வெற்றியின் ரகசியம்

பிரபல தொழிலதிபர், சிந்தனையாளர், புரவலர், எழுத்தாளர் என பன்முகத்தன்மை கொண்ட பத்மஸ்ரீ நல்லி குப்புசாமி செட்டியார் விஜயபாரதத்திற்காக அளித்த நேர்காணல்.

வீட்டில் தெலுங்கு, வெளியே தமிழ் என்று இருக்கிறீர்களே, அது எப்படி?
தாய்மொழி தெலுங்கு, நான் பிறந்து வளர்ந்தது தமிழ்நாட்டில், வாடிக்கையாளர்கள் பெரும்பாலானவர்கள் தமிழர்கள். சப்ளை செய்பவர்கள் தெலுங்கு, ஹிந்தி பேசுபவர்கள்.

வாடிக்கையாளர்கள் உறவு என்றால் அதற்கு தங்களை உதாரணமாகச் சொல்லலாம். வாசகர்களிடமும் தாங்கள் பெயர் பெற்றி ருக்கிறீர்கள். அது ஏற்பட்டது எப்படி?
வாடிக்கையாளர்கள் உறவை என் தாத்தா நல்லி சின்னசாமி செட்டியார் உருவாக்கினார். என் தந்தை நாராயணசாமி செட்டியார் வளர்த்தார். நான் என்னால் முடிந்த அளவிற்கு அதை விரிவாக்கினேன்.

எதன் அடிப்படையில் தங்கள் வாடிக்கையாளர் உறவு அமைகிறது?
சரக்குகளின் தரம், அன்புடன், கனிவுடன் நியாயமான விலையில் விற்பனை செய்வது மரியாதையுடன் வாடிக்கையாளரை நடத்துவது.

தொழிலதிபர், எழுத்தாளராக மாறியது எப்படி?
முதலில் நான் ஒரு வாசகன், அதன் பிறகே நான் ஒரு எழுத்தாளனானேன். அதுவும் தற்செயலாக நடந்தது.

தங்கள் முதல் புத்தகம் எது?
1983ல் அருணோதயம் பதிப்பகம் கேட்டுக்கொண்டதினால் அவர்களுக்காக எங்கள் கடையைப் பற்றியும், என்னைப் பற்றியும் ‘வெற்றியின் வரலாறு’ என்ற தலைப்பில் ஒரு புத்தகம் எழுதிக்கொடுத்தேன் அதுவே என் முதல் புத்தகம். நான் சொல்லச் சொல்ல, எல்லா விஷயங்களையும் ஒருவர் எழுதினார். அடுத்தடுத்த புத்தகங்களை நானே எழுதினேன்.

படித்து தெரிந்துகொண்ட தகவல்களை வைத்து புத்தகங்கள் எழுதுவதாகச் சொல்கிறீர்கள். களப்பணி செய்து புத்தகங்கள் எழுதியதுண்டா?
அப்படியும் ஒரு புத்தகம் எழுதினேன். அதில் என் உழைப்பும், பணமும் அதிகமாக இருந்தது. அதுதான் ‘பாடகச்சேரி மகான் ராமலிங்க சுவாமிகள்’ என்ற புத்தகம். அதற்காக தமிழ்நாட்டில் பல ஊர்களுக்குச் சென்றேன். ஆந்திர பிரதேசத்திற்கும், கர்நாடகத்திற்கும் சென்று அந்த மகான் சம்பந்தப்பட்டவர்களை சந்தித்து பேட்டி எடுத்தேன். அந்தப் புத்தகம் இதுவரை நான்கு பதிப்புகளைக் கண்டிருக்கிறது. பாடகச்சேரி மகானைப் பற்றிய விரிவான ஆதாரப்பூர்வமான புத்தகம் அது.

இதுவரை தாங்கள் எழுதிய புத்தகங்களில் தங்களுக்கு மிகவும் பிடித்தமானவை எவை?
பெற்ற குழந்தைகளில் யாரை மிகவும் பிடிக்கும் என்று சொல்ல முடியுமா? ஒவ்வொரு புத்தகத்தையும் ஒவ்வொரு காரணத்திற்காக எழுதினேன்.

இதிகாசங்களை சுருக்கி எழுதியிருக்கிறீர்களே, அது பற்றி தெரிந்து கொள்ளலாமா?
சுவாமி விவேகானந்தர் நூல்களை நான் படித்திருக்கிறேன். ஒரு சொற்பொழிவில் அவர் மகாபாரதத்தில் வரும் வியாத கீதை பற்றி குறிப்பிட்டிருக்கிறார். அதைப் படித்தத்தில் இருந்து வியாத கீதையை முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டுமென்று நூலகங்களுக்குச் சென்றேன். தமிழில் வியாத கீதை பற்றி முழுமையான புத்தகங்கள் எதுவும் இல்லை. எனவே, அதன் ஆங்கில மூலத்தைத் தேடி எடுத்து மொழிபெயர்த்தேன். அது சிறு புத்தகம் தான். எனினும் தமிழில் அதுவே முழுமையான வியாத கீதை.
கோயம்புத்தூரில் நல்லி திசை எட்டும் மொழிபெயர்ப்பு விருதுகள் வழங்கும் விழாவில் பொள்ளாச்சி தொழிலதிபர் மாணிக்கம் ‘வியாத கீதை’ நூலை வெளியிட்டார். அதன் பிறகு விதுர நீதியில் உள்ள ஸ்லோகங்களில் தமிழ் மொழிபெயர்ப்பை படித்தேன். 400க்கும் மேற்பட்ட ஸ்லோகங்களிள் இருந்து 375ஐ தேர்ந்தெடுத்து ஒவ்வொரு ஸ்லோகத்திற்கு ஒரு பக்கம் வீதம் விளக்கம் எழுதினேன். அது விதுர நீதியில் நிர்வாகம் என்ற பெயரில் வெளிவந்தது. அதற்கு இலக்கிய சிந்தனைப் பரிசு கிடைத்தது. அதையடுத்து பீஷ்மர் கதைகளை எழுத விரும்பினேன்.
அப்போது மகாபாரதத்தை சுருக்கி எழுதலாமே என்ற எண்ணம் வந்ததால், ‘வியாசர் அறம்’ என்ற நூலை எழுதினேன். ‘வியாசர் அறம்’ புத்தகம் கூடுதல் கதைகளுடன் இரண்டாம் பதிப்பாக விரைவில் வெளிவர இருக்கிறது. மகாபாரதத்தின் 60 கதைகளை சுருக்கித் தந்து ஒவ்வொன்றுக்கும் ‘அறம்’ என்ற பகுதியில் தாத்பர்யங்களைத் தந்து ஒவ்வொரு குறளும், அதன் பொருளும் என்று திருக்குறளையும் ஒப்பிட்டேன். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதை ஒட்டி வால்மீகி அறம் என்றத் தலைப்பில் ராமாயணக் கதைகளை தொகுத்து எழுதினேன். வித்தியாசமான புத்தகம் என்பதால் அதுவும் நல்ல வரவேற்பு பெற்றது.

எந்தெந்த புத்தகங்களுக்கு பரிசுகள் கிடைத்தன?
‘வியாபாரத்தைப் பெருக்குவது எப்படி’, ‘உறவு காக்கும் வணிகம்’ என்ற புத்தகங்களுக்கு தமிழ் வளர்ச்சித் துறை எனக்கு பரிசுகள் கொடுத்தது. திருப்பூர் தமிழ்ச் சங்கம் ‘அர்த்த சாஸ்திர அறிவுரைகள்’ என்ற புத்தகத்திற்குபரிசு கொடுத்து. இலக்கியச் சிந்தனை விருது ‘விதுர நீதியில் நிர்வாகம்’ புத்தகத்திற்கு கிடைத்தது. பழைய இலக்கியப் படைப்புகளில் இருந்து நிர்வாக கோட்பாடுகளை எடுத்துச் சொன்ன பல நூல்களுக்காக ராஜா சர் அண்ணாமலை செட்டியார் விருது கிடைத்தது.

இன்னும் என்னென்ன எழுத திட்ட மிட்டிருக்கிறீர்கள்?
63 நாயன்மார்களைப் பற்றியும், அவர்களது பணி, போதனைகள் பற்றி ஒரு புத்தகத்தை இந்த வருடம் எழுத திட்டமிட்டிருக்கிறேன். பல அமைப்புகளின் பரிசுகள் பெருமைக்குரியன என்றாலும் உங்களைப் போன்ற வாசகர்கள் நேரிலும், தபால் மூலமாக பாராட்டுவது கூடுதல் உற்சாகம் தருகிறது. முதலில் என் விற்பனையாளர்களுக்காக ஒரு குறிப்புகள் எழுதினேன்.அதற்கு பரிசு கிடைத்ததினால் வாடிக்கையாளர் உறவு பற்றி புத்தகம் எழுதினேன். அதற்கும் பரிசு கிடைத்தது. இப்போது பொது வாசகர்களுக்காகவும், இளம் தலைமுறையினருக்காகவும் எழுதிக் கொண்டிருக்கிறேன்.