தனியார் மருத்துவமனைகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தல்

சென்னை ஷெனாய் நகரில் உள்ள ஹண்டே மருத்துவமனையில், ஜெயின் அன்னபூர்ணா அறக்கட்டளை சார்பில் கரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்து பேசுகையில், ‘ஒரு சில தனியார் மருத்துவமனைகளில் தொற்று என்று வருபவர்களை சேர்த்துக் கொள்கின்றனர். காய்ச்சல், இருமல், சளி போன்றவற்றுக்கு மட்டும் மருந்து அளித்துவிட்டு மூச்சுத் திணறல் வரும்போது அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி விடுகின்றனர். அதுபோன்று அனுப்பப்பட்டவர்கள் நீண்ட நேரம் காத்திருந்து அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட வேண்டிய சூழல் இருந்து வருகிறது. எனவே, அனைத்து தனியார் மருத்துவமனைகளும் குறைந்தபட்ச ஆக்ஸிஜன் வசதியை ஏற்படுத்த வேண்டும். அவ்வாறு, சிகிச்சை அளிக்க தேவையான அடிப்படை வசதிகளை வைத்துக் கொண்டுதான் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை சிகிச்சைக்கு அனுமதிக்க வேண்டும்’ என கேட்டுக்கொண்டார். நிகழ்ச்சியில், அண்ணாநகர் சட்டப்பேரவை உறுப்பினர் எம்.கே.மோகன், முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் ஹெ.வி.ஹண்டே, ஆறுமுகம் மற்றும் பலர் உடனிருந்தனர்.