அறியாமையா? விஷமத்தனமா?

டெல்லி அருகில் நடைபெற்று வரும் மத்திய வேளாண் சட்டத்துக்கு எதிரான விவசாய அமைப்புகளின் போராட்டத்தை முன்னெடுத்து வருபவர் ராகேஷ் திகாயத். பாரதிய கிசான் யூனியன் என்ற அமைப்பின் தலைவரான அவர், டெல்லி போராட்டத்துக்கு ஆதரவு கோரி மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை 09.06.2021 அன்று சந்தித்துள்ளார்.

தமிழ் நாளிதழ்களில் வெளிவந்த அதற்கான புகைப்பட விளக்கத்தில், பாரதிய கிசான் சங்கத்தின் தலைவர் ராகேஷ் திகாயத் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது முற்றிலும் தவறானசெய்தியாகும். எங்கள் அமைப்பின் தலைவர்கள் யாரும் மம்தா பானர்ஜியை சந்திக்கவில்லை. ஹரியாணாவைத் தலைமையிடமாகக் கொண்டு சில மாநிலங்களின் விவசாய அமைப்புகளை ஒன்றிணைத்து முன்னாள் பிரதமர் சரண் சிங் தலைமையில் பாரதிய கிசான் யூனியன் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு விவசாய சங்கத்தின் தலைவராக இருந்த நாராயணசாமி நாயுடுவும் இந்த அமைப்பில் தொடக்க காலத்தில் இருந்து, பின்னர் வெளியேறினார். நெருக்கடி நிலை காலத்தில் ஊழலுக்கு எதிராக போராடிய பாரதிய கிசான் யூனியன், பிற்காலத்தில் பல பிரிவுகளாக உடைந்து.

தற்போது ஹரியாணா மாநில விவசாயத் தரகர்களின் பிடியில் சிக்கியுள்ளது. இந்த அமைப்பிற்கும் எங்களது பாரதிய கிசான் சங்கத்துக்கும் இடையே எந்தவித சம்பந்தமும் இல்லை.தேசிய சிந்தனையாளர் ஸ்ரீ தத்தோபந்த் தெங்கடி அவர்களால் 1979ம் ஆண்டு தொடங்கப்பட்ட பாரதிய கிசான் சங்கம், பாரத நாடு முழுவதிலும் அனைத்து மாவட்டங்களிலும் செயல்பட்டு வரும் அகில பாரத அமைப்பாகும். இதன் செயல்பாடுகள் தமிழகத்திலும் பரவலாக உள்ளது. டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயத் தரகர்கள் போராட்டத்திற்கு நாங்கள் ஆதரவு அளிக்கவில்லை. மத்திய வேளாண் சட்டத்தின் சீர்திருத்தங்களை பாரதிய கிசான் சங்கம் நிபந்தனைகளுடன் வரவேற்றுள்ளது.

மேற்கூறிய செய்தியில் பாரதிய கிசான் யூனியன் என்ற வார்த்தையின் மொழி பெயர்ப்பாகவும் இதை எடுத்துக்கொள்ள முடியவில்லை. அப்படியெனில் பாரதிய விவசாய சங்கம் என்று தானே வர வேண்டும்? பாரதிய கிசான் சங்கம் என்று மொழி பெயர்ப்பது டெல்லி போராட்டத்தில் எங்கள் அமைப்பைத் தொடர்புப்படுத்தும் விஷம வேலையாக இருக்குமோ என்றும் கருத வாய்ப்புள்ளது. இந்த விவகாரத்தில் தமிழ் ஊடகங்கள் விழிப்புணர்வுடன் செய்தி வெளியிட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம்.
கட்டுரையாளர்: மாநில அமைப்பு செயலாளர், பாரதிய கிசான் சங்கம், தமிழ்நாடு.