ஊட்டம் தரும் பூமித்தாய்க்கு ஒரு சிறிய கைமாறு இயக்கம்!

உலகில் நாம் உயிர் வாழ இன்றி அமையாதது பஞ்சபூதங்களான நெருப்பு, நிலம், நீர், காற்று, ஆகாயம் ஆகியவையே. எனவேதான் நம் முன்னோர்கள் இவற்றை வணங்கியதோடு போற்றிப் பாதுகாக்கவும் செய்தனர். மேலும், இறைவனின் படைப்பில் மனிதர்கள் மட்டுமே மேலானவர்கள் என்ற எண்ணம் இல்லாமல் மற்ற ஜீவராசிகளான பறவைகள், விலங்குகள், மரம், செடி, கொடியையும் கூட நாம் நேசித்து வந்தோம்.

இந்த பரந்த மனப்பான்மையுடன் கூடிய சிறந்த அணுகுமுறையுடன் செயல்பட்டதால் தான், இந்தியா பல நூற்றாண்டுகளாக விவசாயம் உள்ளிட்ட வர்த்தகத்தில் உலகின் தலைசிறந்த முதன்மை நாடாக பொது ஆண்டு 1760 வரை சிறந்து விளங்கி இருந்தது. மேற்கத்திய நாடுகள், நம் நாட்டினுடைய பாரம்பரியம் மிக்க விவசாயத்தை கண்டு பிரமித்துப்போனதற்கு காரணம், நல்ல விளைச்சலையும் கொடுத்து, லாபத்தையும் கொடுத்து அதேசமயம் நிலம் கெட்டுப்போகாமல் இருந்ததே. அதற்குக் காரணம் இயற்கை வேளாண்மை முறையும் பாரம்பரிய விதைகளும்தான் என்பதை நன்கு புரிந்துகொண்டனர்.

நம் நாடு அடிமைப்பட்டிருந்த காலத்தில் மேலை நாட்டினர் நயவஞ்சகமாக திட்டமிட்ட ரீதியில் சதி செய்து, சூது வாது தெரியாத நம் விவசாயிகளிடம் இருந்த பாரம்பரிய விதைகளை அழித்ததோடு ரசாயனம் சார்ந்த விவசாயத்தை வேண்டுமென்றே திணித்ததன் காரணமாகதான், இன்று நம் நிலம் ஜீவ களை இழந்து காணப்படுகின்றது. மேலும், ஒற்றைப் பயிர் சாகுபடி, ரசாயனக் கழிவுகளை விளை நிலத்தில் செலுத்துதல், காடுகளை அழித்தல், செயற்கை உரம், பூச்சிக்கொல்லி மருந்து அடித்தல் போன்ற காரணங்களினால், விவசாயத்திற்கு இன்றியமையாத உயிரினங்களான மண்புழு,பறவைகள், வண்ணத்துப்பூச்சிகள் போன்றவை வாழ்வதற்கு தகுதியற்ற நிலமாக மாறி வருகிறது. பயிர்களுக்குப் புதிது புதிதாக ஏராளமான நோய்கள் உருவெடுத்து வருகின்றன.

எனவே, நாம் இப்போது பின்பற்றி வரும் மேற்கத்திய முறையை மிக விரைவாக மாற்றியமைத்து, நமது முன்னோர்கள் வகுத்துக் கொடுத்த லாபத்தைக் கொடுக்கும் பாரம்பரிய விவசாய முறைக்கு திரும்புவோம். இதன் மூலம் மட்டுமே மண்ணிற்கு உயிர்த்தன்மை ஏற்படுத்த முடியும். அதன் மூலம் மட்டுமே மலட்டுத்தன்மை, கேன்சர், வாதம் போன்ற நோய்கள் இல்லாத, பாரதிய சமுதாயத்தை நாம் உருவாக்க இயலும். விவசாயத்தைலாபகரமான தொழிலாகவும் ஆக்க இயலும்.

நம்மாழ்வார், சுபாஷ் பாலேக்கர் போன்ற பலரும், ஈஷா மையம், அரவிந்தர் ஆசிரமம், விவேகானந்த கேந்திரம் போன்ற பல அமைப்புகளும் ஆயிரக்கணக்கான விவசாயிகள், பட்டதாரி மாணவர்களுக்கு லாபகரமான முறையில் இயற்கை விவசாயம் செய்வது எப்படி என்பதை சில வகுப்புகளில் புரிய வைக்கின்றனர். அதன் காரணமாக ரசாயன உரத்தில் இருந்து இயற்கை விவசாயத்திற்கு அவர்கள் மாறி வருகின்றனர்.

ரசாயன உரத்தால் ஆண்டுதோறும் செலவு அதிகரிப்பதுடன் சாகுபடியும் குறைந்து வருகின்றது. ஏக்கருக்கு 25 – 30 மூட்டை நெல் கிடைக்கின்றது என்று கூறும் விவசாயி அதற்காக செலவு செய்த யூரியா, பூச்சி மருந்து, டிராக்டர் செலவு போன்றவை குறித்தும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஒரு நாட்டுப் பசுவின் சாணம், கோமியம், மோர் மூலம் குறைந்தது 5 ஏக்கருக்கு தேவையான இயற்கை உரம், பூச்சி விரட்டி, ஜீவாமிர்தம், அமிர்த கரைசல் போன்றவற்றை தயார் செய்ய இயலும். குறைந்த காலத்தில் ரசாயன உரத்திலிருந்து இயற்கை விவசாயத்திற்கு நிலத்தை பக்குவப்படுத்த ஏராளமான வழி முறைகள் இன்று உள்ளன.

பாவ புண்ணியம்நம் குடும்பத்தில் விவசாயம் செய்துவந்த நமது மூதாதையர்கள் மனிதன் உயிர் வாழ இன்றியமையாத உணவை பயிரிட்டு வழங்கியதன் மூலம் பெரும் புண்ணியம் பெற்றனர். நாமும் விவசாயம் என்கின்ற புண்ணிய காரியம் செய்து புண்ணியம் பெறுகின்றோம். ஒரு வித்தியாசம் மட்டுமே மூதாதையர்களுக்கும் நமக்கும் இடையே உள்ளது.

இயற்கை விவசாயம் செய்ததனால் நமது முப்பாட்டனார் புண்ணியத்தை மட்டுமே பெற்றார். நாமோ பூச்சிக்கொல்லி மருந்து, செயற்கை உரம் போட்டு விஷம் கலந்த உணவு தானியங்கள், காய்கறிகள், கீரைகள் விற்பதன் மூலம் சிறிது பாவத்தையும் சுமந்து வருகின்றோம். (புற்றுநோய், மலட்டுத்தன்மை போன்ற பல நோய்கள் ஏற்பட நமது உணவு முறையே காரணம் ஆகின்றது). எனவே, முதல் கட்டமாக நமது குடும்பத்திற்காகவாவது சிறிதளவு நிலத்தில் இயற்கை விவசாயம் செய்திடுவோம்.
புண்ணியத்தை மட்டுமே விளைவிப்போம் ! பூ மாதாவின் அருள் பெற்றிடுவோம்!!