நிர்மலா சீதாராமன் பேச்சு

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். உலக வங்கியின் வளர்ச்சி குழு கூட்டத்தில் பங்கேற்று அவர் பேசுகையில்,

வேக்சின் மைத்ரி: உலகளாவிய கொரோனா பிரச்சினைக்கு தீர்வு அளிப்பதில் பாரதம் முக்கிய பங்கு வகிக்கிறது. ‘வேக்சின் மைத்ரி’ திட்டத்தின்கீழ், 95 நாடுகளுக்கு 6 கோடியே 63 லட்சம் தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. மீண்டும், இம்மாதத்தில் தடுப்பூசி ஏற்றுமதி துவங்கும்.

முதலீடு: நடப்பாண்டில் பாரதத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 9.5 சதவீதமாக இருக்கும் என்று ஐ.எம்.எப் கணித்துள்ளது. கொரோனா பிரச்சினையை மீறி, கடந்த நிதியாண்டில் பாரதத்திற்கு ரூ. 6 லட்சத்து 15 ஆயிரம் கோடி அன்னிய நேரடி முதலீடு கிடைத்துள்ளது. இதனால் முதலீட்டுக்கு உகந்த நாடு என்ற அந்தஸ்தை தக்க வைத்துள்ளது பாரதம்.

ஜி.எஸ்.டி: நடப்பு நிதியாண்டின் முதலாவது காலாண்டில், உள்நாட்டு உற்பத்தி 20.1 சதவீதம் வளர்ந்துள்ளது. கொரோனாவுக்கு முந்தைய காலத்துடன் ஒப்பிடுகையில், இது 90 சதவீத மீட்சி. பொருளாதார வளர்ச்சிக்கு சாட்சியாக, கடந்த காலாண்டுகளில் ஜி.எஸ்.டி. வசூல் தலா ரூ. 1 லட்சம் கோடிக்கு மேல் கிடைத்தது. வரும் மாதங்களில் இது அதிகரிக்கும்.

கொரோனா: கொரோனாவை நெகிழ்வுத் தன்மையுடனும், துணிச்சலுடனும் பாரதம் எதிர்கொண்டது. மக்களின் உயிர்களையும், வாழ்வாதாரத்தையும் காக்க வேண்டும் என்ற இரட்டை இலக்குடன் செயல்பட்டது.அதிகமான தடுப்பூசி போட்டதில் உலக அளவில் 2வது இடத்தில் பாரதம் உள்ளது.

தொழில் வளர்ச்சி: கொரோனாவால் பாதிக்கப்பட்ட தொழில்களுக்கு ரூ. 6 லட்சத்து 29 ஆயிரம் கோடி மதிப்புள்ள நிவாரண நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மேலும், அரசின் சீர்திருத்த நடவடிக்கைகள், நிலையான பொருளாதார வளர்ச்சிக்கு வலிமையான அடித்தளம் அமைத்துள்ளன. உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்தால், இன்னும் 5 ஆண்டுகளில் குறைந்தபட்ச உற்பத்தி 50 ஆயிரம் கோடி டாலர்களாக இருக்கும். உள்கட்டமைப்புக்கும், தொழில் தொடங்க உகந்த சூழ்நிலையை உருவாக்கவும் முன்னுரிமை அளிக்கப்படுகிறது’ என தெரிவித்தார்.

சந்திப்பு: பாரத அமெரிக்க பொருளாதாரம் மற்றம் நிதி ஒத்துழைப்பு கூட்டத்தில் நிர்மலா சீதாராமன் பங்கேற்றார். அங்கு அமெரிக்க நிதியமைச்சர் ஜேனட் எல்லனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதில், சட்டவிரோத பணப்பரிமாற்றம், பயங்கரவாதத்துக்கு நிதியுதவி ஆகியவற்றுக்கு எதிரான போராட்டத்தில் இருதரப்பு ஒத்துழைப்பு வழிமுறைகள் ஆராயப்பட்டது.