மரங்களில் ஆளுமை

வேத காலத்து ரிஷிகள் மற்றும் மாணவர்களுக்குச் செய்முறைப் பயிற்சி கொடுக்க பயன்படுத்திய மரம் ஆலமரமாகும்.தமிழ், வடமொழியில் புலமை பெற்ற கவிஞர்கள் பாடிய மரமும் இதுவே. அங்கோர் வட்’ கோயிலுக்கு அடையாளமாக விளங்கும் மரம். பனியா என்ற சொல்லை ஆங்கில அகராதியில் நுழைத்த மரமும் இதுவே. பகவத் கீதையில் கண்ணன் சொன்ன மரம். சிவன் உபதேசம் செய்த மரம். கண்ணன் இலையில் மிதந்த மரம். கதாபாத்திரமாக சாலமன் ருஷ்டி, சதே, டேனியல் டீபோ ஆகியோர் கதைகளில் வருவதும் ஆலமரம் தான்.

கின்னஸ் ரெக்கார்டில் பதிவு கண்டு புகழ் அடைந்த மரம் இதுவே. வட சாவித்திரி விரதத்தில் வணங்கப்படும் தரு. தமிழ்நாட்டில் கோயில்களில் தல விருட்சம் ஆன பெருமைசேர் மரம். போற்றுதலுக்குரிய அத்தலங்களாவன: ஆலங்காடு, திரு ஆலம்பொழில், திரு அன்பிலாந்துறை, திரு மெய்யம், திருப் பழவூர், திருவில்லிப்புத்தூர்.அதிசயமே அசந்து போகும் ஆச்சரிய குணமிகு இம்மரம் உபநிஷத ரிஷிகளின் காலம் முதல் இன்றைய திரைப்படப் பாடல்கள் வரை கவிஞர்கள் பலரின் சிந்த்னையைத் தூண்டி வருகிறது. ‘ஆல் போல் தழைத்து அருகு போல வேரூன்ற வேண்டும்’ என்று நம் வீடுகளில் பெரியோர் வாழ்த்துவதைக் கேட்டு வருகிறோம்.

‘ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி’ என்று ஆலமரமும் வேலமரமும்தான் புகழப்படுகின்றன. (நாலும் இரண்டும் = வெண்பா, குறள் பாக்கள் வகை). தமிழ்நாட்டிலும் குஜராத்திலும் பல ஊர்ப்பெயர்களிலும் (வதோதரா) ஆல மரம் மணம் கமழும். அங்கோர்வட் என்னும் கம்போடிய நாட்டு ஆலயம் உலக அதிசயங்களில் ஒன்று. அதன் பெயரில் உள்ள வட் என்பது “வட” என்ற வடமொழிச் சொல்லின் சுருக்கம் ஆகும். “வட” என்றால் ஆல மரம் என்பது பொருள். ஆண்டுதோறும் கோடைகால (ஆடி) பெளர்ணமியில் பெண்கள் அனுஷ்டிக்கும் வட சாவித்திரி விரத நாளில் ஆலமரத்துக்குப் பூஜை நடக்கும். சாவித்திரியை வழிபடும் நாள் இது.

பஞ்சதந்திரக் கதைகளில் விஷ்ணுசர்மா இந்த மரத்தை வானளாவப் புகழ்கிறார். ‘மற்ற மரங்கள் பூமிக்குப் பாரமே; பறவைகளுக்கும் மிருகங்களுக்கும் வாழ்வளிக்கும், மனிதர்களுக்கு நிழல் அளிக்கும் இந்த மரம் மகிழ்ச்சிக் கடலின் இருப்பிடம்’ என்பார். ஆங்கிலக் கவிஞன் சதேயும், இதை ஆமோதிக்கிறான். நாலடியாரிலும் வெற்றி வேற்கையிலும் நமக்கு அறத்தைப் போதிக்கவும் இதுதான் உதவியது. கம்ப ராமாயணத்திலும், சிந்தாமணிச் செய்யுளிலும், காளிதாசன் காவியங்களிலும் இடம் பெறுகிறது ஆலமரம். அக்ஷயவடம் எனும் பெயரில் சீதாதேவியின் அருள் பெற்று கயா அருகே இன்றும் என்றும் பரந்து நமது முன்னோர்களின் ஆசிகளை நாம் பெறவும் நமது சந்ததிகளை ஆசீர்வதிக்கவும் துணையாய் ஆலாய் அருளமுது படைக்கிறது ஆலமரம்.
கட்டுரையாளர் : மென்திறன் பயிற்சியாளர்