புதிய நாடாளுமன்ற கட்டடம் திறப்பு

டெல்லியில் 96 ஆண்டுகள் பழமையான நாடாளுமன்றத்தில் போதுமான இட வசதி இல்லாததால், புதிய நாடாளுமன்றக் கட்டடம் கட்ட மத்திய அரசு முடிவு செய்தது.அதன் படி, சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் கீழ், கடந்த 2020ம் ஆண்டு புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.சுமார் 970 கோடி ரூபாய் செலவில் அதிநவீன வசதிகளுடன் புதிய நாடாளுமன்ற கட்டடம் கட்டப்பட்டுள்ளது.நேற்று அதன் திறப்பு விழா கோலாகலமாக நடைபெற்றது.காலை 7.30 மணியளவில் ஹோம பூஜைகள் நடைபெற்றன.அதனைத் தொடர்ந்து கர்நாடகாவின் சிங்மங்களூரு சிருங்கேரி மடம் சார்பில் கணபதி ஹோமத்துடன் திறப்பு விழா பூஜை வேத மந்திரங்கள் முழங்க நடைபெற்றது.அதன் பின்னர் தமிழில் தேவாரம், திருவாசகம் ஓதப்பட்டது.இந்த விழாவில் பங்கேற்க 40 ஆதீனங்கள் டெல்லிக்கு சென்றனர்.அவர்கள் மந்திரங்களை ஓதினர்.பூஜை முடிந்த பிறகு 20 ஆதீனங்களிடம் பிரதமர் மோடி ஆசி பெற்று புதிய நாடாளுமன்ற கட்டடத்தை சம்பிரதாயப்படிதிறந்து வைத்தார்.அதையடுத்து, ஆதீனங்களிடம் இருந்து செங்கோலைப் பெற்று கொண்டு நாடாளுமன்ற வளாகத்திற்குள் சென்றார்.செங்கோலை மக்களவை சபாநாயகர் இருக்கை அருகே நிறுவினார்.அதைத் தொடர்ந்து திருஞான சம்பந்தரின் கோளறு பதிகம் உள்ளிட்ட பாடல்கள் இசைக்கப்பட்டன.செங்கோல் நிறுவப்பட்ட பிறகு இஸ்லாம், கிறிஸ்துவம், பௌத்தம் உள்ளிட்ட பல மதங்களின் சார்பில் சர்வ மத பிரார்த்தனைகள் நடைபெற்றன.முன்னதாக நாடாளுமன்ற கட்டடத்திற்கு வருகை தந்த பிரதமர் மோடியை மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா வரவேற்றார்.அதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.இதையடுத்து பிரதமர் மோடிக்கு பூர்ண கும்ப மரியாதை வழங்கப்பட்டது.புதிய நாடாளுமன்ற கட்டடப் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களையும் பிரதமர் இந்த நிகழ்ச்சியில் கௌரவித்தார்.