாதை கொடுப்பது திருக்குறளின் மையக்கருத்து. சிறு விவசாயிகளை நோக்கியே தே.ஜ கூட்டணிக் கொள்கை உள்ளது. இடைத்தரகர்களிடம் இருந்து சிறு விவசாயிகளை காக்க முயற்சிக்கிறோம். விவசாயிகள் போலவே மீனவர்களுக்கும் நிதியுதவி திட்டம் அறிவித்துள்ளோம். அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதிகமானோர் தொழில் துவங்க வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், காங்கிரஸ், தி.மு.கவினர் ஊழலின் ஊற்றுக்கண்கள், தொழில் வளர்ச்சியை அனுமதிக்க மாட்டார்கள். கடந்த காலங்கள் போலவே மீண்டும் ஆட்சிக்கு வந்தால், தொழில் நிறுவனங்களிடம் பணம் வசூலிப்பார்கள். அவர்கள் ஆட்சிகாலத்தில் மின்வெட்டு நிலவியது. தொழில் பாதிக்கப்பட்டது’ என பேசினார்.