தன்னந்தனியாய் சாகசம்

அக்டோபர் 1947ல் ஆரம்பித்து 10 மாதங்களாகத் தொடர்ந்த பாகிஸ்தான். போரில் இழந்த குப்வாரா மாவட்டம் டித்வால் கிராமத்தை ரஜபுதனப் படைப்பிரிவின் உதவியோடு மீட்கத் திட்டமிட்டது பாரத ராணுவம்.
கிஷன் கங்கா ஆற்றின் மறுகரையில் டித்வால் மலை முகட்டில் பதுங்கி 1948 ஜூலை 11 முதல் 15 வரை போரிட்ட பின் மலைச் சரிவிலும், மலை உச்சியிலும் உள்ள வலுவான பாகிஸ்தானின் ௨ நிலைகளைத் தகர்த்தால் மட்டுமே நாம் வெல்ல முடியும் என்று உணர்ந்தது. நமது இரண்டு குழுக்கள் ஒவ்வொன்றும் ஒரு நிலையைத் தகர்ப்பதாகத் திட்டம். ஆனால் அதற்கு, பாகிஸ்தான் அமைத்திருந்த பதுங்கு குழிகளின் தீவிரக் கண்காணிப்பில் உள்ள மிகக் குறுகலான மலை இடுக்கில் பயணிக்க வேண்டும்.
1948 ஜூலை 18 நள்ளிரவு பயணத்தைத் தொடங்கிய அரை மணி நேரத்திலேயே முதல் குழுவின் 51 படைவீரர்கள் பலியாகினர். குழுத் தலைவர் மேஜர் பிரு சிங்கின் பல அங்கங்களை எதிரிகளின் கையெறி குண்டு சிதைத்தது. ஆனாலும் “ராஜா ராமச்சந்திர கி ஜெய்” கோஷத்துடன் எதிரிகளைச் சுட்டு வீழ்த்தினார். முதல் நிலையைக் கைப்பற்றியபோது அவர் மட்டுமே எஞ்சியிருந்தார், தோட்டாக்கள் தீர்ந்திருந்தன.
தனியாக இரண்டாம் நிலையை நோக்கி நகர்ந்த பிரு சிங்கின் முகத்தை எதிரியின் கையெறி குண்டு சிதைத்தது. ரத்தம் சொட்ட சொட்டத் தவழ்ந்து முன்னேறி கையெறி குண்டுகளை வீசியும், துப்பாக்கி முனையால் குத்தியும் இரண்டு பதுங்குகுழிகளை அழித்தார்.
மூன்றாவது பதுங்குகுழியை நெருங்கிய போது அவரது தலையில் குண்டு பாய்ந்தது. கையெறி குண்டோடு பதுங்குகுழியில் குதித்து எதிரியை நிர்மூலமாக்கினார்.
உயிர் பயமின்றி ஒற்றை வீரனாய்ப் போரிட்டு எதிரிகளை வீழ்த்தி, டித்வாலை மீட்ட ஹவில்தார் மேஜர் பிரு சிங் ஷெகாவத்தின் -வீரத்தை, உயிர்த் தியாகத்தைப் போற்றி மத்திய அரசு 1952-ல் பரம்வீர் சக்ரா விருது வழங்கி கௌரவித்தது.
– கரிகாலன்