கோயில் நிலத்துக்கு போலி பட்டா

திருப்பூர், பல்லடம் அருகே காளிவேலம்பட்டியில் 400 ஆண்டுகள் பழமையான கரிவரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு அருகில் உள்ள கிராமங்களான காளிவேலம்பட்டியில் 3.5 ஏக்கர் நிலமும் சுக்கம்பாளையத்தில் 6.5 ஏக்கர் நிலமும் சொந்தமாக உள்ளது. இவை இந்த கோயிலுக்கான சொத்துதான் என்பதற்கான முதன்மை ஆவணங்கள் உள்ளன. எனினும் கோயில் நிலத்தின் சிட்டாவில் சிலர் தங்களின் பெயரை சட்டவிரோதமாக இணைத்து பட்டா பெற முயற்சி செய்கின்றனர். ஆக்கிரமிப்பாளர்கள் கோயில் நிலத்தில் வேலி அமைத்து மின் இணைப்பு பெற்றுள்ளனர். பொதுமக்கள் முயற்சியால், அரசு தற்போது மின் இணைப்பைத் துண்டித்துள்ளது. இக்கோயிலின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 20 கோடி இருக்கலாம். கோயிலுக்கு தானமாக அளிக்கப்பட்டுள்ள நிலங்களின் விவரங்களை வருவாய் துறை அதிகாரிகள் வழங்காமல் இழுத்தடிக்கின்றனர். இதனால் கோயில் சொத்துக்கள் தொடர்பான முழு விவரங்களை தங்களால் சேகரிக்க முடியவில்லை என்று மக்கள் தெரிவிக்கின்றனர்.