கருத்தைத் திரும்பப்பெற மாட்டேன்

ப்ளூ கிராப் டிஜிட்டல் பவுண்டேசன் நிறுவனம் மூலம் ‘மோடியும் அம்பேத்கரும்’ என்ற புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு இசையமைப்பாளர் இளையராஜா முன்னுரை எழுதியுள்ளார். அதில், உலகத் தரத்துடன் அமைக்கப்பட்டுள்ள நமது நாட்டில் சாலைகள், ரயில் போக்குவரத்து, மெட்ரோ ரயில் திட்டங்கள், பெண் குழந்தைகளை பாதுகாப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்’ திட்டம், முத்தலாக் சட்டம் போன்ற பிரதமர் மோடி அரசின் பல்வேறு சாதனைகளை புகழ்ந்துள்ள இளையராஜா, மோடியின் ஆட்சியின் செயல்பாடுகளை கண்டு அம்பேத்கரே பெருமைப்படுவார் என கூறினார்.

இதனால், எங்கே தங்களது ஓட்டு வங்கியில் ஓட்டை விழுந்துவிடுமோ என அஞ்சிய திராவிட கட்சியினர், அதனை நம்பி  வாழும் சிறிய கட்சியினர், திரைத்துறையினர் என பலரும் இளையராஜாவின் கருத்துக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரன் இதுகுறித்து நியூஸ் 18 தமிழ் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், இளையராஜாவை இதுகுறித்துக் கேட்டபோது, ‘அது என்னுடைய சொந்தக் கருத்து. அதே சமயம் என்னுடைய கருத்துப் பற்றி மற்றவர்கள் சொல்லும் கருத்தை நான் விமர்சிக்க மாட்டேன். பிரதமர் மோடி பற்றிய அந்த புத்தகத்தை நான் முழுமையாக படித்தேன். அதன் பின்புதான், நான் என் கருத்தை தெரிவித்தேன். மோடியின் பல திட்டங்களை மறைத்துவிட்டால் அவை மறைந்துவிடுமா? இதை நான் அரசியலாக்க விரும்பவில்லை.

நான் எந்த கட்சியையும் சேராதவன். மோடிக்கு ஓட்டு போடுங்கள் என்று சொல்லவும் மாட்டேன்; ஓட்டு போடாதீர்கள் என்றும் பிரச்சாரம் செய்யவும் மாட்டேன். நான் படத்திற்கு போட்ட ட்யூனை திரும்ப பெற மாட்டேன். அதேபோல்தான் நான் சொன்ன கருத்தும். அதை திரும்ப பெற வேண்டிய அவசியம் கிடையாது. உண்மையை சொல்ல நான் தயங்க மாட்டேன். என்னுடைய கருத்தை நான் தெரிவிப்பேன். அதை என்னுடைய கருத்தாக மட்டும் பாருங்கள். புத்தகத்திற்கு விமர்சனம் கேட்டார்கள். சொன்னேன். அவ்வளவுதான்’ என கூறியதாக கங்கை அமரன் தெரிவித்தார்.