ஒற்றுமைப் பணி அரசியலால் முடியாது சமுதாய சக்தியால் முடியும்

ராஷ்டிரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் சர்சங்ககாலக் மோகன் பாகவத் ஜூலை 4 அன்று உத்தரப் பிரதேச மாநிலம் காஜியாபாத்தில் நடந்த புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் பேசுகையில் தெரிவித்த கருத்துக்களின் தொகுப்பு:

சங்கத்தின் பொறுப்பாளர் ஒருவர் இதுபோன்ற பொது நிகழ்ச்சி ஒன்றில் வெளியீடு விழாவில் கலந்து கொள்வது முதல்முறை என்று கருதுகிறேன். பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில் சில பிரச்சினைகள் ஏற்படக்கூடும், ஏற்படுகிறது என்று தெரியவந்துள்ளது. இது சங்கத்தின் சுய பிம்பத்தை மெருகேற்றிக் கொள்ளும் முயற்சி அல்ல. சங்கம் எப்போதுமே சங்கமாகத்தான் இருக்கிறது; நல்ல பணி செய்து கொண்டுதான் இருக்கிறது. தோற்றத்தை மாற்றிக்கொண்டு எந்த ஒரு வேலையையும் செய்ய வேண்டிய அவசியம் சங்கத்திற்குக் கிடையாது. நான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வது எவருக்கும் எதிர்வினையும் அல்ல, எவருக்கும் எதிர்ப்பாகவும் அல்ல. ஊர் நம்மை எப்படி புரிந்து கொண்டாலும் சரி, சங்கம் தன் பணியை தொடர்ந்து செய்து கொண்டுதான் இருக்கிறது. சங்கம் செய்யும் பணியால் யாருக்கும் தீமை ஏற்படாது, எல்லோருக்கும் நன்மை ஏற்படும் என்பதில் எனக்கு மிகுந்த நம்பிக்கை உண்டு. எனவே, இது சங்கம் பற்றிய சமுதாயத்தின் பார்வையை பெரிதுபடுத்த செய்து கொள்ளும் வேலை அல்ல.

இது வரக்கூடிய தேர்தல்களில் முஸ்லிம் வாக்குகளை பெறுவதற்காகவும் அல்ல. ஏனென்றால் சங்கம் அரசியலில் இறங்குவது இல்லை. ஆனால் தேசத்தில் என்ன நடக்க வேண்டும், என்ன நடக்கக் கூடாது என்பது பற்றி சங்கத்திற்கு என அபிப்பிராயம் உண்டு. சங்கத்திற்கு தற்போது பலமும் உள்ளது. நிலவரத்தை சரி செய்ய முயற்சி செய்கிறோம். நமது ஆதரவு குறிப்பிட்ட இன்னாருக்குத் தான் என்றில்லை. தேச நலனிற்கே நமது ஆதரவு. தேச நலனுக்கு விரோதமாக யார் போனாலும் அவர்களை எதிர்ப்போம். தேச நலனுக்குச் சாதகமாக யார் செயல்பட்டாலும் அவர்களை ஆதரிப்போம்.

ஆனால் சங்கம் அரசியல் கட்சி அல்ல. நாம் கட்சி அரசியல், ஓட்டு அரசியல், ஓட்டு வங்கி அரசியல் எதிலும் இறங்குவதாக இல்லை. அரசியலில் இறங்கக் கூடாது என்று சங்கம் தொடங்கிய நாளில் இருந்தே நாம் தீர்மானமாக இருந்து வருகிறோம். அரசியலால் முடியாத காரியங்கள் என்று சில பணிகள் உண்டு. அரசியல் நுழைந்தால் கெட்டுப் போகிற காரியங்கள் உண்டு. ஆனால் மனிதர்களை இணைக்கும் பணியை அரசியலால் செய்ய முடியாது. அரசியலால் அந்தப் பணியை சீர்குலைக்க முடியும். எனவே மனிதர்களை இணைக்கும் பணியை செய்கிறவர்கள் அரசியலின் அந்த அம்சம் பற்றி கருத்து செலுத்துவோம். மனிதர்களை இணைக்கும் பணியை செய்ய அவதாரம் எடுத்தது அல்ல அரசியல். அது இந்தப் பணியை வேண்டுமானால் சீர்குலைக்கலாம்.

பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று இந்தப் புத்தகம் உண்மையான உள்ளத்துடன் மனதார வேண்டுகோள் விடுக்கிறது. அதை நான் ஆதரிக்கிறேன். ஏனென்றால் ஒருங்கிணைந்த சமுதாயத்தால் தான் தேசத்தின் முன்னேற்றம் சாத்தியம். ஒருங்கிணைப்பு என்பது ஓர் அமைப்பை கட்டுவது மட்டும் அல்ல, அது உள்ளார்ந்த ஓர் உணர்வு உருவாக்குவது. ஹிந்துக்களும் முஸ்லிம்களும் ஒன்றுபட வேண்டும் என்று பேசுகிறார்கள். அது குழப்பத்தை ஏற்படுத்துகிறது. ஹிந்துக்களும் முஸ்லிம்களும் இணைந்து தானே இருக்கிறார்கள்? அவர்களை இணையுங்கள் என்று சொல்வது எப்படி சரியாகும்? இணைந்தே இருப்பவர்கள் எப்போதாவது நாம் இணைந்து இருக்கவில்லை என்று நினைத்தால் இருதரப்புக்கும் நஷ்டம்தான் ஏற்படும். நீயும் நானும் ஒன்றாக இருப்பது நமது பாரம்பரியம் காரணமாக. நமது பாரம்பரியம் என்ன? ‘நீ வழிபடும் முறை வேறு அதனால் நீ வேறு நான் வேறு’ என்று பேசுவது, நினைப்பது இங்கே கிடையாது; அது தான் நமது பாரம்பரியம்.

நூலாசிரியர் பேசுகையில் முஸ்லிம்கள் செய்வது நிர்க்குண உபாசனை என்று சொன்னார். ஹிந்துக்களின் மத்தியிலும் சகுண உபாசனையும் உண்டு, நிர்க்குண உபாசனையும் உண்டு. நிர்க்குண உபாசனை செய்யும் ஹிந்து, சகுண உபாசனை செய்யும் ஹிந்துவை ஒப்புக்கொள்வதில்லை என்கிற அளவுக்கு விதவிதமான உபாசனைகள் உண்டு. ஆனால் ஒருவித உபாசனை செய்பவர் இன்னொரு வித உபாசனை குறித்து மதிப்பு கொள்பவராகத்தான் இந்த மண்ணில் இருந்திருக்கிறார். ஹஸ்ரத் மூசா (மோசஸ்) பற்றி ஒரு கதையைக் கேள்விப்பட்டேன். ஒரு ஏழை பக்தர் சாலையோரம் அமர்ந்து கடவுளிடம் உரக்க இப்படி பிரார்த்தித்துக் கொண்டாராம் “கடவுளே, நீ நான் அழைத்தால் வந்து விடாதே. சொர்க்கத்திலிருந்து வெகு நேரம் நடந்து வருவாய். உன் பாதங்களை பிடித்துவிட எனக்கு கைகள் இருக்கிறது, ஆனால் தைலம் இல்லை. என்னிடம் வந்து விடாதே!” இதைக் கேட்ட மூசா “ஏன் இப்படியெல்லாம் உளறுகிறாய்? உனக்குப் பைத்தியமா?” என்றெல்லாம் கடிந்துகொண்டார்.

அப்போது அவர் மனதில் கடவுள் தோன்றி பேசினாராம். “இப்படி எல்லாம் அவரை கோபித்துக் கொள்ளாதே. அவர் தனக்குத் தெரிந்த விதத்தில் என்னுடன் பேசுகிறார். அது அவருடைய புரிதல் என்று புரிந்து கொள். அவருடன் சண்டையிடாதே” இதுதான் அந்தக் கதை. ஹிந்துக்கள் மத்தியில் எத்தனையோ கடவுளர்கள்; ஆதியில் இந்திரனையும் ருத்திரனையும் வழிபட்டோம்; இன்று புதிது புதிதாக பல தெய்வங்கள் வந்துகொண்டே இருக்கின்றன. எல்லாமே பக்தியால் ஏற்படுவது. அதில் சண்டையிட்டுக் கொள்ள என்ன இருக்கிறது?

நாம் எல்லோரும் ஒன்று. அதற்கு ஆதாரம் நமது தாய்நாடு. நாம் இங்கே பிறந்தோம், நாம் இங்கே வசிக்கிறோம் என்பதால் மட்டுமல்ல; இந்த தாய்நாடு நம் அனைவரையும் ஊட்டி வளர்த்து வருகிறது. இங்கு ஒரு பாரம்பரிய இயல்பு உண்டு. அதன் காரணமாகவே நாம் சண்டையிட்டுக் கொள்ளாமல் இருக்கிறோம். நாம் வெளிநாடுகளுக்கு செல்லவேண்டி யிருந்ததுண்டு; வெளியிலிருந்து எத்தனையோ பேர் வந்தார்கள், வசிக்கிறார்கள். எத்தனையோ மொழிகள் எத்தனையோ வழிபாடுகள்.

ஆனால் நாம் ஒன்றாக இருந்து வருகிறோம். “வேறுவேறு மொழிகள் பேசுகிறவர்கள், வெவ்வேறு வழிபாடுகள் செய்பவர்கள் உள்ளனர்” என்று கூறும் அதர்வண வேத செய்யுள்கூட உண்டு. தொன்மையான உபநிடதத்தில் ஒரு சம்பவம்: ரிஷி ஒருவரை ஐந்து பேர் சந்தித்து ஆசி கோரினார்கள்; ஐவரில் ஒருவர் அக்னியையும் இன்னொருவர் வாயுவையும் இன்னொருவர் பூமியையும் வழிபடுபவர். ரிஷி ஒவ்வொருவராக அழைத்து “நீ யாரை வழிபடுகிறாய்” என்று கேட்பார்; அவர் “அக்னி” என்பார்; “அதனால்தான் நீ நல்லபடியாக இருக்கிறாய். உன் குடும்பத்திற்கு எல்லா நன்மையும் ஏற்படுகிறது” என்பார்.

அதேபோல, இன்னொருவர் வாயு என்று பதில் சொன்னதும் “அதனால்தான் நீ நல்ல படியாக இருக்கிறாய்; உன் குடும்பத்திற்கு எல்லா நன்மையும் ஏற்படுகிறது” என்பார் ரிஷி. இப்படி ஐந்து பேருக்கும் இப்படியே ஆசி கூறினார். அவர்களுக்கு குழப்பமாக இருந்தது; ரிஷி விளக்கமாகச் சொன்னார்: “ஒவ்வொருவரும் உங்களுக்கு எதில் பக்தி உள்ளதோ அதை பிடித்துக் கொண்டிருக்கிறீர்கள்; ஐம்பூதங்களும் சேர்ந்த பிரபஞ்சத்தை, முழுமையை நீங்கள் பார்க்கத் தவறுவதால் உங்களுக்கு குழப்பம் ஏற்படுகிறது; முழுமையை சிந்தியுங்கள்” என்றார்.

இதுதான் நமது பாரம்பரியம். இந்த பாரம்பரியத்திற்கும் நமது தாய்நாடு தான் ஆதாரம். அதாவது நாம் அனைவரும் ஒரே மூதாதையர் வழி வந்தவர்கள் என்ற எண்ணம் நம்மை ஒன்றுபடுத்துகிறது. நான்கு ஆண்டுகளுக்கு முன் அறிவியலே, பாரதத்தில் உள்ள நம் அனைவருக்கும் ஒரே டிஎன்ஏ தான் என்று எடுத்துக் கூறி விட்டது. நாமெல்லாம் ஒன்றாக இருக்கிறோம் என்று சிந்தித்தாலே உள்ளத்தில் பரிவும் கனிவும் ஏற்படுகிறது.அந்த நல்ல உணர்வின் காரணமாகத்தான் ஒற்றுமை ஏற்படுகிறதே தவிர அரசியலால் அல்ல. இதுதான் சங்கத்தின் கொள்கை.

டாக்டர் ஹெட்கேவார், ஹிந்துக்கள் தங்களுடைய வீழ்ச்சிக்கு ஆங்கிலேயர்களையும் முஸ்லிம்களையும் குறை சொல்வது தவறு என்பார். வரலாறு நெடுக கொந்தளிப்புகள் ஏற்பட்டன, அதனால் பாதிப்பு ஏற்பட்டது என்பதெல்லாம் உண்மைதான். ஆனால் டாக்டர்ஜி, “நீ இந்த நாட்டின் சொந்தக்காரன், உன் சித்தாந்தம் மிக உன்னதமானது. அப்படியிருக்க உன்னுடைய கஷ்டங்களுக்கு மற்றவர்களை நீ ஏன் குறை சொல்கிறாய்? உன்னிடம் குறைபாடு இருந்தால் சரி செய்துகொள்” என்பார். இதுதான் சங்கத்தின் பார்வை. இன்று சிறுபான்மையினர் எனப் படுகிறவர்கள் மனதில் சங்கம் உங்களை விழுங்கிவிடும் என்று சொல்லி பயம் ஏற் படுத்தி வைத்திருக்கிறார்கள். சங்கத்தில் மொழி, மாநிலம், வகுப்பு, ஜாதி என்ற எந்த அடிப்படையியிலும் எவரையும் பெரும் பான்மை என்றோ சிறுபான்மை என்றோ குறிப்பிடுவதில்லை. ஏனென்றால் எல்லோரும் ஒரே சமுதாயம் என்பது சங்கத்தின் கருத்து. ஹிந்து பெரும்பான்மை தேசத்தில்நீ இருப்பதால் உன் மதம் அழிந்துவிடும் என்றும் சிறுபான்மையினர் மனதில் இன்னொரு பயத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

பெரும்பான்மை, சிறுபான்மை என்பதெல்லாம் வேறு நாடுகளில் இருக்கலாம். நமது நாட்டில் அந்த மனப்பான்மை கிடையாது. பல்வேறு காரணங்களுக்காக பலர் வந்தார்கள். வந்தவர்கள் எல்லாம் இன்றும் இருக்கிறார்கள். ஆனால் இந்த தேசத்தின் தொன்மையான பாரம்பரியம் காரணமாக அமைந்துள்ளது நமது அரசியல் சாசனம். அது அனைவருக்கும் பாதுகாப்பு அளிக்கிறது; உரிமைகளுக்கு உத்தரவாதம் தருகிறது. காரணம் இங்குள்ள சமுதாயம் அப்படி. சமுதாயத்தின் பார்வை அதுதான். எத்தனையோ சம்பவங்கள் நடக்கின்றன. பெரும்பான்மையினர் சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடந்தால் பெரும்பான்மை சமுதாயத்திலிருந்து அந்தத் தாக்குதலுக்கு கண்டனம் வந்துவிடுகிறது. நான் வீராவேசமாக பேசிவிடலாம், அதனால் நான் பிரபலமாகி விடலாம்.

ஆனால் ஹிந்துக்கள் என்னை ஆதரிக்கப் போவதில்லை. காரணம் ஹிந்துக்கள் தீவிரப் போக்கை ஆதரிப்பதில்லை. எதிரியே ஆனாலும் அவனுக்கு உயிர் உண்டு, எனவே அவன் உயிருடன் இருக்கட்டும் என்பதுதான் இங்கு உள்ள மனப்பான்மை. போரில் தோற்கும் எதிரி மன்னிப்பு கோரினால் அவனை மன்னித்து விடு என்பது இந்த ஊர் மக்கள் வழக்கம். இதுதான் இங்குள்ள பாரம்பரியம். “இந்த தேசத்தில் ஒரு முஸ்லிம் கூட இருக்கக்கூடாது என்று ஒருவர் சொல்கிறார் என்றால் அவர் ஹிந்துவாக இல்லாமல் போய்விடுகிறார்” என்று டெல்லியில் பேசும்போது முன்பு ஒரு முறை கூறி இருக்கிறேன். டாக்டர்ஜி வலியுறுத்தியது இதைத்தான்; பிறகு ஸ்ரீ குருஜி, அதற்குப்பிறகு ஸ்ரீ தேவரஸ் என வாழையடிவாழையாக சங்கத்தில் இந்த எண்ணம்தான் விதைக்கப்பட்டு வருகிறது.

சங்கம் பிரபலமடையாத நாட்களில் கூட இதே கருத்து தான் கூறப்பட்டது. இன்று சங்கம் வலிமையுடன் விளங்குகிறது. நான் வெளியிடும் கருத்துக்களை எண்ணற்றவர்கள் கேட்கிறார்கள். ஆனால் இது என் கருத்து அல்ல. சங்கத்தின் கருத்து. ஹிந்துஸ்தானம் ஒரே ராஷ்டிரம், நாம் அனைவரும் ஒரே சமுதாயம்; இது தான் என்றும் சங்கத்தின் பார்வை. ஆக்கிரமிக்கும் எண்ணத்துடன் முஸ்லிம்கள் வந்தார்கள் என்பது வரலாறு கூறும் உண்மை. அந்த ஆதி நாட்களிலிருந்து நீயும் நானும் வேறல்ல ஒரே சமுதாயத்தினர் என்ற எண்ணம் பரப்பப்பட்டுதான் வந்தது. குருநானக் சொன்னதும் அதுதான். சத்ரபதி சிவாஜி மகாராஜா காலத்தில் வாழ்ந்த சமர்த்த ராமதாஸ் துகாராம் போன்ற மகான்களும் அவர்களது அறிவுரைகளில் “அல்லா அல்லா என்கிறீர்களே, அவர் வேறு அல்ல. நாங்களும் அவரை அறிவோம். எதற்கு வீண் சண்டை?” என்பது போன்ற கருத்துக்கள் கொண்ட செய்யுள்கள் உண்டு.

தேசத்தில் ஹிந்துக்களையும் முஸ்லிம்களையும் ஒன்றுபடுத்தும் முயற்சி பற்றி என்னுடைய கருத்து இது: நமது மிக நீண்ட வரலாறு நெடுக தாக்குதல்கள், பதிலடி; அதனால் ஏற்பட்ட காயங்கள் எல்லாம் உண்டு. எனவே ஊரில் விஷயங்களை புரிந்து கொள்ளக் கூடியவர்கள் மனதில் ஒற்றுமை எண்ணம் வலுப்படச் செய்ய வேண்டும். வரலாறு நீண்டது என்பதால் இந்த முயற்சியும் நீண்ட நாள் நடந்து கொண்டே இருக்கும். முஸ்லிம்கள் மத்தியில் ஒற்றுமை எண்ணம் உள்ளவர்கள் இருப்பார்கள். ஆனால் அது வெளியில் தெரிவதில்லை. அவர்கள் அந்த மனநிலையில் திடமாக நிற்கச் செய்ய வேண்டும். இந்த முயற்சிக்கு எதிர்ப்பு தலை தூக்கும் போது ஹிந்துவுக்கு எதிராக ஹிந்து என்ற சூழல் கூட ஏற்படலாம். மதமாற்ற முயற்சிகள், கலவரங்கள் இவை நம் மனதில் பாதிப்பு ஏற்படுத்த விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஒற்றுமை ஏற்படுத்துவதில் நமக்கு சுயநலம் ஒன்றும் இல்லை. நாடு நம்முடையது; சமுதாயம் நம்முடையது; ஒற்றுமையால் நமது நாட்டுக்கு, சமுதாயத்துக்கு நன்மை என்பதால் முயற்சி செய்வோம்.

டெல்லியில் நான் பேசியது பற்றி ஸ்வயம்சேவகர்கள் கூட என்னிடம் கேட்டார்கள். “புதிது ஒன்றும் இல்லை. குருஜியின் ஞானகங்கை நூலில் உள்ள கருத்துதான் அது’’ என்றேன். ஸ்வயம்சேவகர்கள் புரிந்து கொண்டார்கள். ஹிந்து சமுதாயத்தை ஒற்றுமைப் படுத்தி வலுவுள்ளதாக்கிட வேண்டும் என்பதுதான் லட்சியம் என்பது அவர்களுக்கு தெளிவாகவே தெரியும்.இந்த சந்தர்ப்பத்தில் ஹிந்து என்றால் யார் என்று பார்க்க வேண்டும். உலகமே ஒரு குடும்பம் என்று எண்ணுபவர் ஹிந்து; அதை நினைவில் கொண்டு தொடர்ந்து ஒற்றுமை முயற்சி செய்ய வேண்டும். ஒற்றுமை ஏற்பட வெகு காலம் பிடிக்கும் என்பது தான்உண்மை. இந்த நூலை எழுதியவர் பிரச்சினையைத் தீர்க்க வழி முரண்படுவது அல்ல; பேச்சுவார்த்தை தான் உதவும் என்று கூறுகிறார். இவர் கூறுவது சரி.

ஒற்றுமை என்றால் அதற்கு நமது தாய்நாடு தான், நமது பாரம்பரியம் தான் ஆதாரம். நமது சமுதாயத்தின் கெளரவம் தான் ஆதாரம். மற்றபடி நமக்கு பரிபூரண சுதந்திரம்தான். இஸ்லாம் உள்பட எல்லா வழிமுறைகளையும் வாழ்ந்து பார்த்தபிறகு ராமகிருஷ்ண பரமஹம்சர் தெரிவித்த கருத்து “பாதை பல, இலக்கு ஒன்றே” என்பது தான். இத்தகைய ஒருமைப்பாட்டு சத்தியத்தை எடுத்துச் சொல்லக் கூடியவர்கள் இன்றும் உண்டு. முஸ்லிம் பக்கீர்களுக்கு ஹிந்து சீடர்களும் உண்டு ஹிந்து ஆன்றோர்களுக்கு முஸ்லிம் சீடர்களும் உண்டு. நமது ஆன்றோர்கள் அந்த சீடர்களுக்கு மந்திர தீட்சை அளிக்கும்போது ஸம்ஸ்கிருத மந்திரம் கொடுப்பதில்லை. குர்ஆன் வசனங்களையே உபதேசிப்பார்கள். எனது சொந்த ஊரான நாகபுரி சுற்று வட்டாரத்திலேயே இப்படி நாலைந்து பேர் இருக்கிறார்கள். இந்த உறவின் அடிப்படையில் ஒற்றுமை முயற்சி தொடரலாம்.

ஒவ்வொருவரும் தனது புரிதலுக்கு உகந்த விதத்தில் தனது வழிபாட்டு முறையை அமைத்துக் கொள்கிறார். அவரது சிரத்தை குறித்து இழிவாக பேசக்கூடாது. அது பதற்றத்திற்கு வழிவகுக்கும். மாறாக ஒருவர் மற்றொருவரை சரியானபடி புரிந்துகொண்டு ஒற்றுமை காண முயற்சி செய்யும்போது ’தேசம் பிளவுபட முடியாதது, தேசம் ஒரே தேசம்’ என்ற அடிப்படை அவசியம். எவருடைய பக்தியையும் இழிவுபடுத்தும் மனப்பான்மை தான் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்.ஹிந்துக்கள் பல தாக்குதல்களை பார்த்துவிட்டார்கள்.

பிறகு அதெல்லாம் ஓய்ந்து சமாதானம் தலைதூக்கியது. அதற்கிடையில் மதவெறியர்கள் கை ஓங்கியது கிலாபத் இயக்கத்தின் போதும் சரி பாகிஸ்தான் பிரிந்த போதும் சரி ஹிந்துக்கள் அதை அனுபவித்தார்கள். சுதந்திரத்திற்குப் பிறகும் அரசியல் தூண்டுதல் காரணமாக முஸ்லிம்கள் தனி அடையாளம் காப்பாற்றிக் கொள்ள முனைப்பு காட்டினார்கள். உடை முதலிய விஷயங்களில் தனி அடையாளத்தை கைவிட வேண்டியது இல்லை. முஸ்லிம்கள் இந்த நாட்டுக்குள் வருவதற்கு முன்பே உடை விஷயத்தில் வித வித அடையாளங்கள் உண்டு. இவை எல்லாவற்றுக்கும் மத்தியில் ஒரே சமுதாயமாக வாழ்வது என்பது வேறு எங்கும் சாத்தியமில்லை; பாரத பூமியில் தான் சாத்தியம். முஸ்லிம்களுக்கு ஆபத்து என்று பயமுறுத்தி வைத்திருக்கிறார்களே, அந்த பயத்தில் இருந்து முஸ்லிம்கள் விடுபட வேண்டும். அவர்கள் அந்த பயத்திலிருந்து விடுபட நாம் உதவ வேண்டும்.

உள்ளதை உள்ளபடியே ஏற்க வேண்டும். பாரத பூமி ஹிந்து ராஷ்டிரம் தான். கோமாதா பூஜிக்கப்பட வேண்டும். ஆனால் கூட்டமாக சேர்ந்து கொலை (லின்சிங்) செய்பவர்கள் ஹிந்துத்துவத்திற்கு எதிரானவர்கள் ஆகிவிடுகிறார்கள். அது பயங்கரவாதம். சட்டம் தன் வேலையை செய்யட்டும்; அதேநேரத்தில் பாரபட்சமின்றி சட்டம் செயல்படுத்தப்பட வேண்டும் என்பது முக்கியம். சங்கம் இன்று வளர்ந்தோங்கி உள்ளதால் நான் கூறும் இந்த கருத்துக்கள் குறித்து ஹிந்து சமுதாயத்தில் விவாதம் தொடங்க வாய்ப்பு உள்ளது. பெரும்பாலான மக்கள் என் இந்தக் கருத்தை ஏற்பார்கள் என்று நம்புகிறேன்.

சங்கம் ஒரு முயற்சியை தொடங்கியபின் பின் வாங்கியதில்லை. அதுபோலவே வெற்றி பெறும் சாத்தியம் பற்றி உறுதியான பின்புதான் சங்கம் முதல் அடி எடுத்து வைக்கிறது. எனவே வெகுகாலம் பிடித்தாலும் சமுதாய ஒருங்கிணைப்பு முழுமை அடையும். முழு சமுதாயமும் ஒன்றுபட்டு முன்னேறினால் தான் சங்கம் விரும்புகிறபடி தேசம் மகோன்னத நிலையை அடைய முடியும். அப்போதுதான் பாரதம் உலகின் குருவாக வழி பிறக்கும். அது இன்று உலகிற்கே மிகவும் அவசியம்.