தேசியக் கல்விக் கொள்கை தவறான கருத்துகளும் புரிதல்களும்

அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும் கல்வியாளருமான பாலகுருசாமி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, ‘புதிய கல்விக் கொள்கையை தமிழகம் ஏன் அமலாக்கம் செய்ய வேண்டும்’ என்பது குறித்து சிந்தனையைத் தூண்டும் வகையில் ஜூன் 3ம் தேதி கடிதம் அனுப்பியுள்ளார். அதன் சுருக்கம் இங்கே:

மதிப்பிற்குரிய முதலமைச்சர் அவர்களுக்கு,

மத்திய அரசு அண்மையில் ஒப்பதல் அளித்துள்ள தேசிய கல்விக் கொள்கை குறித்து தமிழகத்தில் உள்ள சில அரசியல் தலைவர்கள் தேவையில்லாத வகையில் கூறும் கருத்துக்கள் அரசியல் உள்நோக்கம் கொண்டவையாக இருக்கக்கூடும். அல்லது அந்தக் கொள்கை ஆவணத்தை முழுமையாகப் படிக்காமலோ அதன் உள்ளடக்கத்தைச் சரியான முறையில் புரிந்து கொள்ளாமலோ கூறப்பட்டிருக்கலாம்.

இந்தக் கல்விக் கொள்கை, நடப்புக் கல்விச் சூழலுக்குக் கட்டாயம் தேவைப்படுவதாகும். இந்தியக் கல்விமுறையை உலகக் கல்வி முறையோடு இணைக்கும் நோக்கில் இது அமைந்துள்ளது. மனப்பாடக் கல்விமுறை போன்ற நடைமுறையை மாற்றி, மாணவர்கள் மனத்தில் தன்னம்பிக்கை, தேசிய பெருமிதம் ஆகியவற்றை ஊட்டும் வகையிலும் அமைந்துள்ளது. இந்தியாவில் 21ம் நூற்றாண்டுக்கான கல்வித் தேவைகளை எட்டும் வகையில் விரிவான வழிவகைகளையும் சிறந்த வழிகாட்டுதல்களையும் இக்கொள்கை கொண்டிருக்கிறது.

இக்கல்விக் கொள்கையில் ஏராளமான நெறிகள் உள்ளன. இந்நிலையில், இதற்கு எதிராக கருத்து கூறுவது நாகரிகமானதல்ல. கல்வியின் தரம் குறித்தும் அதன் நேர்மறையான தாக்கம் குறித்தும் கவலைப்படும் அனைவரது பாராட்டுக்கும் வரவேற்புக்கும் தகுதியுடையது. எந்தவொரு நாட்டின் வளர்ச்சிக்கும் முதுகெலும்பாக இருப்பது கல்விதான். பல மொழிகள், பல கலாசாரங்கள் கொண்ட, மாநிலங்கள் அளவில் ஏற்றத்தாழ்வுகள் உள்ள இந்தியாவைப் போன்ற ஒரு பரந்துபட்ட தேசத்திற்குத் தேவையான, வலுவான இலக்குகளை உறுதி செய்வதற்கு ஒருங்கிணைந்த கல்வி குறித்த ஒரு தேசிய கொள்கை இன்றியமையாதது.

உலக அளவில் மனித மேம்பாட்டுக் குறியீட்டில் (Human Development Index) இந்தியா 130வது இடத்தில் இருப்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். இது மிகவும் மோசமான நிலையாகும். எனவே, இந்தியாவின் கல்வி முறையை மாற்றி அமைப்பதற்கு புதிய தேசிய கல்விக் கொள்கை (NEP) சரியான தருணத்தில் கொண்டு வரப்படுவது அவசியமாகும். தேசிய கல்விக் கொள்கை இரண்டு அதி முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களில் கவனம் செலுத்துகிறது.
அவை:
1. தேசத்தின் பொருளாதார மேம்பாட்டில் நமது இளைஞர்கள் பங்களிப்பு செலுத்தும் வகையில் அவர்களது படைப்பாற்றல், விமர்சனச் சிந்தனைப் போக்கு ஆகிய திறன்களை மேம்படுத்துவது; அவர்களின் புதுமைத்தேடல் மற்றும் ஆய்வு மனப்பான்மை ஆகியவற்றை வளர்ப்பது,
2. நமது நாட்டை அடுத்தக் கட்ட வளர்ச்சிக்கு இட்டுச் சென்று, சமூக மேம்பாட்டை அடைவதற்காக வழிகாட்டும் வகையில் இளைஞர்களை நெறி சார்ந்த, ஒழுக்கம் சார்ந்த, அறிவார்ந்தவர்களாகவும் தாராள சிந்தனைகள் கொண்டவர்களாகவும் உருவாக்குவது. இந்தச் சிக்கல்களை எதிர்கொள்ளும் இந்தப் புதிய கல்விக் கொள்கை தொடக்கக் கல்வி முதல் உயர் கல்வி வரையில் அனைத்து நிலைகளிலும் தொலைநோக்கு சீர்திருத்தங்களைக் கொண்டிருக்கிறது. மாநிலங்களே தங்களது தேவைகளுக்கும் சூழல்களுக்கும் ஏற்ப சில பரிந்துரைகளை வடிவமைத்துப் பயன்படுத்திக் கொள்வதற்கு முழுச் சுதந்திரமும் நெகிழ்வுத்தன்மையும் உள்ளது என்பது இந்தக் கொள்கையின் சிறப்பம்சம் ஆகும்.

தேசிய கல்விக் கொள்கை குறித்து நிலவும் சில கட்டுக் கதைகள்:
கட்டுக் கதை 1
இக்கொள்கை தமிழக மக்கள் மீது ஹிந்தியைத் திணிக்கிறது.இது ஆதாரமற்ற கருத்து. எந்த மாநிலத்திலும் எந்த மொழியும் திணிக்கப்பட மாட்டாது என்று இக்கொள்கையில் தெளிவாகக் குறிப்பிடப்படுகிறது. உண்மையில், பள்ளிக்கூடங்களில் தாய்மொழி அல்லது மாநில மொழிவழிக் கல்வியைப்பரிந்துரைக்கிறது.
கட்டுக் கதை 2
மாணவர்களுக்கு மும்மொழிக் கொள்கை சுமையானது.இது மிகவும் தவறான கருத்தாகும். மும்மொழித் திட்டம் என்று கூறப்படுவது பள்ளிகளில் இரு இந்திய மொழிகளுடன் ஒரு வெளிநாட்டு மொழியைக் கற்க வாய்ப்பு அளிப்பதாகும். இதில், எந்த மூன்று மொழிகளைக் கற்பிக்க வேண்டும் என்பதை அந்தந்த மாநிலங்களே முடிவு செய்து கொள்ளலாம் என்பதும் எந்த மொழியும் எந்த மாணவர் மீதும் திணிக்கப்பட மாட்டாது என்பதும் மும்மொழிக் கொள்கையின் பாராட்டத்தக்க அம்சங்கள் ஆகும். மேலும், இந்தக் கொள்கையானது, நாட்டில் தற்போது உள்ள பன்முகத் தன்மையைப் பராமரிக்க வகை செய்யும். நம் நாட்டின் பலமொழி, பல கலாசாரத் தன்மையை நமக்கு ஒரு வரப்பிரசாதமாகக் கருத வேண்டும். உண்மையில், நமது மாநிலத்திலேயேகூட தனியார் பள்ளிகளிலும், மத்திய செகண்டரி கல்வித் திட்டத்தில் (சி.பி.எஸ்.இ) நடத்தப்படும் பள்ளிகளிலும் படிக்கும் ஏராளமான மாணவர்கள் மும்மொழித் திட்டத்தில்தான் கல்வி பயில்கிறார்கள். இந்நிலையில், அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மட்டும் இந்த சிறந்த வாய்ப்புகளை நாம் ஏன் மறுக்கவேண்டும்?
கட்டுக் கதை 3
மூன்றாவது, ஐந்தாவது, எட்டாவது வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வுகள் நடத்தி மாணவர்கள் வடிகட்டப்படுவர். இது உண்மையே அல்ல. மாணவர்களின் கற்றல் திறனை மதிப்பிடுவதற்காக சம்பந்தப்பட்ட பள்ளிக்கூடங்களே அந்தத் தேர்வுகளை நடத்த வேண்டுமேயன்றி, மேல் வகுப்புக்கு மாணவர்கள் செல்வதைத் தடுப்பதற்காக அல்ல என்று தேசிய கல்விக் கொள்கை தெளிவாகப் பரிந்துரைக்கிறது. தேர்வுமுறை குறித்து மாநிலங்களே தங்களது சூழலுக்கு ஏற்ப அமைத்துக் கொள்ளவும் வகை செய்கிறது. தற்போது உள்ளதைப் போல் 10-வது மற்றும் 12-வது வகுப்புகளுக்கு மட்டுமே பொதுத் தேர்வுகள் நடத்தப்படும்.
கட்டுக் கதை 4
இக்கல்விக் கொள்கை “குலக்கல்வி” முறையை பள்ளியில் கொண்டுவரும். “நவீன இந்தியாவின் கல்விக் கொள்கை” என நாட்டின் சிறந்த கல்வியாளர்களும் போற்றும் இக்கல்விக் கொள்கையை “குலக்கல்வி” என்பதுடன் பொருத்திப் பார்ப்பது வியப்பாக இருக்கிறது! தொழிற்கல்வி மாணவர்கள் பள்ளிப் படிப்பை முடித்ததும் தொழில் வாய்ப்புகளை உருவாக்கித் தருவதுடன், அவர்களிடம் சமூகத்திறன், சுயமரியாதை, தன்னம்பிக்கை ஆகியவற்றையும் மேம்படுத்துகிறது. நம் நாட்டில் இளைஞர்களின் ஆற்றலும் படைப்புத் திறனும் முழுமையாகப் பயன்படுவதற்காக தொழிற்கல்வி தேவைப்படும் தருணம் இது.
கட்டுக் கதை 5
நாட்டின் கூட்டாட்சித் தத்துவத்துக்கும் மாநிலங்களின் உரிமைகளுக்கும் எதிரானது இது முழுக்க முழுக்க தவறான வாதம். கல்வி பொதுப் பட்டியலில் உள்ளது. அதில், தேசத்தின் ஒட்டுமொத்த நலனுக்காக கல்வியில் தேவையான மாற்றங்களையும் கொள்கைகளையும் கொண்டுவருவதற்கு மத்திய அரசுக்கு உரிமை உள்ளது.இந்தப் புதிய தேசிய கல்விக் கொள்கை முன்பு எப்போதும் இல்லாத வகையில் பல்வேறு மாநிலங்களில் உள்ள 676 மாவட்டங்களில், 6600 வட்டாரங்களில்  2.5 லட்சம் கிராம ஊராட்சிகளில் தீவிரமாக விவாதிக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது.இறுதி வடிவம் பெற்ற கொள்கைத் திட்டத் தில் பெரும்பாலான மாநிலங்கள் அந்தந்த பகுதிகளுக்கு ஏற்ப கூறியுள்ள யோசனைகள் ஏற்கப்பட்டுள்ளன.
கட்டுக் கதை 6
இந்தக் கல்விக் கொள்கையில் சமூகநீதிக்கு இடமில்லை. இது முற்றிலும் தவறான நம்பிக்கை ஆகும். இக்கல்விக் கொள்கை அனைத்துத் தனிப்பட்டோரும் தங்களது கல்வி இலக்கைத் தொடர்வதற்கு சமமான வாய்ப்புகள் பெற வகை செய்கிறது. பாலின சேர்க்கை நிதி, தேசிய உதவித் தொகைக்கான வலைதளம், பட்டியிலனத்தவர், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு ஊக்கத் தொகைத் திட்டம் சமூகத்தில் பின்தங்கிய பிரிவினருக்கான சிறப்புக் கல்வி மண்டலங்களை அமைத்தல் ஆகிய பரிந்துரைகள் மிகவும் பாராட்டத்தக்கவை.
கட்டுக் கதை 7
இக்கொள்கையால், மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீட்டைப் பாதிக்கும். இக்கொள்கையில் பட்டியலினத்தவர், பழங் குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு குறித்து வெளிப்படையான குறிப்பு ஏதும் இல்லை என்பது உண்மைதான். அது, தற்போதைய இட ஒதுக்கீட்டுக்கொள்கை நீடிக்கும் என்பதையே உணர்த்துகிறது. இது தொடர்பாக, அரசியல் சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தற்போதைய இட ஒதுக்கீட்டுக் கொள்கை எந்தக் காரணத்திற்காகவும் நீர்த்துப் போகாது என்று மத்திய கல்வி அமைச்சர் உறுதி அளித்துள்ளார் என்பது கவனிக்கத்தக்கது.இவை மட்டுமின்றி, கல்வியில் பட்டியலினத்தவர், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சமூக பொருளாதார நிலையில் பின்தங்கியோர் ஆகியோரின் சேர்க்கையை மேம்படுத்துவதற்கு இந்தக் கல்விக் கொள்கையில் பல சிறப்பான நடவடிக்கைகள் சேர்க்கப்பட்டுள்ளன.
கட்டுக் கதை 8
கல்வி நிறுவனங்களுக்கு தன்னாட்சி அதிகாரம் அளிக்கவும், கல்வியை வணிகமயமாக்கவும் இக்கல்விக் கொள்கை ஊக்கமளிக்கிறது. இது அடிப்படை எதுவும் இல்லாத வாதமாகும். இப்போதே ஏராளமான கல்வி நிறுவனங்கள் கல்வி, நிர்வாகம் ஆகியவற்றில் தன்னாட்சி அதிகாரம் பெற்று இயங்குகின்றன. கல்வி நிறுவனங்கள் தன்னாட்சி அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க தேவையான வழிகாட்டுதல்கள் பொறுப்பு நடவடிக்கைகள் ஆகியவை தேசிய கல்விக் கொள்கையில் உறுதி செய்யப்பட்டுள்ளன. நமது கல்வி நிறுவனங்களில் கல்வியின் தரத்தை மேம்படுத்துவதற்கும் சிறப்பு பெறுவதற்கும் மிகவும் இன்றியமையா தேவைகளில் தன்னாட்சியும் ஒன்று. புதிய பாடத் திட்டங்களை வடிவமைப்பது, சிறந்த படிப்புகளை அறிமுகம் செய்வது, ஆசிரியர்களை நியமிப்பது, மதிப்பீட்டு முறைகளை வகுத்துக் கொள்வது, கல்விக் கூட்டுச் செயல்பாடுகளை மேற்கொள்வது போன்றவற்றுக்கு தன்னாட்சி வகை செய்கிறது.
கட்டுக் கதை 9
இக்கொள்கை அதிக அளவில் தனியார் நிறுவனங்கள் அமைய ஊக்கமளிக்கிறது. கல்வித் துறையில் தனியாரின் பங்களிப்பு என்பது நம் நாட்டிற்குப் புதிதல்ல. 70 சதவீதத்திற்கும் மேலான கல்லூரிகளும் 30 சதவீதத்திற்கும் மேலான பள்ளிகளும் தனியார் நிர்வாகங்களால் நடத்தப்படுபவையே. இந்தக் கல்விக் கொள்கை 2030ம் ஆண்டுக்குள் பள்ளிகளில் சேருவதை 100 சதவீதமாக உயர்த்துவதற்கும், உயர்கல்வியில் 2035ம் ஆண்டுக்குள் மொத்த மாணவர் சேர்க்கை விகிதத்தை 50 சதவீதமாக உயர்த்துவதற்கும் இலக்கு நிர்ணயித்துள்ளது. இது தற்போதைய மாணவர் சேர்க்கையை விட தனியார் நிறுவனங்களின் தீவிர பங் களிப்பு இல்லாமல் இந்த இலக்கை அடைவது நடைமுறை சாத்தியமில்லாதது.
கட்டுக் கதை 10
கல்விக் கொள்கையின் பல லட்சிய திட்டங்களை நிறைவேற்ற இயலாதது. இந்த கல்விக் கொள்கையில், அப்படி செயல்படுத்த இயலாத திட்டங்கள் எதுவுமே கூறப்படவில்லை. இது கடின உழைப்பு, குறிக்கோள், இலக்கு ஆகியவற்றை வலியுறுத்துகிறது, இந்தக் கல்விக் கொள்கை மாற்றம், தேர்வு மற்றும் நம்பிக்கை என்ற இலக்குகளை அடைய வழி வகுக்கிறது.அதை எப்படி நாம் செயல்படுத்துவது? கூட்டாட்சி அமைப்பில், இத்தகைய லட்சியங்களை அனைத்து மாநிலங்களின் ஒத்துழைப்பு மற்றும் கட்டு முயற்சியால்தான் எட்ட முடியும்.குறிப்பாக, நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகளின் ஒத்துழைப்பு தேவை. எல்லாவற்றையும் விட, உள்நாட்டு மொத்த உற்பத்தியில் 6 சதவீதத்தைக் கல்விக்காகவும், 2 சதவீதத்தை ஆராய்ச்சிக்காகவும் ஒதுக்குவது என்ற பரிந்துரை மிகவும் முக்கியமானதாகும்.விரும்பிய லட்சியங்களை அடைவதற்கும், கல்விக் கொள்கையைச் செயல்படுத்துவதற்கு உறுதுணையாகவும் இது இருக்கும். தேசியக்கல்விக் கொள்கையில் நாம் இடம் பெறாவிட்டால் ஏற்படும் விளைவுகள் :
1. கல்வி பொதுப் பட்டியலில் இருக்கிறது. எனவே, மத்திய அரசின் கொள்கை முடிவுகளைச் செயல்படுத்துவது மாநில அரசுகளின் கடமையாகும்.இக்கல்விக் கொள்கையைச் செயல்படுத்த விரும்பாத மாநிலங்கள் தங்களது உயர்கல்வி நிறுவனங்களை நிர்வகிப்பதில் சில இடையூறுகளைச் சந்திக்க நேரிடும்.
2. கல்வியின் தரத்தை மேம்படுத்தவும் சிறந்த சில சாதனைகளை அடைவதற்கும் கிடைப்பதற்கான நல்ல வாய்ப்பை மாநிலம் இழக்கக் கூடும்.
3. உயர்கல்வி நிறுவனங்களும் பல்கலைக்கழகங்களும் சில சிரமங்களைச் சந்திக்கக் கூடும். பல்கலைக்கழக மானியக் குழு, அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு, இந்திய மருத்துவக் கவுன்சில் போன்ற தேசிய அளவிலான கல்வித் தரக் குழுமங்களுடன் இணங்கிச் செயல்படுவதில் சிக்கல்களை எதிர்கொள்ள நேரும்.
4. மாநிலங்கள் தங்களது ஆய்வுத் திட்டங்களுக்கும் பல்வேறு கல்வி மேம்பாட்டுக்கும் மத்திய ஒழுங்காற்று அமைப்புகளிடமிருந்தும் மத்திய அரசின் துறைகளிடமிருந்தும், நிதியுதவி பெறுவதில் இடையூறுகளை எதிர்கொள்ள நேரிடும்.எதிர்கால இந்தியக் கல்வி குறித்து இதுவரை வரையப்படாத, விரிவான, தீவிர மாற்றத்துக்கான, நுட்ப அறிவுள்ள இந்த தேசியக் கல்விக் கொள்கையை, ஆற்றல் மிக்க பகுத்தறிவுச் சிந்தனையுள்ள தங்களது தலைமையில் செயல்படும் தமிழக அரசு, நிச்சயமாக நமது மாநிலத்தின் தேவைகள், விருப்பங்களுக்கு ஏற்ற மாற்றங்களுடன் மிகவும் சிறப்பாகச் செயல்படுத்தும் என்று உறுதியாக நம்புகிறோம்.

-பாலகுருசாமி