மண்வளம் காக்க…

தாயும், தாய்நாடும் நாம் ஒவ்வொருவருக்கும் பிரதானம். தங்கள் குடும்பத்துக்காக தியாகம் புரிபவரையும் தாய்நாட்டைக்காக்கும் ராணுவீரர்கள் தியாகத்தையும் நாம் மதிக்கிறோம். ஆனால், நாம் வாழும் இப்பூமியை காக்க நாம் என்ன செய்து வருகிறோம்? வளமான மண் என்பது மாநகரங்களில் சதுரடி பல ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை போவதல்ல. ஒரு கனஅடியில் பத்து மண்புழுக்கள் இருக்குமெனில், அந்த மண் உயிரோட்டமுள்ள மண்ணாக அனைத்து நுண்ணூட்ட, பேரூட்ட சத்துக்களுடன் இருக்கும். அதுவே வளமான மண். இந்த மண்ணில், எந்தப் பொருளை விதைத்தாலும் முழுமையான விளைச்சலைத் தரும். பாரதம், மிதவெப்ப நாடு. வேளாண், அதன் சார்பு தொழில்களே இங்கு பிரதானம். நமது நாட்டை நோக்கி வெளிநாட்டவர்கள் சுற்றுலாப் பயணிகளாக வருகின்றனர்.

அதேபோல, வெளிநாட்டிலிருந்து பறவையினங்கள் வான்வழியாக நம்முடைய நாட்டிற்கு வருவதையும், ஆமைகள் கடலில் பலநூறு மைல்கள் கடந்து வருவதையும் நாம் அறிவோம். இவைகள் சுற்றுலாவுக்காகவா வருகின்றன? இல்லை. அவை, தங்களுடைய இனப்பெருக்கத்திற்காக பாரதத்துக்கு வருகின்றன. ஆனால், இன்றைக்கு நாட்டிலுள்ள பெண்களில் 60 சதவீத பேர் கர்ப்பப்பை இல்லாமல் இருப்பதாக ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. அதேபோல் இந்திய மண்ணில் வெளிநாட்டு உரங்களை தெளித்து மண்ணும் இன்று மலடாகியுள்ளது. எனவே, இத்தகைய சூழலில் வருங்கால சந்ததிகளைக் காத்து, பாரத அன்னை என்றும் இளமையோடும், எழிலோடும் இருக்க நம்முடைய மண்ணை நாம் பாதுகாக்க வேண்டும்.

நம் மண்ணை காக்க அவற்றில் நுண்ணுயிர் பெருக்கத்தை அதிகப்படுத்த வேண்டும். நம்முடைய பகுதிகளில் இருந்த ஏரி, குளங்களை அழித்து வீடு கட்டிவிட்டு, மாடியில் பறவைகளுக்கு பாத்திரத்தில் நீர் வைப்போம் என்பது ஏற்புடையதா? பல நூறு சதுரடியில் பறந்து விரிந்திருந்த ஏரிகளில் இறந்துபோன மீன்களை உண்டு பறவைகள், பறகைளின் எச்சத்தை உண்ட மீன்கள், கரையோரங்களில் உள்ள மரங்களின் எச்சங்களில் பல லட்சக்கணக்கான நுண்ணுயிரிகள் உருவாகி நம்மையும், நம் சமுதாயத்தையும் காப்பாற்றியது. ஆனால் பாவத்திற்கு பரிகாரம் என்று பாத்திரத்தில் மாடியில் தண்ணீர் வைப்பது முறையாகுமா? பல்லுயிரிகள் வாழ்ந்த இடத்தில் வாழ்வதற்கு வழி செய்ய வேண்டாமா?

மண்வளம் காக்கப்பட வேண்டுமெனில் மரம் நடுவதால் மட்டும் முழுமையான பயன் கிடைத்துவிடாது. மண்ணின் மீது நேரடியாக வெயிலின் தாக்கம் இருக்க கூடாது. அதேபோல் மழையும், பனியும் நேரடியாக தாக்கக் கூடாது. இவை, மண்ணின் வளத்தை அழித்துவிடும். எனவே, விவசாய பெருமக்கள் தங்களுடைய விளைநிலங்களில் பயிர் செய்யாத காலகட்டங்களில் சனப்பை, தக்கைப்பூண்டு போன்ற செடிகளை வளர்த்து வேளாண் பணி துவங்குவதற்கு முன் இவைகளை மடக்கி உழுது வயலுக்கு மிக முக்கிய தேவையான தொழுஉரமாகவும் பயன்படுத்தி மண்ணின் வளத்தை காக்கும் பழக்கத்தை இதர பகுதிகளிலும் பின்பற்றினால் சிறப்பாக இருக்கும்.

பருவமில்லா காலங்களில் வயலை உழுது, மண்ணை கிளறி விடும்போது அதிலுள்ள களைகள் அப்புறப்படுத்தப்படும். மேலும் நோய்களை உருவாக்கக்கூடிய பாக்டீரியா, வைரஸ் கிருமிகள் அழிந்துபோவதற்கு வாய்ப்பாகும். மேலும் மண்ணின் ஈரப்பதம் தொடர்ந்து காக்கப்பட வேண்டும். இதனால் மண்ணில் நுண்ணுயிர் பெருக்கம் உருவாகும். இவற்றை அதிகப்படுத்த பஞ்சகவ்யம், மாவு கரைசல்களை பயன்படுத்தி மண்ணின் நுண்ணூட்டச் சத்துக்களை அதிகமாக்குவதன் மூலமாக மண்வளம் பெரும். இவற்றை விட பிரதானமாக மண்ணிற்கு வலுசேர்ப்பது, மண்ணின் சக்தியை அதிகப்படுத்துவது பசுஞ்சாண உரமே ஆகும். குறிப்பாக, வேளாண் கழிவுகளை உண்டு வாழும் நாட்டுப்பசுக்களின் சாணமே சிறந்த உரமாகும். இறக்குமதி செய்யப்பட்ட மாடுகள் வேளாண் கழிவுகளைவிட இதர சத்துக்களுக்காக அடர் தீவனம் என்ற பெயரில் வேதி பொருட்கள் தரப்படுவதால், நாட்டுப் பசுஞ்சாணம் அளவிற்கு அவற்றில் வீரியம் இருக்காது.

பாரத நாட்டின் மண்ணை காக்கும் பொறுப்பு நம் அனைவருக்கும் இருக்கிறது. “ஜெய் ஜவான்! ஜெய் கிசான்!” என்று கோஷம் எழுப்புவதால் மட்டும் பயன் ஒன்றும் இல்லை. ஒவ்வொரு குடிமகனும் இந்த மண்ணைப் பாதுகாக்கப் பாடுபட வேண்டும். நாம் வாழும் பகுதியில் உள்ள மண்ணைப் பாதுகாக்க, அந்த மாபெரும் பணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு உதவுவதற்காக நாட்டுப்பசு வளர்ப்போம். மரம் நட்டு பராமரிப்போம். மேலும் அருகில் இருக்கும் ஏரி, குளங்களைக் காக்க பயன்பாட்டாளர்கள் கொண்ட குழு ஒன்றை அமைப்போம். ஒத்த சிந்தனையுடைய மக்களை ஒன்றுசேர்த்து இம்மண்ணை காக்க, மண்ணின் சக்தியை பெருக்க விவசாய உற்பத்தியை அதிகப்படுத்துவதன் மூலமாக நாட்டின் வருவாயை அதிகப்படுத்துவோம். நஞ்சில்லாத உணவுவையும், நஞ்சில்லாத மண்ணையும், நஞ்சில்லாத மனிதர்களையும் உருவாக்கி வரும் பாரத தலைமுறை வலுவானதாகவும், வளமானதாகவும் இருக்க நம்மாலான சிறு தொண்டை செய்வோம்.
கட்டுரையாளர் :
மாநில செய்தித் தொடர்பாளர், பாரதிய கிசான் சங்கம்.