பாடல் ஒன்றுக்கு ஒரு பொன் தேங்காய்

ராமேஸ்வரத்தை உள்ளடக்கிய சேது நாட்டை ஆண்டு வந்த தளவாய் ரகுநாத சேதுபதி தமிழ்ப் புலமையில் சிறந்து விளங்கியதோடு பிற புலவர் பெருமக்களைக் கண்போல் காத்து வந்தார். அவரது அவை புலவர்களில் தலைசிறந்து விளங்கியவர் அமுத கவிராயரின் புலமைச் சிறப்பும், கவிதை பாடும் வல்லமையும் பிற புலவர்களை இவர்மீது பொறாமை கொள்ள செய்தது.

இனிய மாலை நேரம். புலவர்களின் புலமைச் சுனைகளின் மூழ்கிய, இன்பத்தில் திளைத்துக் கொண்டிருந்தார். அப்போது அரசர் புலவர்களைப் பார்த்து, “அகப்பொருளில் ஒவ்வொரு துறையிலும் ஒரு பாடல் தானே பாடப்பட்டு வருகிறது. மிகுதியாகப் பாட முடியுமா?” எனக் கேட்டார். ஒவ்வொரு புலவரும் தத்தமது திறமைக்கேற்பத் தம்மால் ‘‘முப்பது பாட முடியும்”, ‘நாற்பது பாட முடியும்’ என்று கூறினார்கள், அமுத கவிராயரோ ‘நான் நூறு பாடுவேன்’ என்றார். மற்றப் புலவர்கள் அமுத கவிராயர் மீதுள்ள தங்களின் பகைமையைத் தீர்த்துக் கொள்ள இதுவே சரியான தருணம் என எண்ணி , “அவர் (நான் +நூறு) நானூறு பாடுவாராம்” எனக் கூறினார்கள்.

அமுத கவிராயரும் விட்டுக்கொடுக்காதபடி, “பாடினால் போயிற்று” என மிடுக்காகப் பதில் அளித்தார். தாம் சொல்லியவாறே அமுத கவிராயர் ‘நாணிக்கண் புதைத்தல்’ என்னும் ஒரே துறையில் நானூறு கவிதைகளை பாடினார். பாடலின் முதல் இரண்டடிகள் மன்னர் சேதுபதியின் சிறப்பையும் ஏனைய இரண்டடிகள் அகப்பொருள் கருத்தையும் தெரிவிப்பதாய் அமைந்திருந்தது.

பாடல்களின் சொல்லழகிலும் கருத்தழகிலும் மகிழ்ந்த ரகுநாத சேதுபதி. நூல் அரங்கேற்றத்தின்போது ஒவ்வொரு பாடலுக்கும் ஒவ்வொரு பொன் தேங்காய் வீதம் நானூறு பொன் தேங்காய்களை அமுத கவிராயருக்குப் பரிசாக அளித்தார். மேலும் ‘பொன்னாங்கால்’ என்ற ஊரையும் மன்னர் கவிஞருக்குப் பரிசாக அளித்து அவரைச் செழுமைப்படுத்தினார்.