அலிகர் பல்கலையில் ஆய்வு

உத்தர பிரதேசத்தில் உள்ள அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் சிவில் லைன் பகுதியில் பேராசிரியர்கள் உயிரிழந்த விவகாரம் குறித்து ஆய்வு செய்ய அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் சென்றார். பல்கலைக் கழக வளாகத்திலுள்ள ஜவகர்லால் நேரு மருத்துவமனை அரங்கத்தில் மருத்துவ பேராசிரியர்களுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் இது குறித்து பேசிய முதல்வர், ‘அலிகர் பல்கலைக் கழகத்திற்கு கரோனா சிகிச்சையில் தேவையான அனைத்து உதவிகளும் அரசு செய்யும். ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டை போக்க உ.பியில் 377 தொழிற்சாலைகள் இயங்குகின்றன. தற்போதைய ஆக்ஸிஜன் தேவை 1,000 டன்னாக உள்ளது. 1,030 டன் ஆக்ஸிஜன் வினியோகிக்கப்படுகிறது. 161 ஆக்ஸிஜன் உற்பத்தி தொழிற்சாலைகள் அமைக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. கடந்த 12 நாட்களாக கரோனா தொற்று எண்ணிக்கை குறைந்துள்ளது. எனினும், கரோனாவிற்கான பரிசோதனையும், சிகிச்சையும் மாநிலம் முழுவதும் தொடர்கிறது’ என தெரிவித்தார். முன்னதாக, இந்த பல்கலைக்கழகத்திற்கு சுமார் 33 வருடங்களுக்கு முன்பாக காங்கிரஸ் முதல்வரான என்.டி.திவாரி இங்கு வந்திருந்தார். அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகத்தில் பா.ஜ.க தலைவர்களை எந்த கூட்டங்களுக்கும் அழைப்பதில்லை. இதை மீறி ஒருமுறை மத்திய கல்வித் துறை அமைச்சராக இருந்த முரளி மனோகர் ஜோஷி அழைக்கப்பட்ட போது அவரை மாணவர்கள் உள்ளே நுழைய விடாமல் தடுத்தனர். தற்போது, இந்த பல்கலைக் கழகத்திற்கு வந்த முதல் பா.ஜ.க தலைவராகியுள்ளார் முதல்வர் யோகி.