பிரசாரத்தில் நேர்மறை அனுபவமே கிடைத்தது? மொடக்குறிச்சி பா.ஜ.க எம்.எல்.ஏ.

“ஈ.வே.ரா பிறந்த மண்ணில் தாமரை மலர்ந்தது” என்ற தலைப்புடன் செய்தியை ஊடகங்கள் வெளியிட்டபோது, தமிழகமே திரும்பி பார்த்தது. மொடக்குறிச்சி பா.ஜ.க எம்.எல்.ஏ டாக்டர் சி.சரஸ்வதியின் வெற்றி தான் அப்படி பிரமிப்புடன் பேசப்பட்டது. தொடர்ச்சியாக வாழ்த்து மழையில் நனைந்து வந்த அவரை, அலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு பேசினோம். “நான் விஜயபாரதம் தொடர்ந்து படித்து வருகிறேன்” என்று உற்சாகத்துடன் கேள்விகளை எதிர்கொண்டார்:

பா.ஜ.க.வில் எப்போது இணைந்தீர்கள்?
2016ல் தான் பா.ஜ.க.வுக்கு வந்தேன். அதற்கு முன்னால் எனக்கு அரசியலில் ஆர்வம் இருந்ததில்லை. மோடிஜியின் ஆட்சி, குஜராத் முதல்வராக செய்த சாதனைகள் என்னைக் கவர்ந்தன. பிறகு கட்சியின் கொள்கைகளையும் தெரிந்து கொண்டு இணைந்தேன். முதலில் மருத்துவ அணியில் மாநில செயலாளராகப் பணியாற்றி விட்டு, தற்போது தேசிய பொதுக்குழு உறுப்பினராக இருக்கிறேன்.

நீங்கள் பல மருத்துவப் பணிகளைச் செய்துள்ளதாகச் சொல்கிறார்களே?
கடந்த 50 ஆண்டுகளாக ஈரோடு நகரில் மருத்துவராகப் பணியாற்றி வருகிறேன். ஆண்டுதோறும் ஏழை மக்களுக்கு இலவச மருத்துவ முகாம்களை நடத்தி வருகிறேன். கட்சியில் சேர்ந்ததும் தொடர்ச்சியாக மருத்துவ முகாம்களை நடத்தி மக்களுடன் தொடர்பில் இருந்து வருகிறேன்.

ஆன்மிக அமைப்புகளுடனும் இணைந்து செயல்பட்டுள்ளீர்களா?
ஆமாம். 1981 முதல் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அம்மன் பீடத்துடன் இணைந்து செயல்படுகிறேன். ஆண்டுக்கு 3, 4 முறையாவது மேல்மருவத்தூருக்குச் சென்று விடுவேன். மேலும், உள்ளூர் மேல்மருவத்தூர் அம்மா இயக்கத்துடனும் இணைந்து செயல்பட்டு வருகிறேன். அவர்களின் மூலமும், ஏராளமான இலவச மருத்துவ முகாம்களை நடத்தி வருகிறேன்.

திமுகவின் முக்கியப் பிரமுகரை உங்கள் முதல் தேர்தலிலேயே வென்றுள்ளீர்களே?
அதற்கு நான் மட்டுமே காரணமல்ல. பாஜக, தேசிய வாக்காளர் பேரவை செயல்வீரர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து உழைத்ததும், அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் ஒத்து ழைப்பும் தான் வெற்றிக்குக் காரணம். ஐந்து குழுக்களாகப் பிரிந்து அனைத்துப் பகுதிகளுக்கும் இரண்டு, மூன்று முறை நேரில் சென்று தொடர்ந்து பிரச்சாரம் மேற் கொண்டோம். அதுதான் வெற்றிக்கு காரணம்.

தேர்தல் களத்தில் உங்கள் அனுபவம் எப்படி இருந்தது?
அனைத்து பகுதிகளிலும் நல்ல வரவேற்பு இருந்தது. பட்டியலின மக்களும் எங்களை அன்போடு உபசரித்தார்கள். சென்ற இடங்க ளில் நேர்மறையான எண்ணங்களையே பார்க்க முடிந்தது. பிரசாரத்தின்போது பத்தில் ஒரு குடும்பத்தில் அவர்களுக்கு மகப்பேறு வைத்தியம் பார்த்தது நான் தான் என்றார்கள். மகிழ்ச்சியாக இருந்தது.

பா.ஜ.க.வுக்கு மக்களின் வரவேற்பு எப்படி இருக்கிறது?
நன்றாகவே இருக்கிறது. கட்சி சார்பற்ற மக்கள் கூட பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் தான் நாடு நன்றாக இருக்கும் என்று நினைக்கிறார்கள். தவறான பிரச்சாரங்களால் மக்கள் ஏமாறுகிறார்கள். நாம் அது பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தினால் புரிந்து கொள்கிறார்கள்.

பா.ஜ.க எம்.எல்.ஏ.வாக உங்கள் செயல்பாடு எப்படி இருக்கும்?
நான் செய்யப் போகும் வேலைகள் பக்கத்தில் உள்ள தொகுதி மக்களும் எங்கள் தொகுதிக்கு பா.ஜ.க எம்.எல்.ஏ. தான் வர வேண்டும் என்று நினைக்கும்படி இருக்கும். எனது செயல்பாடுகள் நிச்சயம் அப்படித்தான் இருக்கும்.

தொகுதி மக்களுக்கு என்ன செய்ய திட்டமிட்டுள்ளீர்கள்?
ஒரு மருத்துவராக எனது தொகுதி மக்களின் உடல்நிலை எனக்கு முக்கியம். அதிலும் இந்த கொரோனா காலத்தில் சுகாதார விழிப்புணர்வை ஏற்படுத்த நினைத்துள்ளேன். ’ஸ்வச் பாரத்’ (தூய்மை பாரதம்) இயக்கம் பற்றிய விழிப்புணர்வுப் பணிகளை ஏற்கெனவே ஆரம்பித்துவிட்டேன். மத்திய அரசின் சுகாதார திட்டங்களைப் பற்றி மக்களுக்கு எடுத்துச் சொல்வேன். அடுத்து கல்வித்துறை. மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை குறித்து விரிவாக எடுத்துரைப்பேன். கல்வி கொள்கை அமலானால், அரசுப் பள்ளிகளின் தரம் மேம்படும். அதற்கான நடவடிக்கைகளில் இறங்குவேன். பின்தங்கிய தொகுதியான மொடக்குறிச்சியில் வேலைவாய்ப்புகளை அதிகரிக்க முயற்சிகளை மேற்கொள்வேன். இந்தப் பணிகளை ஒவ்வொன்றாக செய்து முடிப்பேன்.

ஆர்.எஸ்.எஸ். தொடர்பு உங்களுக்கு எப்போது ஏற்பட்டது?
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஈரோடு தாலுகாவின் முன்னாள் சங்கசாலக் (தலைவர்) என்.முத்துசாமி, எனது எதிர்வீட்டுக்காரர். அவர் மூலமாக எனக்கு ஆர்.எஸ்.எஸ். பற்றி பா.ஜ.க.வுக்கு வருவதற்கு முன்பே தெரியும். இன்னும் சொல்லப் போனால், ஆர்.எஸ்.எஸ். ஸ்வயம்சேவகர்களுடன் தான்முதலிலிருந்தே தொடர்பில் இருக்கிறேன்.