மகா சிவராத்திரி

மாசி மாதத்தில் தேய்பிறை சதுர்த்தசி திதியில் வருவது மஹா சிவராத்திரி. இன்று எல்லா சிவாலயங்களிலும் நான்கு கால பூஜைகள் விசேஷமாக நடக்கும். இந்த சிவராத்திரி விரதத்தை யார் வேண்டுமானாலும் கடைபிடிக்கலாம்.

சிவராத்திரி விரதம் இருக்க விரும்புபவர்கள் அதிகாலையிலேயே நன்னீரில் நீராடி, தூய உடை உடுத்தி நெற்றியில் நீறணிந்து, சிவனுக்குரிய மந்திரமான ஓம் நமசிவாய என்ற பஞ்சாட்சர மந்திரத்தை ஜபிக்க வேண்டும். பின்னர் கோயிலுக்குச் சென்று நாலு கால பூஜையிலும் கலந்து கொள்ள வேண்டும். பகலில் கண்டிப்பாக உறங்கக் கூடாது. இரவு கண் விழிப்பதற்காக டி.வியோ, சினிமாவோ பார்க்கக்கூடாது. சிவனை நினைத்து அவரது திருநாமங்களை பாராயணம் செய்யலாம். சிவ புராணம் படிக்கலாம். வில்வத்தால் லிங்கத்திற்கு அர்ச்சனை செய்யலாம்.

பார்வதி தேவி, தான் ஈசனை நினைத்து பூஜைகள் செய்து வழிபட்ட காலம் சிவனுக்குரிய காலமாகப் போற்றப்பட வேண்டும் என்று வேண்டினாள். சிவனும் அவ்வாறே அருளினார். அந்த நாளே சிவராத்திரி என்று சிவ மகா புராணம் சொல்கிறது. பார்வதி தேவியைத் தொடர்ந்து சனகாதி முனிவர்களும், நந்தியும் சிவராத்திரி விரதமிருந்து தாங்கள் விரும்பியதைப் பெற்றதாகவும் அப்புராணம் இயம்புகிறது.

சிவராத்திரி அன்று அறியாமல் செய்த பூஜைகூட அமோக பலன் அளிக்கும் என்பதை மகாபாரதத்தில் வரும் ஒரு கதை விளக்குகிறது. சிவனை பூஜித்து அர்ஜுனன் பாசுபதாஸ்திரம் பெற்றது சிவராத்திரியில் தான், கண்ணப்ப நாயனார் லிங்கத்தின் கண்களிலிருந்து ரத்தம் வழிந்ததைப் பார்த்து விட்டு தன்னுடைய கண்ணையே அதில் வைத்து சிவ சாயுஜ்ய பதவி பெற்றதும், தன்னுடைய பக்தனான மார்க்கண்டேய முனிவருக்காக எமனையே சிவன் காலால் உதைத்ததும், பகீரதன் மிகக் கடுமையாகத் தவம் செய்து இந்த பூமிக்கு கங்கையைக் கொண்டு வந்ததும் இந்த புண்ணிய நாளில்தான் என்று சிவ புராணம் பேசுகிறது.

 

  • ஜெ. எஸ். ஸ்ரீதரன்