இடியாப்ப சிக்கலில் கம்யூனிஸ்ட்டுகள்

கேரளாவில் விரைவில் தேர்தல் நடைபெறவுள்ள சூழலில் சமீப காலமாக வெளிவந்து கொண்டிருக்கும் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மீதான அடுக்கடுக்கான புகார்கள் அக்கட்சியின் தொண்டர்களை சோர்வடைய வைத்துள்ளது. ஐயப்பன் கோயிலில் பெண்களை அனுமதித்தது, போதைப் பொருள் கடத்தல் வழக்கில் அக்கட்சியின் மாநில செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணனின் மகன் கைது, வெளிநாட்டுக்கு டாலர், தங்கம் கடத்திய வழக்கில் முதல்வர் பினராயி விஜயன், சபாநாயகர், மூன்று அமைச்சர்களுக்கு தொடர்பு இருப்பதாக ஸ்வப்னா சுரேஷ் கூறிய வாக்குமூலம் போன்ற செய்திகளைத் தொடர்ந்து, தற்போது வேறொரு பிரச்சனையும் வெளியாகியுள்ளது. ஏழைகளுக்கு வீடு கட்டிக் கொடுக்கும் லைப் மிஷன் திட்டத்தின் கீழ், கேரளாவில் வடக்காஞ்சேரியில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் கான்ட்ராக்டை பெற்ற ஒரு தனியார் நிறுவனம், ஸ்வப்னா சுரேஷுக்கு ரூ.1.13 லட்சம் மதிப்புள்ள ஐந்து ஐ-போன்களை வாங்கிக் கொடுத்துள்ளது. இதில் ஒரு ஐ-போனை கொடியேறி பாலகிருஷ்ணனின் மனைவி வினோதினி பயன்படுத்துகிறார் என தகவல் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக, வினோதினிக்கு சுங்க இலாகா நோட்டீசும் அனுப்பி உள்ளது.