அரசின் காதுகளை எட்டாத கோரிக்கை: குறு, சிறு தொழில் துறையினர் கவலை

 

பல்வேறு போராட்டங்களுக்கு பின்னும், தமிழக அரசு செவி சாய்க்காமல் இருப்பது, குறு, சிறு தொழில் துறையினரை கவலையில் ஆழ்த்தி உள்ளது. தமிழக அரசு உயர்த்திய மின் கட்டணங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, தமிழ்நாடு தொழில் துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பினர் தொடர்ச்சியான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும், தமிழக அரசு செவி சாய்க்கவில்லை என்பது தொழில் துறையினரின் கவலையாக உள்ளது.

இது குறித்து, கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் கோவிந்தராஜ் கூறியதாவது: தொழில் துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பில், தமிழகம் முழுதும் உள்ள, 170க்கும் அதிகமான குறு, சிறு தொழில் நிறுவனங்கள் இணைந்துள்ளன. மின் கட்டண உயர்வுக்கு எதிராக, இவ்வளவு தொழில் நிறுவனங்கள் இணைந்துள்ளது இதுவே முதன் முறை. உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியும், இ- மெயில் மற்றும் தபால் அனுப்பும் போராட்டத்துக்கு பின்னரும், தமிழக அரசு செவி சாய்க்காமல் உள்ளது, வேதனை அளிக்கிறது. புதிதாக கொண்டு வரப்பட்ட, 400 மடங்கு உயர்த்திய நிலை கட்டணம், ‘பீக் ஹவர்’ கட்டணம் மற்றும் சோலார் கட்டணம் ஆகியவற்றை திரும்பப் பெற வேண்டும்.

மின் கட்டண உயர்வால், ஜவுளி உற்பத்தி தொழில் தான் அதிகம் பாதிக்கப்படுகிறது. இத்தொழிலில், 24 மணி நேரமும் மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது. ஜவுளி உற்பத்தியானது, இதற்கேற்ப உற்பத்தி செலவு இருந்தால் மட்டுமே இது சாத்தியம். உயர்த்திய மின் கட்டணங்களால், 40 சதவீதம் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால், ஆர்டர்கள் கை நழுவுகின்றன. கொரோனா பாதிப்பு, உக்ரைன் – ரஷ்யா போர் ஆகியவற்றாலும் பெரும் பாதிப்புகளை ஜவுளி தொழில் சந்தித்தது. தற்போது, மின் கட்டணத்தால் கூடுதல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதர நாடுகளுடன் ஜவுளி தொழிலில் போட்டி போட வேண்டும் என்றால், மறைமுக கட்டணங்களை தமிழக அரசு திரும்ப பெற்றால் மட்டுமே முடியும். 25ம் தேதி நடைபெற உள்ள வேலை நிறுத்த போராட்டம், அரசின் கவனத்தை ஈர்க்கும். இவ்வாறு அவர் கூறினார்.