‘ம’ என்ற மகேந்திரநாத் குப்தர்

ராமகிருஷ்ண பரமஹம்சரின் இல்லறச்சீடரான மகேந்திரநாத் குப்தர் ’ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்’ நூலின் ஆசிரியர். இவர் 1854 ஜுலை 14ம் தேதி, கல்கத்தாவில் பிறந்தார். ராமகிருஷ்ணருடன் இவரது அனுபவம் குறித்து தேதி, நேரம் உட்பட அனைத்தையும் எழுதி தொகுத்தார்.. அந்த நாட்குறிப்புகளின் தொகுப்பே ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்’ என்னும் நூல்.

இவர் பிரம்ம சமாஜத் தலைவர் கேசவ சந்திர சேனின் உறவுப் பெண்ணான நிகுஞ்ச தேவியை திருமணம் செய்தவர். 1882 பிப்ரவரியில் ராமகிருஷ்ண பரமஹம்சரை சந்தித்தார். அப்போது இவர், ஈசுவர சந்திர வித்தியாசாகரின் சியாம் பஜார் கிளைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்தார்.

‘ம’ என்பது இவரது பெயரின் சுருக்கமாகவும் புனைப்பெயராகவும் அமைந்தது. அமுதமொழிகளில் இவர் மாஸ்டர் என்று அழைக்கப்பட்டது குறிப்பிடப்பட்டுள்ளது.

மகேந்திரநாத் குப்தா ஸ்ரீராமகிருஷ்ணரை சந்தித்தபோது, ஸ்ரீராமகிருஷ்ணர் அவரிடம் ‘‘உனது கடவுள் நம்பிக்கை… உருவ வழிபாட்டிலா அல்லது அருவ வழிபாட்டிலா” என்று கேட்டார்.

‘‘சுவாமி, அருவத்தில்தான் எனக்கு நம்பிக்கை” என்றார் ம. ஸ்ரீராமகிருஷ்ணரும், ‘‘சரி, ஏதாவது ஒன்றில் நம்பிக்கை வைப்பது நல்லது. ஆனால் இறைவனுக்கு உருவமும் உண்டு, அருவமும் உண்டு” என்றார். அப்போது மகேந்திரநாத், ‘‘சுவாமி இறைவன் உருவம் உடையவர் என்பதை ஒப்புக்கொண்டாலும் அவர் களிமண் பொம்மையாக இருக்கக் கூடுமா” என்று கேட்டார்.

ஸ்ரீராமகிருஷ்ணர் புன்சிரிப்புடன், ‘‘களிமண் பொம்மையை வழிபடுவது தவறாக இருந்தால் ஆண்டவனாகிய அவனுக்கு அது தெரியாதா? தன்னைத்தான் அந்த மண் வடிவில் வழிபடுகிறார்கள் என்பதை அவன் அறிய மாட்டானா? அவனை நாம் வழிபடுகிறோம் என்ற ஒன்றே அவனுக்கு மகிழ்ச்சியைத் தரும். ஞானமும் பக்தியும் உண்டாவதற்கான வழியை அதில் இருந்தே பெற நாம் முயற்சி செய்யலாம். ஒரு தாய் தன் குழந்தைகளின் ஜீரணசக்திக்கு ஏற்ப உணவு சமைக்கிறாள். அதுபோல யாரால் எவ்வளவு ஜீரணிக்க முடியுமோ அந்த அளவுக்கு பூஜை முறைகளை நமது முன்னோர்கள் ஏற்படுத்தியுள்ளனர்” என்று விளக்கினார்.

அவ்வளவுதான், மகேந்திரநாத் குப்தாவின் மனம் மாறியது. பிறகு ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரின் இல்லறச் சீடரானார்.

மகேந்திரநாத் குப்தரின் பிறந்த நாள் இன்று

ஜெ.எஸ். ஸ்ரீதரன்