ராஷ்ட்ரீய ரக் ஷக் பல்கலையுடன் சி.ஐ.எஸ்.எஸ்., குழுமம் ஒப்பந்தம்

நாட்டின் தனியார், பெருநிறுவனங்கள் மற்றும் தொழில் துறைகளின் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில், ஆராய்ச்சி, பயிற்சி மற்றும் திறன் வளர்ப்பை மேம்படுத்துவதற்காக, ராஷ்ட்ரீய ரக் ஷக் பல்கலைக்கழகம் – சி.ஐ.எஸ்.எஸ்., குழும நிறுவனங்களுடன் இணைந்து பயிற்சி வகுப்புகளை நடத்துவதற்காகன புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. ராணுவத்தில் இணைந்து நாட்டுக்கு சேவை செய்ய விரும்பும் இளைஞர்களை உருவாக்குவதில், முதன்மையான கல்வி நிறுவனமாக ராஷ்ட்ரீய ரக் ஷக் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த பல்கலை., குஜராத் மாநிலத்தில் அமைந்து உள்ளது.

இந்த நிறுவனம், தனியார் பெருநிறுவனங்கள் மற்றும் தொழில் துறை நிறுவனங்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் பயிற்சிக்காக, சி.ஐ.எஸ்.எஸ்., குழுமத்துடன் கைகோர்த்து உள்ளது. தனியார் நிறுவனங்களின் பாதுகாப்பு அம்சம் தொடர்பான துறையில் பல ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த சி.ஐ.எஸ்.எஸ்., குழுமம், பாதுகாப்பு தொடர்பான பல்வேறு தீர்வுகளையும், சேவைகளையும் தனியார் நிறுவனங்களுக்கு அளித்து வருகிறது.

இந்த நிறுவனத்தின் மனித திறன் மேம்பாட்டு பிரிவுக்கும், ராஷ்ட்ரீய ரக் ஷக் பல்கலைக்கும் இடையே பயிற்சி அளிப்பதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இது குறித்து இருதரப்பும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கை:

நம் நாட்டின் பொருளாதாரம் மற்றும் தொழில்துறை சந்தித்து வரும் பாதுகாப்பு சவால்களை திறம்பட எதிர்கொள்ள, சிறப்பான ஆராய்ச்சி, பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான வகுப்புகள் நடத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. ராஷ்ட்ரீய ரக் ஷக் பல்கலையின் துணைவேந்தர் பேராசிரியர் பிமல் என்.படேல் வழிகாட்டுதலின்படி இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இதன்படி, தனியார் பெருநிறுனங்கள் மற்றும் தொழில் துறை நிறுவனங்களின் தற்போதைய பாதுகாப்பு தேவை மட்டுமின்றி எதிர்காலத்தில் எதிர்நோக்கும் சவால்களை திறம்பட கையாள்வதற்கான பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.