துள்ளுவதுமில்லை, துவளுவதுமில்லை

சமீபத்தில், இருவேறு தொலைக்காட்சி சானல்களில் இரண்டு பேட்டிகளைக் கண்டேன். வேறு வேறு செய்தியாளர்கள்,- பிரமுகர்கள் என்ற போதும் அவை தெரிவித்த கருத்தென்னவோ ஒன்று தான்.

நிராசை என்பதேது?
முதலில் பார்த்தது பிரபல ஆங்கில தொலைக்காட்சி ஒன்றின் மாநாடு. இந்த ஆண்டு, தென் பாரதத்தை மையமாகக் கொண்டு சென்னையில் நடத்தினார்கள். அந்த மாநாட்டு அமர்வு ஒன்றில் நந்தகுமார் பங்கு கொண்டார். அவர் ‘ப்ரக்ஞா ப்ரவாஹ்’ என்ற – தேச நலம் விழையும் அறிஞர் பெருமக்கள் அமைப்பின் தமிழகத்தின் ‘தேசிய சிந்தனை கழகம்’ அகில பாரதத் தலைவர், மலையாள வார இதழான ‘கேசரி’யின் முன்னாள் ஆசிரியர். அவரிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்வி: உங்கள் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ் பல துறைகளிலும் சாதனை படைத்தாலும் கேரளாவில் அரசியல் முடிவுகள் உங்கள் விருப்படி அமைவதில்லேயே, அதனால் நீங்கள் என்றாவது மனத்தளர்ச்சி அடைந்ததுண்டா? அதற்கு, “சங்கத்தின் கார்யகர்த்தாவிற்கு (களப்பணியாளனுக்கு) நிராசை என்பதேது? நாங்கள் பெற்ற பயிற்சி அத்தகையது” என்று பளீரென்று சொல்லிவிட்டு கேள்வி, கேட்டவருக்கும் பார்வையாளர்களுக்கும் தெளிவாக்கினார்.

பதவி அல்ல, பொறுப்பு இது
இந்த மாதத்தின் துவக்கத்தில், அஸ்ஸாம் மாநில முதல்வர் சர்பானந்த் சோனாவாலை பேட்டி கண்டார் ஒரு பெண்மணி. இவர் எதிராளியின் வாயைக் கிண்டி வார்த்தைகளை வாங்குவதில் திறமைசாலி. அந்த சந்திப்பில், பல வழிகளில் மீண்டும் மீண்டும் சர்பானந்த்தை, “போன முறை போலில்லாமல் தேர்தல் களத்தில் இந்தமுறை கட்சி உங்களை முதல்வராக அறிவிக்கவில்லையே? இதனால் உங்களுக்கு வருத்தம் இல்லையா?” என்று கேட்டுக் கொண்டேயிருந்தார். சர்பானந்த், இறுதி வரை சிறிதும் சளைக்காமல், புன்முறுவல் மாறாமல், ”இதில் வருத்தம் கொள்ள என்ன இருக்கிறது? சென்ற முறை என் தலைமை இட்ட பணி அது. இந்த முறை,பா.ஜ.கவின் ஆட்சி இரண்டாவது முறை எங்கள் மாநிலத்தில் தொடர என் பங்கும் இருக்க வேண்டும். அதுதான் என் பொறுப்பு” என்று கூறினார்.

சொல்வதெல்லாம் உண்மை
1977 மார்ச்சில் நெருக்கடி நிலையை எதிர்த்து நடந்த நாடாளுமன்ற தேர்தலில் இந்திரா காங்கிரஸ் பல மாநிலங்களில் துடைத்து எறியப்பட்டதில் பல ஸ்வயம் சேவகர்களுக்கு நியாயமான பெரும் பங்கு உண்டு என்றாலும் துள்ளிக் குதிக்கவில்லை. இரண்டே ஆண்டுகளில், அதே ஜனதா கட்சியினர் தங்கள் இயக்கத்தைக் குற்றம் சாட்டிக் கட்சியை உடைத்தபோதும் துவண்டு போய் விடவில்லை. கீதை சொல்லும் சமநிலை தவறாதவர்களாய், வள்ளுவன் காட்டும் ‘போர்க்களத்தில் உடல் எங்கும் அம்புகள் தைத்திருந்தாலும் கம்பீரத்தைக் கைவிடாத யானையைப்’ போன்றவர்களாய் (ஊக்கமுடைமை குறள் 7) லட்சியப் பாதையில் முன்னேறிச் செல்பவர்கள் அவர்கள்.