கபளீகரம் செய்யும் காருண்யா

நல்லூர் வயலை காருண்யா நகர் என்று பெயர் மாற்றிய பால் தினகரன் குடும்பம், அங்கு அனுமதி இன்றி பல சர்ச்சுகளை புதிதாக கட்டியுள்ளனர். கோவையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ரங்கராஜு என்பவர் மதுவராயபுரம், பூலுவபட்டி, இக்கரை, ஆலாந்துறை, போளுவாம்பட்டி உள்ளிட்ட ஊராட்சிகளில் கடந்த 10 ஆண்டுகளில் எத்தனை கிறிஸ்தவ தேவாலயங்கள் கட்டுவதற்கு நிர்வாகம் அனுமதி அளித்தது என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பினார். அதற்கு ஊராட்சி நிர்வாகம், கடந்த 10 ஆண்டுகளில் தேவாலயங்கள், ஜெபக் கூடங்கள் கட்ட எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளது. ஆனால் இந்த நான்கு ஊராட்சிகளில் 18 தேவாலயங்கள், ஜெபக் கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும் காருண்யா பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள பெதெஸ்டா ஜெபக்கூடம் யானைகள் வழித்தடத்தில் அமைந்திருப்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. மேலும், இந்தச் சர்ச், ஜெபக் கூடங்களில் ஞாயிற்றுக் கிழமைகள் தோறும் இறைச்சி விருந்து வைத்து பழங்குடி மக்களை ஏமாற்றி மதம் மாற்றும் முயற்சிகள் நடப்பதாகவும் கூறப்படுகிறது.