எடுத்துக்காட்டாகும் எஃகு நிறுவனங்கள்

கொரோனா தாக்கம் அதிகமுள்ள நோயாளிகளுக்குத் தேவையான ஆக்ஸிஜனை தங்கள் நிறுவனத்தில் இருந்து வழங்குவதாக சில நாட்களுக்கு முன் ரிலையன்ஸ் அறிவித்திருந்தது.

இந்நிலையில், தங்கள் நிறுவனங்களில் இருந்தும் ஆக்ஸிஜன் வழங்குவதாக பல முன்னணி இரும்பு தயாரிப்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. அதன்படி, டாடா ஸ்டீல்ஸ் தினசரி 200 முதல் 300 டன் திரவ மருத்துவ ஆக்ஸிஜனை வழங்குவதாக தெரிவித்துள்ளது. சஜ்ஜன் ஜிண்டால் தலைமையிலான ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல், மகாராஷ்டிராவில் உள்ள டோல்வி ஆலையில் இருந்து தினமும் 185 டன் ஆக்ஸிஜனை மாநில அரசுக்கு ஏற்கனவே வழங்கி வருகிறது. ஜிண்டால் ஸ்டீல் & பவர் நிறுவனம், சத்தீஸ்கர் மற்றும் ஒரிசாவில் உள்ள மருத்துவமனைகளுக்கு 50 முதல்100 மெட்ரிக் டன் ஆக்ஸிஜனை வழங்குவதற்காக முயற்சிகளை எடுத்து வருகிறது. ஆர்சலர் மிட்டல் நிப்பான் ஸ்டீல் தினசரி 200 மெட்ரிக் திரவ ஆக்ஸிஜனை வழங்க சம்மதம் தெரிவித்துள்ளது.

பொதுத்துறை நிறுவனமான செய்ல், தன்னுடைய ஜார்கண்டில் உள்ள போகாரோ, சத்தீஸ்கரில் பிலாய், ஒடிசாவின் ரூர்கேலா, மேற்கு வங்காளத்தின் பர்க்பூர் ஆகிய இடங்களில் உள்ள ஆலைகளில் இருந்து 99.7 சதவீத தூய்மையான 33,300 டன் ஆக்ஸிஜனை இதுவரை வழங்கியுள்ளது. கொரோனா தொற்றுநோயின் தொடக்கத்திலிருந்து, எஃகு ஆலைகள் இதுவரை 130,000 டன்களுக்கும் அதிகமான மருத்துவ ஆக்ஸிஜனை வழங்கியதாக எஃகு அமைச்சகம் தெரிவித்துள்ளதுடன், தொழில்துறையினரின் இந்த மனிதாபிமான முயற்சிகளையும் பாராட்டியுள்ளது.

இந்நிலையில், ‘நாடு முழுவதும் மருத்துவ திரவ ஆக்சிஜன் மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர்களை எடுத்துச் செல்ல ‘ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ்’ ரயிலை ரயில்வே நிர்வாகம் இயக்க உள்ளது. முதல் கட்டமாக மஹாராஷ்டிராவுக்கு நேற்று மருத்துவ திரவ ஆக்சிஜன் டேங்கர்கள் எடுத்துச் செல்லப்பட்டன. சில நாட்களில் நாடு முழுவதும் ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படும்’ என ரயில்வே தெரிவித்துள்ளது.