வீட்டு மாடிகளில் விவசாயம்!

அரை ஏக்கர் நிலமிருந்தால்தான் காய்கறி பயிரிட முடியும் என்றில்லை. வீட்டில் கொஞ்சம் இடம் இருந்தால் போதும்; அழகிய காய்கறி தோட்டம் தயாரித்து விடலாம். மேலும், வீடு முழுவதும் இயற்கையான காற்றை சுவாசிக்கலாம்.

பூச்சி மருந்து அடித்த காய்கறிகளையும், ரசாயனம் கலந்த கீரைகளையும் இன்னும் எத்தனை நாளுக்குத் தான் சாப்பிட்டுக் கொண்டிருப்பீர்கள். தற்போது அனைவரும் இயற்கை சார்ந்த உணவுப் பொருட்களுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறார்கள். மொட்டை மாடிகள் முழுவதும் செடிகளை வைத்து நிரப்பி விடலாம் என்கிறார்கள் தோட்டக்கலை நிபுணர்கள். கிராமமாக இருந்தாலும், நகரமாக இருந்தாலும் இன்று நீங்களே உங்கள் வீட்டுக்கு தேவையான காய்கறியை பயிரிடலாம். அதுவும் சுலபமான முறையில். அடுக்குமாடி குடியிருப்புகள் நிறைந்த நகரங்களிலும்கூட இது சாத்தியமே.

வீட்டின் மொட்டை மாடி 100 சதுர அளவில் இருந்தால் போதுமானது. நடுவில் பாதைக்கு 10 அடி விட்டு வைத்தாலும், மீதமுள்ள 90 சதுரடியில் பயிரிடலாம். தோட்டம் அமைக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால், முதலில் மாடியில் தண்ணீர் ஓட்டம் எந்த பக்கம் போகிறது என்பதைப் பார்க்க வேண்டும். அதற்கு அப்படியே எதிர்ப்புறமாகத் தோட்டம் அமைக்க வேண்டும். தோட்டம் அமைக்கும் இடத்தில் அரை அடி உயரத்துக்கு கார்டன் தரை உயர்த்தி இருக்க தடுப்புச் சுவர் அமையுங்கள். இதில் நீர் வடிய துவாரங்கள் அமைக்கும்படி கட்டுங்கள். பிறகு அதன் மீது ஜியோ டெக்ஸ்டைல் மேட்-டுடன் மண் கலந்து போடலாம். இதனால் செடிகளுக்கு தேவையான மண்ணின் அளவு பாதியாக குறையும். பிறகு, புல்தரை அமைத்து ஆங்காங்கே தொட்டிகள் வைக்கலாம்.

ஆனால், அடுக்குமாடி குடியிருப்பில் வாடகை வீட்டில் இதை அனுமதிப்பார்களா என்று தயங்குபவர்கள் வேறு வழியை பின்பற்றுங்கள். மாடித் தோட்டங்கள் அமைக்கும் வாடகை குடியிருப்புக்காரர்கள் வீட்டை காலி செய்யும் போதும், அதை எளிதாக எடுத்துச் செல்லும் வகையில் அமைக்க திட்டமிடுங்கள். அதிக எடை கொண்ட தொட்டியையோ சிமெண்ட் தொட்டிகளையோ பயன்படுத்த வேண்டாம். சொந்த வீடுகள் வைத்திருப்பவர்களும் இதை பயன்படுத்தாமல் ‘க்ரோ பேக்’ என்று சொல்ல கூடியவற்றில் செடிகள் வைக்கலாம். இதில் மண்ணுக்கு பலம் சேர்க்க எரு மண்புழு உரத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதைப் பயன்படுத்தும்போது செடிகளுக்கு தேவையான தண்ணீரின் அளவு மிச்சமாகும். அளவுக்கு அதிகமான மழையோ வெயிலோ நேரிடையா செடிகளை பாதிக்காமல் இருக்க மாடியில் க்ரீன்ஹவுஸ் செட் மட்டும் போட்டு கொள்ளலாம். நிலம் இல்லை என்பதால் பருவம் பார்த்து பயிர் செய்ய வேண்டியதில்லை.