வெடிபொருள் கண்டறியும் சாதனம்

பாரத அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் தன்னாட்சி நிறுவனமான கௌஹாத்தியில் உள்ள அறிவியல் தொழில்நுட்ப மேம்பாட்டு ஆய்வு நிறுவனத்தைச் சேர்ந்த டாக்டர் நீலோத்பால் சென் சர்மா தலைமையிலான விஞ்ஞானிகள் குழு வெடிபொருட்களை விரைவாகக் கண்டறியும் மின்னணு பாலிமர் அடிப்படையிலான சென்சார் கருவியை உருவாக்கியுள்ளனர். வெடிபொருட்களை அழிக்காமல் கண்டறிவது, குற்றவியல் விசாரணைகள், கண்ணி வெடிகள் அகற்றம் உள்ளிட்ட பல ராணுவம், காவல்துறை உள்ளிட்ட பாதுகாப்புத்துறைகள் தொடர்பான பயன்பாடுகளுக்கு அவசியம்.

இருப்பினும், நைட்ரோ அரோமாடிக் ரசாயனங்களை அழிக்காமல், வெடிக்க வைக்காமல் கண்டறிதல் கடினம். இதனால் பயங்கரவாதிகள் வைத்திருக்கும் இதுபோன்ற வெடிபொருட்களைக் கண்டறிவது சிரமம். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் வேதியியல் சென்சார்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதனை கருத்தில் கொண்டு நட்த்தப்பட்ட ஆராய்ச்சியில், மிகக் குறைந்த விலையில், சாதாரண அறை வெப்ப நிலையில் வேகமாகவும் துல்லியமாகவும் இயங்கும் இந்த சென்சார்களை நமது விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.