கவியரசு கண்ணதாசன்

கண்ணதாசனின்இயற்பெயர் முத்தையா. காரைக்குடிஅருகே சிறுகூடல்பட்டியில்  வணிகர் செட்டியார் மரபில் பிறந்த இவரது பெற்றோர் சாத்தப்பன் செட்டியார், விசாலாட்சி ஆச்சி. அவர்களுக்கு இவர் 8வது மகன். சிறுவயதில் இவரை சிகப்பு ஆச்சி என்பவர் தத்து எடுத்துக்கொண்டார். ஆரம்பக் கல்வியை சிறுகூடல் பட்டியிலும், அமராவதி புதூர் உயர்நிலைப்பள்ளியில் 8ம் வகுப்புவரை படித்தார். ஒரு பத்திரிக்கை ஆசிரியர் பணிக்கு சென்றபோது, அவர் வைத்துக் கொண்ட புனைப் பெயர்தான் கண்ணதாசன்.

கண்ணதாசனுக்கு மூன்று மனைவிகள். முதல் மனைவி பொன்னம்மாளுக்கு கண்மணி சுப்பு, கலைவாணன் உள்ளிட்ட நான்கு மகன்கள், மூன்று மகள்கள். இரண்டவது மனைவி பார்வதிக்கு பதிப்பாளர் காந்தி அண்ணாதுரை உள்ளிட்ட ஐந்து  மகன்களும் இரு மகள்களுமாக ஏழு குழந்தைகள். மூன்றாவது மனைவி வள்ளியம்மைக்கு  விசாலி என்னும் மகள் ஒருவர் உள்ளார்.

கண்ணதாசன் கம்பரின் செய்யுளிலும், பாரதியாரின் பாடல்களிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். அரசியல் ரீதியாக எம்.ஜி.ஆரை கண்ணதாசன் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார். தம்மைப் பற்றி கண்ணதாசன் விமர்சித்தபோதிலும் தான் ஆட்சி பொறுப்பேற்றபோது நட்புடன் தமிழக அரசின் அரசவைக் கவிஞராக கண்ணதாசனை எம்.ஜி.ஆர் நியமித்தார். தி.மு.க., ஈ.வி.கே. சம்பத்தின் தமிழ் தேசிய காங்கிரஸ், காங்கிரஸ் என கண்ணதாசன் அரசியல் கட்சிகளில் மாறி, மாறிப் பயணம் செய்தார்.

வனவாசம் நூலில் தன்னுடன் நட்பிலிருந்த நபர்கள் பற்றியும் தந்து சொந்த வாழ்க்கை பற்றியும் ஒளிவு மறைவின்றி எழுதியுள்ளார். தனது வாழ்வின் முற்பகுதியில் நாத்திகராகவும் பிற்பாதியில் ஆத்திகராகவும் வாழ்ந்தவர். தனது கவிதைகளாலும் ஆயிரக்கணக்கான திரைப்பட பாடல்களாலும் பாமர மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். காஞ்சிப் பெரியவரின் அருளாசியால், கண்ணதாசன் எழுதிய அர்த்தமுள்ள ஹிந்து மதம் எனும் நூலில், ஹிந்து மதத்தை பாமரருக்கும் எளிதில் புரியவைக்கும் வகையில், தனது சொந்த அனுபவங்களைக் கொண்டு எளிய தமிழில் அழகாக தொகுத்துத் தந்துள்ளார்.

உடல்நலக் குறைவு காரணமாக 1981, ஜூலை 24ல் அமெரிக்காவில் சிகாகோ நகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அக்டோபர் 17ல் மறைந்தார். அவர் மறைந்தாலும், அவரே எழுதி பாடியுள்ள அவரின் பாடலில், ‘நான் நிரந்தரமானவன் அழிவதில்லை. எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை’ என பாடியபடி அனைவரின் மனங்களிலும் நீங்காமல் என்றும் வாழ்ந்துகொண்டுள்ளார் கவியரசு கண்ணதாசன்.