ஐ.டி அதிகாரிகள் தாக்கப்பட்ட விவகாரம்

கரூரில் வருமான வரித் துறையினர் மீது தி.மு.க குண்டர்கள் தாக்குதல் நடத்திய விவகாரம் குறித்து பா.ஜ.க மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில், “கரூரில் இரு வருமானவரித் துறை அதிகாரிகள் மற்றும் செந்தில்பாலாஜியின் விசுவாசிகள், இரு தரப்பினரின் மீதும் வழக்கு தொடுத்திருப்பதாக சொல்லப்படுவது வியப்பை அளிக்கிறது. மேலும், முன்னரே தகவல் சொல்லாது சென்றால் இப்படிதான் நடக்கும் என தி.மு.கவின் செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் கூறியிருப்பது கேலிக்கூத்து. சோதனைக்கு செல்லும் வருமானவரித் துறை அதிகாரிகளுக்கே, வாகனங்களில் ஏறும்போதுதான் எங்கு சோதனையிட போகிறார்கள் என்று தெரியும். அப்படி இருக்கையில், காவல் துறைக்கு எங்கு சோதனை நடக்கப்போகிறது என்ற தகவலை முன்னரே சொல்ல வேண்டும் என பொது அறிவுள்ளவர்கள் கேட்க மாட்டார்கள். வருமானவரித் துறையினர் எங்கு வேண்டுமானாலும் அறிவிப்பு இல்லாமல் சோதனையிடுவதற்கு அதிகாரம் உள்ளது என்பதை சட்டம் தெரிந்தவர்கள் மறுக்கமாட்டார்கள்.

அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தால் அதற்கான விளைவுகளுக்கு தொடர்புடையவர்கள் பொறுப்பேற்க வேண்டும். இதுவரை இந்த விவகாரத்தில் யாரும் கைது செய்யப்படாதது தமிழக அரசின், காவல்துறையின் பொறுப்பற்ற தன்மையை, மெத்தனப் போக்கை, தி.மு.கவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை தெளிவுப்படுத்துகிறது. மத்திய அரசின் ஊழியர்களை தாக்குவது, கொலை மிரட்டல் விடுப்பது, பணி செய்யவிடமால் தடுப்பது போன்ற குற்றங்களை தமிழக அரசு வேடிக்கை பார்த்தாலும், மத்திய அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது என்பதை தொடர்புள்ளவர்கள் உணர வேண்டும்” என்று கூறியுள்ளார்.